Published:Updated:

`தினேஷ் கார்த்திக் - பன்ட் ஜோடி வெற்றி தேடித்தரும் என்றே நம்பினோம்... ஆனால்!’ - கோலி

`தினேஷ் கார்த்திக் - பன்ட் ஜோடி வெற்றி தேடித்தரும் என்றே நம்பினோம்... ஆனால்!’ - கோலி
`தினேஷ் கார்த்திக் - பன்ட் ஜோடி வெற்றி தேடித்தரும் என்றே நம்பினோம்... ஆனால்!’ - கோலி

இந்திய அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி ஃபீல்டிங் தேர்வு செய்யவே, முதலாவதாக பேட் செய்யக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 16.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி 17 ஓவர்கள் கொண்டதாகக் குறைக்கப்பட்டது. 17 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்தபோதும், இந்திய அணியின் வெற்றி இலக்கு டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 174 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்கள் முடிவில் 169 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 

போட்டிக்குப் பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ``இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக இருந்த போட்டி இது. ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் விருந்தாக அமைந்திருந்தது. தொடக்க ஓவர்களில் சிறப்பாக பேட் செய்திருப்பினும், மிடில் ஓவர்களில் சொதப்பியதால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். கடைசி ஓவர்களில் தினேஷ் கார்த்திக் - பன்ட் ஜோடி வெற்றியைப் பெற்றுத்தரும் என்றே நம்பினோம். ஆனால், பன்ட் ஆட்டமிழந்தது திருப்புமுனையாக அமைந்தது’’ என்றார். தினேஷ் கார்த்திக் - பன்ட் ஜோடி 3.5 ஓவர்களில் 51 ரன்கள் குவித்தது. 

ஷிகர் தவானைப் பாராட்டிய கோலி, ``தொடக்க வீரர் தவான், சிறந்த பங்களிப்பைக் கொடுத்தார். சர்வதேச டி20 போட்டிகளில் அவர் இதுவரை சதம் அடித்ததில்லை. ஆனால், அவர் விளையாடும் விதம் அணிக்கு பலன் அளிக்கிறது’’ என்றார். அடுத்த இரண்டு போட்டிகள் அடுத்தடுத்து இருப்பது இந்த தோல்வி குறித்து அதிக காலம் சிந்திக்காமல் இருக்க அணிக்கு உதவும் என்றும் கோலி குறிப்பிட்டார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டி வரும் 23-ம் தேதியும், மூன்றாவது போட்டி 25-ம் தேதியும் நடக்கிறது.