Published:Updated:

ஒன்றா... இரண்டா... வெஸ்ட் இண்டீஸ் அணிக்குள் ஆயிரம் பிரச்னைகள்! #INDvWI

இனி கிரீம் ஸ்மித் போன்ற இளம் கேப்டனையெல்லாம் அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. முடிவு எடுப்பதில் மிகவும் பின்தங்கியிருக்கும் கேப்டன்களைக் கொண்டுள்ள இந்த அணிக்கு, ஒரு `ஜீனியஸ்' பயிற்சியாளர்தான் தேவை.

ஒன்றா... இரண்டா... வெஸ்ட் இண்டீஸ் அணிக்குள் ஆயிரம் பிரச்னைகள்! #INDvWI
ஒன்றா... இரண்டா... வெஸ்ட் இண்டீஸ் அணிக்குள் ஆயிரம் பிரச்னைகள்! #INDvWI

டி-20 தொடரில் வைட் வாஷ் ஆகிவிட்டது வெஸ்ட் இண்டீஸ். டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்று ஃபார்மட்களிலும் தொடரை இழந்துவிட்டது. விளையாடிய 10 போட்டிகளில் வெறும் ஒரே வெற்றி. இரண்டு போட்டிகள் தவிர்த்து மற்ற அனைத்துப் போட்டிகளிலும் கிட்டத்தட்ட சரண்டரே ஆகிவிட்டது. அவர்களின் தோல்விக்கு கிரிக்கெட் ரசிகர்களே பலவிதமான காரணங்களை யூகித்துக் கொள்கின்றனர். முன்னணி வீரர்கள் தேசிய அணியில் விளையாடுவதற்குப் பதில் டி-20 தொடர்களில் விளையாடுவதுதான் அந்த அணியின் தோல்விக்குக் காரணம் என்பதுதான் பலரின் வாதம். இன்னும் சிலர் `வெஸ்ட் இண்டீஸ் போர்ட் சரியில்லை' என்று பழைய புராணத்தையே பாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த இரண்டு காரணங்களையும் மட்டும் சொல்லி, இந்த அணியின் சொதப்பல்களைப் பூசி முழுகிட முடியாது. அவற்றைக் கடந்து இன்னும் சில பிரச்னைகள் இந்த அணிக்குள் இருக்கிறது. தேசிய அணியைப் புறக்கணிக்கும் சீனியர் வீரர்களைக் காரணம் காட்டி அவற்றை அந்தப் பிரச்னைகளைப் புறந்தள்ளிவிட முடியாது. 

ஒன்றா... இரண்டா... வெஸ்ட் இண்டீஸ் அணிக்குள் ஆயிரம் பிரச்னைகள்! #INDvWI

மூன்றாவது டி-20 போட்டியில் தோல்விக்குப் பின் பேசிய வெஸ்ட் இண்டீஸ் டி-20 அணியின் கேப்டன் கார்லோஸ் பிராத்வெயிட், ``திறமையான பல இளம் வீரர்கள் அணியில் இருக்கின்றனர். அவர்களைச் சரியாகக் கையாளவேண்டும். அவை சரியாகும்போது வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக் கோப்பை போன்ற தொடர்களில் சிறப்பாகச் செயல்படும்" என்றார். எது சரியாகவேண்டும் என்று பிராத்வெயிட் சொன்னாரோ, அதுதான் அந்த அணியின் மிகப்பெரிய பிரச்னையும்கூட - நிர்வகித்தல். இது கிரிக்கெட் சங்க நிர்வாக பிரச்னை அல்ல. டிரெஸ்ஸிங் ரூம் நிர்வாகம், கள நிர்வாகம். இவை இரண்டிலும் வெஸ்ட் இண்டீஸ் மிகவும் மோசமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதுதான் அந்த அணியின் தொடர் தோல்விகளுக்குக் காரணம். 

