Published:Updated:

அதிரடி பேட்டிங், அசத்தல் ஸ்பின்... டி-20 சாம்பியன் ஆகுமா இந்திய மகளிர் அணி?!

இத்தொடரில் தேர்வுசெய்யப்பட்ட இந்திய மகளிர் அணியைப் பார்க்கும் போது தோனி தலைமையிலான 2007 ம் ஆண்டு டி-20 உலகக் கோப்பையை ஜெயித்த அணி நினைவுக்கு வருகிறது.

அதிரடி பேட்டிங், அசத்தல் ஸ்பின்... டி-20 சாம்பியன் ஆகுமா இந்திய மகளிர் அணி?!
அதிரடி பேட்டிங், அசத்தல் ஸ்பின்... டி-20 சாம்பியன் ஆகுமா இந்திய மகளிர் அணி?!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் 50 ஓவர் உலகக் கோப்பை, டி-20 உலகக் கோப்பை போன்றவை ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு நடத்தும்போது கூடவே பெண்களுக்கும் நடத்துவது வழக்கம். ஆண்கள் கிரிக்கெட்டின் மவுசு காரணமாக, அதன் நிழலிலே நடந்து பெண்கள் கிரிக்கெட் கவனிக்கப் படாமல் போகும். கிரிக்கெட் ஒரு பிரபலமான விளையாட்டாக உருவெடுத்து பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும், பெண்கள் கிரிக்கெட் என்பது சமீபகாலமாக்கத்தான் கவனம் ஈர்க்கப்பட்டு வருகிறது. அதிலும் கடந்த ஓராண்டு பெண்கள் கிரிக்கெட்டிற்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு அதிகமாகியுள்ளது. அதனால் ஆறாவது பெண்கள் டி20 உலகக் கோப்பையை தனித்தே நடத்த ICC முடிவு செய்துள்ளது. இன்று இரவு நடக்கும் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

கிரிக்கெட்டை ஒரு திருவிழா போல் கொண்டாட்ட மனப்பான்மையுடன் அணுகும் கரீபிய மண்ணில்தான் பெண்களுக்கான ஆறாவது டி-20 உலகக் கோப்பை நடக்க இருக்கிறது. வருகிற நவம்பர் 9 தொடங்கி நவம்பர் 24 வரை நடக்கும் இந்தத் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை,தென் ஆப்பிரிக்கா என நேரடியாகத் தகுதி பெற்ற எட்டு அணிகளோடு, கடந்த ஜூலை மாதம் நடந்த குவாலிபையர் போட்டிகளில் வெற்றிபெற்று தகுதியடைந்த வங்கதேசம், அயர்லாந்து ஆகிய அணிகளும் சேர்ந்து மொத்தம் பத்து அணிகள் கோப்பைக்காகப் போட்டியிட இருக்கின்றன.

கயனா, செயின்ட் லூசியா, ஆன்டிகுவா ஆகிய மூன்று நகரங்களில் நடக்கவிருக்கும் இத்தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. க்ரூப் ஏ-வில் கடந்த முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், இலங்கை ஆகிய அணிகளும் க்ரூப் பி-வில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வோர் அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இறுதியில், இரண்டு க்ரூப்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி நவம்பர் 24-ம் தேதி `சர் விவ் ரிச்சர்ட்ஸ்’ ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரின் தொடக்கப் போட்டியில் நியூசிலாந்துடன் இந்திய அணி மோதுகிறது. DECISION REVIEW SYSTEM (DRS) முறை முதல் முறையாக டி-20 உலகக் கோப்பையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய அணி எப்படி?

இத்தொடரில் தேர்வுசெய்யப்பட்ட இந்திய மகளிர் அணியைப் பார்க்கும் போது தோனி தலைமையிலான 2007-ம் ஆண்டு டி-20 உலகக் கோப்பையை ஜெயித்த அணி நினைவுக்கு வருகிறது. அதே போல் இளம் வீராங்கனைகள் அதிகம் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. வீராங்கனைகளின் சராசரி வயது 24 தான். அணியில் 7 நபர் 14-க்கும் குறைவான டி-20 போட்டிகளே விளையாடியுள்ளனர். அனுபவம் குறைவு என்றாலும் உடல் தகுதியிலும் மனதளவிலும் நம் வீராங்னைகள் வலுவாகவே உள்ளனர் இந்திய அணியைப் பொறுத்தவரை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர், ஸ்மிரிதி மந்தனா, மிதாலி ராஜ், வேதா கிருஷ்ணமூர்த்தி போன்ற பெயர்கள் மூலம் பேட்டிங் வரிசை மிரட்டலாக உள்ளது. இவர்கள் போக இலங்கை தொடரில் ஆல்ரவுண்டராக ஜொலித்த ஜூனியர் வீரங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் இந்தத் தொடரிலும் தன்னுடைய ஃபார்ம்மை தொடர்வார் என எதிர்பார்க்கலாம்.

