Published:Updated:

'விராட் கோலியை இப்படி ஹேண்டில் பண்ணுங்க...!' -ஆஸி-க்கு டூப்ளசிஸ் அட்வைஸ்

'விராட் கோலியை இப்படி ஹேண்டில் பண்ணுங்க...!' -ஆஸி-க்கு டூப்ளசிஸ் அட்வைஸ்
'விராட் கோலியை இப்படி ஹேண்டில் பண்ணுங்க...!' -ஆஸி-க்கு டூப்ளசிஸ் அட்வைஸ்

இந்திய அணிக்கு எதிராக விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணிக்குத் தென்னாப்பிரிக்கா கேப்டன் டூப்ளசிஸ் சில அட்வைஸ்களை வழங்கியுள்ளார். கோலிக்கு எதிராக அமைதியாகச் செயல்படுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. முதலில் நடைபெறவுள்ள டி20 தொடருக்கான இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது. இந்தியா ஆஸ்திரேலியா தொடர் என்றாலே அதில் எப்போதும் பரபரப்பு இருக்கும். ஆஸ்திரேலியா தற்போது கடினமான காலகட்டத்தில் இருந்தாலும், சொந்த நாட்டில் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடும் திறன் கொண்டவர்கள் தான். 

டி20, ஒருநாள் தொடர்களை விட டெஸ்ட் தொடர் மீது அனைவரது கவனமும் விழுந்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் போட்டியின் போது பல்வேறு யுத்திகளைக் கையாளுவார்கள். எதுவும், கைகூடாத பட்சத்தில், எதிரணியினருடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பார்கள். இது அவர்கள் காலம் காலமாகச் செய்யும் ஒன்றுதான். கடந்த ஆஸ்திரேலிய தொடரின்போது கூட அப்போதைய ஆஸ்திரேலியக் கேப்டன் ஸ்மித், களத்துக்கு வெளியே இருப்பவர்களிடம்  டி.ஆர்.எஸ் குறித்து சைகையில் ஆலோசனை கேட்க, கோலி கோபமானார். அந்தத் தொடர் குறித்துக் கோலி பேசும்போது, ஆஸ்திரேலியர்கள், இது மட்டுமல்ல, இது போன்று பல விஷயங்கள் செய்வார்கள். ஆஸ்திரேலிய வீரர்கள் சிலரிடம் நான் நட்பு வைத்துக்கொள்ளவே விரும்புவதில்லை என்று அதிரடியாகத் தெரிவித்தார். 

இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. வார்னர், ஸ்மித் போன்ற ஆக்ரோஷமான வீரர்கள் இல்லாததால், ஆஸ்திரேலிய அணி இந்தமுறை மோதலில் ஈடுபட வாய்ப்பு குறைவு என்கின்றனர். ஆஸ்திரேலிய கிளம்பும் முன் செய்தியாளர்களிடம் பேசிய கோலி,  ``நாங்களாக மோதலில் ஈடுபடமாட்டோம். ஆனால் அவர்களின் செயல்பாட்டினைப் பொறுத்து தான் இந்திய வீரர்கள் செயல்படுவார்கள். நாங்கள் எப்போது திருப்பி கொடுக்கும் இடத்தல் தான் இருப்போம். நாங்கள் ஒருபோதும் தொடங்க மாட்டோம். எங்களைப் பொறுத்தவரையில், போட்டி உணர்வுடனும் கவனம் சிதறாமலும் விளையாட வேண்டும்” என்றார். 

இந்நிலையில் இந்திய ஆஸ்திரேலியா தொடர் குறித்தப் பேசிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூப்ளசிஸ்,  ``விராட் கோலியுடன் மோதுவதை ஆஸ்திரேலிய வீரர்கள் தவிர்க்க வேண்டும். அவருக்கு எதிராக அமைதியாக இருப்பது தான் நல்லது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மோதல்களை அனுபவித்து ஆடும் வீரர்கள் சிலர் இருக்கிறார்கள். கோலியும் அப்படிப்பட்டவர்தான். கோலி ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். கடந்தமுறை அவர் தென்னாப்பிரிக்கா வந்தபோது அமைதியைக் கடைப்பிடித்தோம். இருந்தபோதும் அவர் சிறப்பாக விளையாடினார். ஆனால் ஒரு சதம் தான் அடித்தார். அவருடன் மோதல் போக்கை கடைப்பிடித்திருந்தால், அவர் இன்னும் சிறப்பாக விளையாடி இருப்பார் என்று தான் சொல்லுவேன். சில வீரர்களுக்கு எதிராகக் களமிறங்கும்போது ஒரு அணியாக சில முடிவுகள் எடுப்பது நல்லது. கோலிக்கு எதிராக விளையாடும் போது, அவருடன் யாரும் எதுவும் பேச வேண்டாம். பின்னர் அவரை ஆட்டமிழக்கவைப்பது சிரமம் என்று களமிறங்கினோம் நாங்கள் அவருக்கு  `சைலண்ட் ட்ரீட்மெண்ட்’ கொடுத்தோம்” என்றார்.