Published:Updated:

பிசிசிஐ-யின் கோரிக்கையை நிராகரித்த ஷமி -`அது எனது தனிப்பட்ட முடிவு’ என கருத்து!

பிசிசிஐ-யின் கோரிக்கையை நிராகரித்த ஷமி -`அது எனது தனிப்பட்ட முடிவு’ என கருத்து!
பிசிசிஐ-யின் கோரிக்கையை நிராகரித்த ஷமி -`அது எனது தனிப்பட்ட முடிவு’ என கருத்து!

பிசிசிஐ வைத்த கோரிக்கையை நிராகரித்த முகமது ஷமி, நேற்றைய ரஞ்சி டிராபிக் போட்டியில், 26 ஓவர்கள் வீசினார். 

File Photo

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, இந்த ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இவர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகத் தொடங்கவுள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார். ஷமி, தற்போது ரஞ்சி டிராபி தொடரில் பெங்கால் அணிக்காக கேரள அணிக்கு எதிராக விளையாடிவருகிறார். 

இந்நிலையில், ஆஸ்திரேலியத் தொடருக்குத் தயாராகும் விதமாக, ஷமி ஒரு இன்னிங்ஸில் 15 ஓவர்கள் வீசினால் போதும், என பெங்கால் கிரிக்கெட் நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தது பிசிசிஐ. தேவைப்பட்டால் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் கூடுதலாக வீசலாம் எனவும் தெரிவித்தது. இது, அவருக்கான பணிச் சுமையையும், காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கும் என்று பிசிசிஐ நம்பியது.  இது தொடர்பாக கருத்து தெரிவித்த பெங்கால் அணியின் கேப்டன் மனோஜ் திவாரி, ``நாட்டுக்காக விளையாடுவதுதான் முக்கியம். பிசிசிஐ-யின் கோரிக்கை கட்டாயமாக பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்தார். 

 நேற்று நடந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில், கேரள அணிக்கு எதிராக ஷமி 26 ஓவர்கள் வீசினார். அந்த அணியின் அசோக் டிண்டா 19 ஓவர்கள், போரெல் 18 ஓவர்கள் மற்றும் முகேஷ் 14 ஓவர்கள் விச, ஷமி மட்டும் 26 ஓவர்கள் வீசியது ஏன் என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்துக்குப் பின்னர் பேசிய ஷமி,  ``ஒரு அணிக்காக விளையாடும்போது, அதுவும் சொந்த மாநில அணிக்காக விளையாடும்போது, நமது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும். போட்டியில் நான் சோர்வடையவில்லை. எந்த அசொளகரியமும் உணரவில்லை. அதனால், கூடுதல் ஓவர்கள் வீசும் முடிவை நானே எடுத்தேன். ஏதோ ஒரு பயிற்சி மையத்தில் ஓவர்களை வீசுவதைவிட, ஒரு போட்டியில் வீசுவது கூடுதல் அனுபவத்தைத் தரும். நிச்சயம் அது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் உதவும். போட்டியில் பந்துவீசுவதே அனைத்தையும்விட சிறந்த பயிற்சியாக எடுத்துக்கொள்வேன். அதுவும், சொந்த ஊரில் அதிக நேரம் பந்துவீசுவது நல்ல அனுபவம்” என்றார். 

இது தொடர்பாகப் பேசிய பெங்கால் அணியின் பயிற்சியாளர்,  ``அவர் தொடர்ந்து பந்துவீச விரும்பினார். ஷமி மீது யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது” என்றார்.