ஒன்றா... இரண்டா... வெஸ்ட் இண்டீஸ் அணிக்குள் ஆயிரம் பிரச்னைகள்! #INDvWI

நேற்று நடந்த மூன்றாவது டி-20 போட்டியில் டாஸ் வென்றதும், ``எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை" என்றார் கேப்டன் கார்லோஸ் பிராத்வெயிட். கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஏனெனில், இந்த இந்தியச் சுற்றுப்பயணத்தில் ஒரு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் முதல் முறையாக `Unchanged XI' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். இந்த 10 போட்டிகளில் மட்டும் மொத்தம் 27 வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விளையாடியுள்ளனர். அத்தனை மாற்றங்கள். ஒரு நிலையான திட்டமிடல் இல்லை. அணியை உருவாக்கவேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டம் இல்லை. ஸ்குவாடில் 15 வீரர்கள் இருக்கிறார்கள் என்பதற்காகத் தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டே இருந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. 

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பட்டையைக் கிளப்பிய இளம் வேகப்பந்துவீச்சாளர் ஒஷேன் தாமஸ் முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அந்த 21 வயது வீரனுக்கு முதலில் கொடுக்கப்பட்டது ஒரேயொரு வாய்ப்புதான். இரண்டாவது போட்டியில், இன்னொரு 21 வயது இளம் வீரர் ஓபட் மெக்காய் அறிமுகம் செய்யப்பட்டார். இரண்டு போட்டிகளில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தும், எகானமி அதிகம் என்றுகூறி 4-வது போட்டிக்கான அணியிலிருந்து அவரும் நீக்கப்பட்டார். அந்தப் போட்டியில் 20 வயது கீமோ பால், மெக்காய் இடத்தில் களமிறங்கினார். மற்றோர் அறிமுக வீரரான ஓப்பனிங் பேட்ஸ்மேன் சந்தர்பால் ஹேம்ராஜ், கடைசிப் போட்டிக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டு, மீண்டும் தாமஸ் களமிறங்கினார். இப்படி ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக வீரர்களை மாற்றிக்கொண்டே இருந்தது வெஸ்ட் இண்டீஸ். 

ஒன்றா... இரண்டா... வெஸ்ட் இண்டீஸ் அணிக்குள் ஆயிரம் பிரச்னைகள்! #INDvWI

எதிர்த்து விளையாடுவது இந்திய அணியை. ஒருநாள் போட்டிகளில் மிரட்டலான பேட்டிங் வரிசையைக் கொண்டிருக்கும் ஒரு அணியை, அதன் சொந்த மண்ணில் சந்திப்பது சாதாரண விஷயம் இல்லை. பெரிய அணியாக இருந்தாலும் தடுமாறத்தான் செய்யும். ரோஹித், தவான், கோலியைச் சமாளிக்க முடியாமல், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து பௌலர்களே தடுமாறியபோது, இந்த இளம் வெஸ்ட் இண்டீஸ் பௌலர்கள் தடுமாறுவதில் ஆச்சர்யமில்லை. அதுவும் 20, 21 வயதேயான, சர்வதேச அனுபவம் இல்லாத இளம் பந்துவீச்சாளர்கள். அவர்கள் நிச்சயம் தடுமாறத்தான் செய்வார்கள். அதுவும் கோலி, ரோஹித் இருவரும் `அடிச்சா செஞ்சுரிதான்' என்ற மோடில் ஆடும்போது எகானமி அதிகமாவது சகஜம்தான். அடுத்தடுத்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால்தான் அவர்களால் தவறுகளைத் திருத்திக்கொள்ளவும், அதன்பின் மிரட்டலாகப் பந்துவீசவும் முடியும். 

