Published:Updated:

`என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை மீட்டுக்கொடுத்தவர் சேவாக்!' - கண்கலங்கிய இளம்வீரர்

`என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை மீட்டுக்கொடுத்தவர் சேவாக்!' - கண்கலங்கிய இளம்வீரர்
`என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை மீட்டுக்கொடுத்தவர் சேவாக்!' - கண்கலங்கிய இளம்வீரர்

இளம் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு வீரேந்திர சேவாக் உதவி செய்துள்ள சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது. 

பிரபல கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபரின் உறவினர் அர்மான் ஜாபர். இளம் கிரிக்கெட் வீரரான இவர், தனது சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடிவருகிறார். 13 வயதுக்குள்ளோருக்கான கைல்ஸ் ஷீல்டு போட்டியில், அர்மான் ஜாபர் 498 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். தொடர்ந்து, வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தொடர்ச்சியாக மூன்று முச்சதம் விளாசினார். இதன் பயனாக, 19 வயதுடையோருக்கான உலகக்கோப்பை, ஐபிஎல் போன்ற தொடர்களிலும் இடம்பிடித்தார். இதற்கிடையே, நேற்று நடந்த சி.கே.நாயுடு ட்ராபி தொடரில் முச்சதம் விளாசியுள்ளார் அர்மான் ஜாபர். இந்த முச்சதத்தை இந்தியாவின் அதிரடி நாயகன் வீரேந்திர சேவாக்குக்கு அர்ப்பணிப்பதாகக் கூறியுள்ள அர்மான் ஜாபர், அதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர் , ``23 வயது உடையோருக்கான போட்டியின்போது, முழங்காலில் காயம் ஏற்பட்டு விளையாடாமல் இருந்துவந்தேன். அப்போது மும்பை ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியின்போது சேவாக் அண்ணனைச் சந்தித்தேன். அப்போது, எனது உடல்நிலைகுறித்துக் கேட்டார். முழங்கால் காயத்தால் 14 மாதங்களாக அவதிப்படுவதைத் தெரிவித்தேன். உடனே, `ஏன் இங்கு இருக்கிறாய். பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்' எனக் கூறி, என் கண் முன்னே தேசிய கிரிக்கெட் அகாடமிக்கும், மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கும் போன் செய்து, எனது நிலையை எடுத்துக் கூறி, கிரிக்கெட் அகாடமியில் சேருவதற்கு உதவிபுரிந்தார். இதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. சேவாக்கை சந்திக்கும் முன்பு வரை, காயத்தால் என் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்றே எண்ணினேன்.

photo credit :FB/Kings XI Punjab

அவர் என்மீது காட்டிய அக்கறை என்னை வாயடைக்கச்செய்தது. இது, அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. நான் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்த பிறகும்கூட என்னைத் தொடர்புகொண்டு விசாரித்தார். கிரிக்கெட் அகாடமியிடம் பேசி, எனக்கு சிறப்புப் பயிற்சிகளை அளிக்க உதவினார். 14 மாதங்களாகக் காயத்தால் அவதிப்பட்ட என்னைப் பற்றி யாரும் சிந்திக்காதபோது, எனக்காக முயற்சி எடுத்து என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை மீட்டுக் கொடுத்திருக்கிறார் சேவாக். என் வாழ்நாள் முழுவதும் அவருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவருக்கு இந்த முச்சதத்தையும், நன்றியையும் தவிர வேறு எதையும் அர்ப்பணிக்க முடியாது" என உருக்கமாகக் கூறியுள்ளார்.

இதற்கிடையே, நேற்று நடந்த சி.கே.நாயுடு டெஸ்ட் போட்டியில், சேவாக்கைப் போன்றே அதிரடியாக விளையாடி முச்சதம் அடித்துள்ளார் அர்மான். மொத்தம் 367 பந்துகளைச் சந்தித்த அர்மான், 26 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களை விளாசி பௌலர்களைக் கலங்கடித்துள்ளார் இந்த 20 வயது வீரர்.