Published:Updated:

`வார்னரை வீழ்த்திய ஜூனியர் ஸ்டீவ் வாக்!’ - ஸ்மித்துடன் மோதிய போட்டியில் சுவாரஸ்யம்

`வார்னரை வீழ்த்திய ஜூனியர் ஸ்டீவ் வாக்!’ - ஸ்மித்துடன் மோதிய போட்டியில் சுவாரஸ்யம்
`வார்னரை வீழ்த்திய ஜூனியர் ஸ்டீவ் வாக்!’ - ஸ்மித்துடன் மோதிய போட்டியில் சுவாரஸ்யம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்ட பின் முதல் முறையாக வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் ஒரே போட்டியில் பங்கேற்றனர். 

Photo: Twitter/Cricketcomau

பந்தைச் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம். இந்தாண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியது நிரூபிக்கப்பட்டது. அதன்பிறகு அவர்கள் இருவரும் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால், இருவரும் தொடர்ச்சியாக உள்ளூர் கிரிக்கெட்டில் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி வருகின்றனர். 

இந்நிலையில் தடைக்குப் பின்னர், முதல்முறையாக இருவரும் ஒரேபோட்டியில் கலந்துகொண்டு அசத்தினர். சிட்னி ஓவல் மைதானத்தில் என்.எஸ்.டபிள்யு பிரிமியர் கிரிக்கெட் போட்டியில் ராண்ட்விக் பீட்டெர்ஷாம் அணிக்கு கேப்டனாக வார்னரும், சதர்லாண்ட் அணிக்கு கேப்டனாக ஸ்மித்தும் களமிறங்கினர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இருவரும் இணைந்து ஒரே போட்டியில் விளையாடுவதைக் காண ஆஸ்திரேலிய ரசிகர்கள் அதிக அளவில் குவிந்திருந்தனர். ரசிகர்களுடன் இருவரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். 

Photo: Twitter/samuelfez

வார்னர், ஸ்மித் அணிகள் மோதிய இந்தப் போட்டியில் ஸ்மித் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது. சதர்லாண்ட் அணிக்காக விளையாடிய ஷேன் வாட்சன், 41 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஸ்மித் அணி வெற்றிபெற உதவினார்.  இந்தப்போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்ய சம்பவமே, வார்னர் ஆட்டமிழந்தது தான். 13 ரன்னில் வார்னர் ஆட்டமிழந்தது, ஆஸ்திரேலிய அணியுன் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேனும் கேப்டனுமான ஸ்டீவ் வாக்கின் மகன் ஆஸ்டின் வாக் பந்துவீச்சில். தனது மகனின் பந்துவீச்சை நேரில் பார்த்துப் பூரித்துப்போனார் தந்தை. அவருடன் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சனும் போட்டியை நேரில் கண்டு களித்தார். 

Photo: Twitter/samuelfez

எதிரெதிர் அணியில் விளையாடினாலும், இருவரும் ஒரே போட்டியில் விளையாடியதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர். கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா - ஆஸ்திரேலியா தொடரில் இருவரும் தடை காரணமாக விளையாட முடியாமல்போவது தங்களுக்கு வருத்தமளிப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர். முன்னதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகத்திடம், இந்திய தொடரில் வார்னர் மற்றும் ஸ்மித் விளையாடும் பொருட்டு தண்டனை காலத்தை குறைக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்தனர். ஆனால் கிரிக்கெட் வாரிய நிர்வாகம், அந்த கோரிக்கையை பரிசீலிக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.