உதாரணமாக கலீல் அஹமதை எடுத்துக்கொள்வோம். புவி, பும்ரா தவிர்த்து இந்தியாவின் மற்ற வேகப்பந்துவீச்சாளர்கள் யார் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. உமேஷ், ஷமி யாரும் திருப்தியளிக்காத நிலையில், இந்த 20 வயது ராஜஸ்தான் வீரரை சோதித்துப் பார்க்க நினைத்தது பிசிசிஐ. கவுஹாத்தியில் நடந்த இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 64 ரன்கள் கொடுத்து ஒரே விக்கெட். மும்பையில் நடந்த 3-வது போட்டியில் 65/1. இடையில் இரண்டாவது போட்டியில் ஆடவில்லை. ஆனால், 4-வது போட்டிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 13 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட். ஐந்தாவது போட்டியில் 29/2. 

ஒன்றா... இரண்டா... வெஸ்ட் இண்டீஸ் அணிக்குள் ஆயிரம் பிரச்னைகள்! #INDvWI

ஆசியக் கோப்பையிலும், இந்தத் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் எந்த வேரியேஷனும் இல்லாமல், வெறும் ஸ்லோ ஆஃப் கட்டர்களை மட்டுமே வேரியேஷனாகக் கொண்டிருந்த கலீல், தன் கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் காட்டியது மிகப்பெரிய வித்தியாசம். அதுவரை அவர் செய்திடாத இன்ஸ்விங், அவுட்ஸ்விங் இரண்டையுமே மும்பை, திருவனந்தபுரம் போட்டிகளில் செயல்படுத்தினார். அதனால்தான் 42 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்த முடிந்தது. தொடர்ச்சியான வாய்ப்பால் ஏற்படும் மாற்றம் இதுதான்! வெஸ்ட் இண்டீஸ் அணியின் அணுகுமுறையில் இதெல்லாம் சாத்தியமே இல்லை. 

ஒருநாள் தொடரில் மட்டுமல்ல... முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஷெர்மான் லூயிஸ் ஓரளவு நன்றாக விளையாடியிருந்தும் (93/2), `கூடுதல் ஸ்பின்னரைக் களமிறக்குகிறோம்' என்ற காரணத்துக்காக இரண்டாவது டெஸ்ட்டில் வெளியே உட்காரவைக்கப்பட்டார். இந்தச் சுற்றுப்பயணத்தில் மட்டும் 5 வீரர்கள் தேசிய அணிக்கு அறிமுகமாகியுள்ள நிலையில், அதில் ஒருவர்கூட 6 போட்டிகளுக்கு மேல் விளையாடவில்லை. மூன்று ஃபார்மட்களில் 3 வெவ்வேறு கேப்டன்களைக் கண்டிருந்தாலும், அணித் தேர்வில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சொதப்பல் ஒரே மாதிரிதான் இருந்தது. 

ஒன்றா... இரண்டா... வெஸ்ட் இண்டீஸ் அணிக்குள் ஆயிரம் பிரச்னைகள்! #INDvWI

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒருநாள் அணியில் அறிமுகமான அல்ஸாரி ஜோசப், ரான்ஸ்ஃபோர்ட் பீடன், கெஸரிக் வில்லியம்ஸ், சுனில் அம்ப்ரிஸ் என யாருமே இன்னும் 10 போட்டிகளில்கூட விளையாடவில்லை. அவர்களுக்கான வாய்ப்புகள் இரண்டு, மூன்று போட்டிகளோடு முடிந்துவிட்டன. அதன்பின், இப்படி ஒரு ஒருநாள் தொடரில் 4 வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு. அதிலும் சிலருக்குப் பாதியிலேயே அந்த வாய்ப்பும் பறிக்கப்பட்டுவிட்டது. எப்படிச் சர்வதேச அரங்கில் இவர்களால் நிலைத்து நிற்க முடியும்? 

