Published:Updated:

ஐ.பி.எல்: சன் ரைசர்சை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐ.பி.எல்: சன் ரைசர்சை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐ.பி.எல்: சன் ரைசர்சை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐ.பி.எல்: சன் ரைசர்சை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை: சென்னையில் நடந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத்  சன் ரைசர்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தி 6வது வெற்றியை ருசித்துள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடந்த 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேமரூன் ஒயிட் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்.

இதன்படி குயின்டான் டி காக்கும், ஷிகர் தவானும் இன்னிங்சை தொடங்கினர். குயின்டான் டி காக் 4 ரன்னில் வெளியேற அடுத்து வந்த ஹனுமா விஹாரி 2 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.  இதைத்தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் கேமரூன் ஒயிட்டும் (2) வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் ஹைதராபாத் அணி திணறியது. 4வது விக்கெட்டுக்கு தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவானுடன் ஜோடி சேர்ந்த அமித்மிஸ்ரா 21 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 15 ரன் எடுத்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆனார். இதையடுத்து சற்குணம் களம் இறங்கினார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் ஷிகர் தவான் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

##~~##
நிலைத்து நின்று ஆடிய ஷிகர் தவான், வெய்ன் பிராவோ வீசிய பந்தில் காயம் அடைந்து வெளியேறினார். பின்னர் வந்த டேரன் சேமி 19 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து காயத்தால் ஓய்வு பெற்ற ஷிகர்தவான் மீண்டும் களம் திரும்பினார். அவர் தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார். அவருடன் இணைந்த ஆஷிஷ் ரெட்டியும் அதிரடி காட்டினார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் 45 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 63 ரன்னும், ஆஷிஷ் ரெட்டி 16 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 36 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
பின்னர் 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹைதராபாத் அணியினர் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறினாலும், மைக் ஹஸ்ஸியின் சிறப்பான தொடக்கம் மற்றும் டோனியின் அதிரடி அணியை வெற்றி இலக்கை எட்ட வைத்தது.
19.4 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  கேப்டன் டோனி 37 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
8வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி பெற்ற 6வது வெற்றி இதுவாகும். ஹைதராபாத் அணி சந்தித்த 3வது தோல்வி இதுவாகும்.