Published:Updated:

`ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா’- உலகக்கோப்பை தாகத்தை தீர்க்குமா மகளிர் அணி

`ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா’- உலகக்கோப்பை தாகத்தை தீர்க்குமா மகளிர் அணி
`ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா’- உலகக்கோப்பை தாகத்தை தீர்க்குமா மகளிர் அணி

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் டி 20 உலகக்கோப்பையில், இந்திய மகளிர் அணி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. பிராவிடன்ஸ் மைதானத்தில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 7 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 சாம்பியன்ஷிப் அரை இறுதியில் விளையாட உள்ளது.

டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. போட்டி தொடங்கும் முன் மழை பெய்ததால், அயர்லாந்து இந்த முடிவை எடுத்தது. ஓப்பனிங்கில் களமிறங்கிய மித்தாலி ராஜ் நிதானமாக விளையாடி, அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 1 சிக்சர், 4 பவுண்டரிகள் உட்பட 56 பந்துகளில் அரை சதம் கடந்தார். டி20 போட்டிகளில், மித்தாலியின் 17-வது அரை சதம் இது. அதோடு, டி-20 போட்டிகளில் அதிக ரன்கள் (2,283) அடித்த இந்தியர் என்ற பெருமை பெற்றார். மந்தானா (33), ஜெமிமா (18) ஆகியோர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடிக்க, மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது இந்திய அணி.

இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே தோல்வியைத் தழுவிய அயர்லாந்து, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டும் என்று களமிறங்கியது. ஆனால், இந்திய பந்து வீச்சாளர்கள் தீப்தி ஷர்மா, 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளும்,  ராதா யாதவ், 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளும் வீழ்த்த, அயர்லாந்து அணி திணறியது. இந்திய அணி பந்துவீச்சை சமாளித்த ஷில்லிங்டன் (23), ஜாய்ஸ் (33) அயர்லாந்துக்கு ரன் சேர்த்தனர். இந்திய விக்கெட் கீப்பர் டானியா பாடியா அசத்தலாக மூன்று ஸ்டம்பிங் செய்தார். போட்டி முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் மட்டுமே எடுத்த அயர்லாந்து, தோல்வி அடைந்தது.  

ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, அயர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ள குரூப் பி பிரிவில், முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, அரை இறுதிக்கு முன்னேறியது.

அடுத்து நடக்க இருக்கும் போட்டியில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியுடன் இந்தியா மோத உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், குரூப் `பி' பிரிவில் இந்திய அணி முதலிடத்தைப் பிடிக்கும்.  2010-ம் ஆண்டு, டி 20 உலகக்கோப்பை அரை இறுதியில் தோல்வியடைந்த இந்திய அணி, இந்த ஆண்டு வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.