ஒன்றா... இரண்டா... வெஸ்ட் இண்டீஸ் அணிக்குள் ஆயிரம் பிரச்னைகள்! #INDvWI

சொல்லப்போனால் 10 போட்டிகளில் 5 வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு கொடுத்ததே தவறுதான். கிறிஸ் கெய்ல், ஈவின் லூயிஸ் போன்ற வீரர்கள் இல்லாததால் ஓப்பனிங் ஸ்லாட் பிரச்னைக்குள்ளானது. ஏற்கெனவே ஒரு போட்டியில் சுனில் அம்ப்ரிஸ் ஓரங்கட்டப்பட்டு சந்தர்பால் ஹேம்ராஜுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அம்ப்ரிஸ் ஓப்பனராக ஆடக்கூடியவர். ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த ஓராண்டாகவே அவருக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஆனால், தன் கடைசி 20 இன்னிங்ஸ்களில் வெறும் 478 ரன்கள் (சராசரி : 23.9) மட்டுமே எடுத்துள்ள `37 வயது' சாமுவேல்ஸ் தொடர்ந்து விளையாடிவருகிறார். 

ஒன்றா... இரண்டா... வெஸ்ட் இண்டீஸ் அணிக்குள் ஆயிரம் பிரச்னைகள்! #INDvWI

இதேபோல் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கீமர் ரோச் ஆடாதது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் போட்டியில் டாஸ் போடப்பட்டதும், நேரலையில் தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார் முன்னாள் வீரர் இயான் பிஷப். எத்தனையோ எதிர்பாராத அறிமுகங்கள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, பெரிதாக எதிர்பார்த்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டின் அறிமுகம் அரங்கேறவில்லை. தொடர் தோற்ற பிறகு கடைசி போட்டியில்கூட அவர் களமிறக்கப்படவில்லை. ஆனால் கடைசி 4 டி-20 போட்டிகளில் 38 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த `33 வயது' தினேஷ் ராம்தின் கடைசிப் போட்டியிலும் களமிறங்கினார். 

இப்படி டிரஸ்ஸிங் ரூமில் மிகமோசமான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ப்ளேயிங் லெவன் தேர்வுடன் மட்டும் அது நின்றுவிடவில்லை. மூன்றாவது டி-20 போட்டியில், இந்திய அணி பேட்டிங் செய்தபோது `ஸ்பெல்' என்ற வார்த்தை பயன்பாட்டிலேயே இல்லை. எந்த வெஸ்ட் இண்டீஸ் பௌலரையும், பிராத்வெயிட் தொடர்ச்சியாகப் பயன்படுத்தவே இல்லை. ஃபேபியன் ஆலன் மட்டும் 12, 14-வது ஓவர்களைத் தொடர்ச்சியாக ஒரே எண்டிலிருந்து வீசினார். அந்த மொத்த இன்னிங்ஸிலும் 2 ஓவர் ஸ்பெல் வீசப்பட்டது அந்த ஒருமுறைதான். தாமஸ், கீமோ பால் என வேகப்பந்துவீச்சாளர்களும் ஒரு ஓவர் ஸ்பெல்களே வீசிக்கொண்டிருந்தனர். எப்படி அவர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? 

ஒன்றா... இரண்டா... வெஸ்ட் இண்டீஸ் அணிக்குள் ஆயிரம் பிரச்னைகள்! #INDvWI

அதேபோல் என்ன ஆனாலும், தன் 4 ஓவர் கோட்டாவை முடிப்பதில் குறியாக இருக்கிறார் பிராத்வெயிட். இரண்டாவது டி-20 போட்டியில் அவர் வீசியது ஒரேயொரு டாட் பால். 56 ரன்களை வாரி வழங்கினார். கடைசிப் போட்டியிலும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் அழகாகப் பந்துவீசிக்கொண்டிருந்தார். 3 ஓவருக்கு 30 ரன்கள் கொடுத்திருந்தபோது, எகனாமிகலாகப் பந்துவீசிய ஸ்பின்னர்களை விட்டுவிட்டு, தானே பந்துவீசி 11 ரன்களைக் கொடுத்துச் சென்றார். இப்படிக் களத்தில் எடுக்கும் முடிவுகளால் போட்டியின் முடிவை எப்படி மாற்ற முடியும். டிரஸ்ஸிங் ரூம் முடிவுகள், களத்தில் எடுக்கும் முடிவுகள் என எல்லாமே படுமோசமாக இருக்கின்றன.

