Published:Updated:

ஆஸி. தொடரை வெற்றியுடன் தொடங்குமா இந்தியா? - முதல் டி20 போட்டியில் 174 ரன்கள் இலக்கு

ஆஸி. தொடரை வெற்றியுடன் தொடங்குமா இந்தியா? - முதல் டி20 போட்டியில் 174 ரன்கள் இலக்கு
ஆஸி. தொடரை வெற்றியுடன் தொடங்குமா இந்தியா? - முதல் டி20 போட்டியில் 174 ரன்கள் இலக்கு

இந்திய அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்தது. டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 17 ஓவர்களில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

Photo: ICC 

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸை ஷார்ட் மற்றும் கேப்டன் பின்ச் ஆகியோர் தொடங்கினர். இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. தொடக்கவீரர் ஷார்ட், 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கலீல் அஹமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் பின்ச் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் 4 சிக்ஸர்கள் விளாசி அதிரடி காட்டிய கிறிஸ் லின், 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலிய அணி, 10.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து, 4வது விக்கெட்டுக்குக் கைகோத்த மேக்ஸ்வெல் - ஸ்டாய்னிக்ஸ் ஜோடி ஆஸ்திரேலிய அணியின் ரன் வேகத்தை அதிகப்படுத்தியது. இந்த ஜோடியின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சி பலிக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி, 16.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

மழையால் பாதிக்கப்பட்டதால், இரு அணிகளுக்கும் தலா 3 ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி 17 ஓவர்கள் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டது. 17வது ஓவரில் மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தார். அவர் 24 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். மேக்ஸ்வெல் - ஸ்டாய்னிக்ஸ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் குவித்தது. நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்தது. டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 17 ஓவர்களில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.