Published:Updated:

ஐ.பி.எல் டிரேட் விண்டோ... அணிகளின் ஸ்மார்ட் மூவ்... ப்ளஸ், மைனஸ் அலசல்! #IPL

ஐ.பி.எல் டிரேட் விண்டோ... அணிகளின் ஸ்மார்ட் மூவ்... ப்ளஸ், மைனஸ் அலசல்! #IPL
ஐ.பி.எல் டிரேட் விண்டோ... அணிகளின் ஸ்மார்ட் மூவ்... ப்ளஸ், மைனஸ் அலசல்! #IPL

அடுத்த ஆண்டு உலகக்கோப்பை நடக்க இருப்பதால் ஐ.பி.எல் போட்டிகளை விரைவாக நடத்தி முடிக்க ஐ.பி.எல் (#IPL) கமிட்டி முடிவு செய்துள்ளது. அதற்கான ஏலம் டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் ஜெய்ப்பூரில் நடக்கிறது. ஏலத்துக்கு முன் `ட்ரேட் விண்டோ’ (Trade Window) நடந்தது. இந்த முறையின் மூலம் ஒவ்வோர் அணியும் தங்கள் அணியில் உள்ள வீரர்களை விடுவிக்கலாம் அல்லது தக்கவைக்கலாம், தேவைபட்டால் மற்ற அணியிலிருந்து வீரர்களை வாங்கிக் கொள்ளலாம்.

எட்டு அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கட்டா நைட் ரைடர்ஸ் ஆகிய மூன்று அணிகள், வீரர்கள் யாரையும் புதிதாக வாங்கவில்லை. மும்பை இந்தியன்ஸ் உட்பட மீதமிருக்கும் ஐந்து அணிகள் ட்ரேட் விண்டோ மூலம் வீரர்களை தங்களுக்குள் மாற்றிக் கொண்டன.

புதிதாகச் சேர்க்கப்பட்ட வீரர்கள்: 

தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் டி காக் ஆர்.சி.பி-யிலிருந்து 2.8 கோடிக்கு மும்பை அணியால் வாங்கப்பட்டுள்ளார். பலமான பேட்டிங் வரிசை இருந்தும் ஒருமுறை கூட கோப்பை வெல்லாத ஆர்.சி.பி இந்தமுறை, ஆஸ்திரேலியாவின் மார்க்கஸ் ஸ்டாய்னிஸை பஞ்சாப் அணியிடமிருந்து 6.2 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. அவருக்குப் பதிலாக பஞ்சாப் அணிக்கு 1.4 கோடி ரூபாய்க்கு மன்தீப் சிங்கை கொடுத்துள்ளது. பேட்டிங் படை இருந்தும் பவுலிங்கில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லாத பெங்களூருவுக்கு பேட்டிங் மட்டுமன்றி பவுலிங்கிலும் கலக்கி வரும் மார்க்கஸின் வருகை புது நம்பிக்கை அளிக்கும். 

2016 ஐ.பி.எல் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், முன்னணி வீரர் ஷிகர் தவானைக் கொடுத்து விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, ஷபாஸ் நதீம் என்ற மூன்று இளம் வீரர்களை வாங்கியுள்ளது. பல முக்கிய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இடத்தை இந்த `ஜுனியர்கள்’ நிரப்புவார்களா என்பது கேள்விக்குறிதான். 

அஷ்வின் தலைமையில் ஆரம்பத்தில் அசத்தி பின்னர் சொதப்பிய பஞ்சாப், இந்தமுறை மன்தீப் சிங்கை பெங்களூரு அணியிலிருந்து வாங்கியுள்ளது‌. ஏலத்திலாவது சிறந்த வீரர்களை வாங்கினால் மட்டுமே மாற்றம் ஏற்படலாம். ஷிகர் தவானை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது டெல்லி. ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட், ப்ரித்வி ஷா என இந்திய அணியின் இளம் வீரர்களையும் காலின் முன்ரோ, அமித் மிஸ்ரா, ட்ரென்ட் போல்ட் உள்ளிட்டவர்களையும் தக்கவைத்துள்ளது‌.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: 

புதிதாக யாரையும் சென்னை அணி சேர்க்கவில்லை. மோசமான ஃபார்ம் மற்றும் கடந்த சீசனில் சோபிக்காத கனிஷ்க் சேத், இங்கிலாந்து வீரர் மார்க் உட் ஆகியோரை விடுவித்துள்ளது. மற்றபடி வழக்கம்போல தோனி, ரெய்னா, டூ ப்ளெஸ்ஸிஸ், ஜடேஜா, வாட்சன், விஜய் என அதே அணியை தக்கவைத்துக் கொண்டது.  

மும்பை அணியைப் பொறுத்தவரை முஸ்தஃபிர் ரஹ்மான், பேட் கம்மின்ஸ், அகிலா தனஞ்செயா, ஜே.பி.டுமினி, செளரப் திவாரி, ததின்ஜர் சிங், ஷரட் லும்பா போன்ற உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களை விடுவித்துள்ளது. இருப்பினும், கடந்த சில சீசன்களாகவே சோபிக்காத பொலார்டு, மெக்லஹேன் ஆகியோரையும் தக்கவைத்திருப்பது ஏன் என்பது புதிராகவே உள்ளது.