பிராத்வெயிட், ஜேசன் ஹோல்டர் இருவரும் நல்ல வீரர்கள். அந்த அணி பெற்றிருக்கும் கொஞ்ச நஞ்ச வெற்றிகளுக்குக் காரணமாக இருந்தவர்கள். ஆனால், அணியை வழிநடத்தும் இடத்தில் அவர்களால் சிறப்பாகச் செயல்பட முடிவதில்லை என்பதுதான் உண்மை. இந்த ஆண்டு இறுதியில் பயிற்சியாளர் ஸ்டுவார்ட் லா வேறு அணியிலிருந்து வெளியேறுகிறார். இனி எப்படிப்பட்ட பயிற்சியாளரை அந்த நிர்வாகம் பணியமர்த்துகிறதோ அதைப் பொறுத்துத்தான் அவர்களின் எதிர்காலம் அமையும். 

ஒன்றா... இரண்டா... வெஸ்ட் இண்டீஸ் அணிக்குள் ஆயிரம் பிரச்னைகள்! #INDvWI

மூன்றாவது டி-20 போட்டிக்கு முன்தினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வெஸ்ட் இண்டீஸ் சீனியர் வீரர் ராம்தினிடம், சீனியர் வீரர்கள் தேசிய அணியைப் புறக்கணிப்பது பற்றிக் கேட்கப்பட்டது. ``இது ஒருவகையில் மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் விதவிதமான உணவுகள் போன்றது. யார் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நாம் முடிவு செய்ய முடியாது. டி-20 தொடர்களைத் தேடிச் செல்லும் வீரர்களை நாம் போய் தடுக்க முடியாது" என்றார். அது உண்மைதான். அரை மனதோடு அவர்கள் தேசிய அணியில் விளையாடாமல் இருப்பதே நல்லது. ஆனால், அதை மட்டுமே அணியின் சொதப்பல்களுக்குக் காரணமாகச் சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாது. ஏனெனில், இப்போது இருக்கும் அணியை வைத்துக்கொண்டு வங்கதேசத்தை வீழ்த்த முடியும். ஆனால், 4 மாதங்கள் முன்பு கிறிஸ் கெய்ல், ஈவின் லூயிஸ் ஆடியுமே அவர்களிடம் ஒருநாள் தொடரை இழந்தது இந்த அணி. அதனால், இன்று எல்லோரும் பாடிக்கொண்டிருக்கும் `வீரர்கள் டி-20 தொடருக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்' என்ற புராணம் அர்த்தமற்றது. 

இப்போதைக்கு அந்த அணிக்கு அவர்கள் தேவையில்லை. கிறிஸ் கெய்ல், டுவைன் பிராவோ, சுனில் நரைன் போன்ற சீனியர்கள் வேண்டாம். பிராத்வெயிட் சொன்னதுபோல் திறமையான இளம் வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை சரியாக நிர்வகிப்பதற்குத்தான் ஆள் வேண்டும். இனி கிரீம் ஸ்மித் போன்ற இளம் கேப்டனையெல்லாம் அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. முடிவு எடுப்பதில் மிகவும் பின்தங்கியிருக்கும் கேப்டன்களைக் கொண்டுள்ள இந்த அணிக்கு, ஒரு `ஜீனியஸ்' பயிற்சியாளர்தான் தேவை. அப்படிப்பட்ட ஒருவரால் மட்டும்தான் 2019 உலகக் கோப்பைக்குள் வெஸ்ட் இண்டீஸ் அணியைக் கொஞ்சம் ஒழுங்குபடுத்த முடியும்.