பெங்களூரு அணியிலிருந்து பிரெண்டன் மெக்கலம், கோரி ஆண்டர்சன், டி காக், கிறிஸ் வோக்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்களை விடுவித்ததற்கு ஃபார்ம் இல்லாமை, அதிக வயது எனப் பலதரப்பட்ட காரணங்கள் இருப்பினும், அணியில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகக் கூட இருக்கலாம். இதில் டி காக்கை மும்பை வாங்கிய நிலையில், அதிரடி ஆட்டக்காரர் மெக்கலத்தை மீண்டும் அணியில் எடுப்பதற்கு சென்னை ஏலத்தில் மும்முரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத் அணியோ அலெக்ஸ் ஹேல்ஸ், பிராத்வொயிட், ஜோர்டன், ரித்திமான் சாஹா போன்ற முக்கிய வீரர்களை விடுவித்து புதிய இளம் வீரர்களை களமிறக்கவுள்ளது. எனினும், ஓப்பனர் அலெக்ஸ் ஹேல்ஸ், பிராத்வொயிட், டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஜோர்டன் ஆகியோரின் இடத்தை இந்த இளம் வீரர்கள் நிரப்புவார்களா என்பது அணியின் நிர்வாகத்துக்கே வெளிச்சம்.
 
கொல்கத்தா அணி, 2018-ல் அதிக விலை கொடுத்து வாங்கிய மிட்சல் ஸ்டார்க், மிட்சல் ஜான்சன் உட்பட எட்டு வீரர்களை விடுவித்துள்ளது. 9.4 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஸ்டார்க் காயம் காரணமாக கடந்த சீசனில் விளையாடவில்லை, இந்த சீசனில் விளையாடினாலும் உலகக் கோப்பை நெருங்குவதால் பயிற்சி ஆட்டத்துக்குச் சென்று விடுவார் என்ற யோசனையில் அவரை விடுவித்துள்ளது. 

ஐ.பி.எல்-லின் முதல் சாம்பியனான ராஜஸ்தான் உனத்கட், அனுரீத் சிங், அங்கித் சர்மா, சக்சேனா, பென் லாஃபின்ஸ் போன்ற வீரர்களை விடுவித்துள்ளது. பஞ்சாப் அணி கடந்த ஆண்டு அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட அக்ஸர் படேல், ஆரோன் பின்ச், யுவராஜ் சிங், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் உள்ளிட்ட வீரர்களை விடுவித்தது. இதில் ஸ்டாய்னிஸை பெங்களூரு வாங்கிய நிலையில் யுவராஜ் சிங்கை ஏலத்தில் யார் வாங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  

டெல்லி அணியோ கம்பீர் வருகைக்குப் பிறகும் இந்த ஆண்டு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில்தான் இருந்தது . அதனால்தான் கம்பீர், மேக்ஸ்வெல், ஜேசன் ராய், முகமது ஷமி, நமன் ஓஜா, ப்ளங்கட் என சீனியர்களை விடுவித்து தவானை மட்டும் வாங்கியுள்ளது. இந்த அதிரடி மாற்றம் 2019-ல் டெல்லிக்கு விடிவு காலமாக இருக்கும் என நம்பலாம்.

உலகக்கோப்பைக்கு இன்றும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், `ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சி ஆட்டங்களுக்கு முன்னதாகவே செல்ல வேண்டும்’ என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்களை வாங்குவதற்கு பலரும் தயங்குகின்றனர். மிட்சல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், மேக்ஸ்வெல் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் அதிக தொகைக்குக் கேட்கப்படலாம் என்று ஒரு தரப்பு கூறினாலும், உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம் ஆஸ்திரேலிய வீரர்களுக்குச் சற்றுப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

அதேபோல, இங்கிலாந்து வீரர்களும் பயிற்சிக்குச் செல்ல இருப்பதனால் ஜேசன் ராய், ப்ளங்கட் போன்ற வீரர்களை வாங்குவதற்கு போட்டி இருக்காது. அதேசமயம், மேற்கிந்திய தீவுகள் அணியின் ப்ராத்வொயிட் நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன், பிரண்டன் மெக்கலம், பங்களாதேஷின் முஸ்தஃபிர் ரஹ்மான் ஆகியோருக்குக் கடும் போட்டி இருக்கும். 

ஏலம் கேட்க மீதமிருக்கும் தொகை

சென்னை சூப்பர் கிங்ஸ் 8.40 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 18.15 கோடி
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 9.70 கோடி
மும்பை இந்தியன்ஸ் 11.15 கோடி
டெல்லி டேர்டெவில்ஸ் 25.50 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 15.20 கோடி
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 36.20 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் 20.95 கோடி