பேட்டிங் வலுவாக இருக்கும் போதிலும் இந்திய அணியின் பெரும் கவலை பவுலிங்தான். அணியின் சீனியர் வீரங்கனையான ஜுலன் கோஸ்வாமி டி-20 போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்த நிலையில், பேஸ் அட்டாக் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பேஸ் அட்டாக்கில் மன்ஷி ஜோஷி, அருந்ததி ரெட்டி ஆகியோர் உள்ளனர். வேகப்பந்துவீச்சை விட ஸ்பின் பவுலிங் கொஞ்சம் சிறப்பாக உள்ளது. லெக் ஸ்பின்னர் பூனம் யாதவ் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருகிறார். அவருக்கு அனுஜா படில் கைக்கொடுத்தால் நன்றாக இருக்கும்.முன்னாள் ஆஃப் ஸ்பின்னரான ரமேஷ் பவர் பயிற்சியாளராக இருப்பது பவுலிங் யூனிட்டிற்கு வலு சேர்க்கும்.

`க்ரூப் `பி’ பொறுத்தவரை மூன்று முறை சாம்பியனான ஆஸ்திரேலியாதான் வலுவான அணி. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற பலமான அணியை சமாளிப்பதில் இந்திய அணிக்குப் பெரும் சவால் இருக்கும். இந்த இரு அணிகளையும் தாண்டி லீக் போட்டியின் முடிவில் முதல் இரண்டு இடத்தைப் பிடிக்க வேண்டும். அப்போதுதான் அரையிறுதிக்குத் தகுதிபெற முடியும். இந்த இளம் இந்திய வீரர்கள் எப்படி இந்தச் சவாலை எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதுதான் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

கவனிக்க வேண்டிய வீராங்னைகள்

ஸ்மிரிதி மந்தனா (இந்தியா)

இந்த 22 வயது இடதுகை ஓப்பனர் இந்தத் தொடருக்கான இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார். கியா கிரிக்கெட் லீக் போன்ற வெளிநாட்டு டி-20 தொடர்களில் பங்கெடுத்த இவரது அனுபவம் நிச்சயம் இந்திய அணிக்கு பெரிதாக உதவும். இந்திய அணியின் துணை கேப்டனான இவரின் பயமறியாத ஆட்டம் POWERFUL ஹிட்டிங் ஆகியவை அணிக்கு மாபெரும் பலம்.

ஸ்டெஃபானி டெய்லர் (வெஸ்ட் இண்டீஸ்)

கடந்த டி-20 உலகக் கோப்பையில் கத்துக்குட்டி அணி எனக் கருதிய வெஸ்ட் இண்டீஸை கோப்பை வெல்ல வைத்தது மட்டுமல்லாமல் தொடர் நாயகி விருதையும் தட்டிச் சென்ற இந்த 27 வயது ஆல்ரவுண்டர், இந்த முறை சொந்த மண்ணிலும் சாதிக்கும் முனைப்புடன் இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனான இவர் டி-20 போட்டிகளில் 2500 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

டேனியல் வ்யாட் (இங்கிலந்து)

கடந்த ஆண்டு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையே நடந்த முத்தரப்பு தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 64 பந்தில் 124 ரன்கள் எடுத்து எல்லோரையும் தன்னைத் திரும்பிப் பார்க்கச் செய்தார். இரண்டு டி-20 சதங்கள், எட்டு ஆண்டுகளுக்கு மேலான அனுபவம்வாய்ந்த இந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர் இந்தத் தொடரில் இங்கிலாந்து அணியின் முக்கியப் புள்ளியாக இருப்பார். 

சுஸி பேட்ஸ் (நியூசிலாந்து)

நியூசிலாந்து அணியின் டாப் ஸ்கோரரான இவர் 2018-ம் ஆண்டில் மட்டும் 12 ஆட்டங்களில் 509 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பவுலிங்கிலும் சிறப்பாகச் செயல்படும் இவர் ICC டி-20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். எல்லா விதமான ஷாட்டுகளும் ஆடக்கூடிய இவரைத் தடுப்பது எதிரணி பவுலர்களுக்கு தலைவலியாக இருக்கும்.

மேகன் ஸ்கூட் (ஆஸ்திரேலியா)

ICC டி-20 பவுலிங் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்த 25 வயது வேகப்பந்துவீச்சாளர் ஆஸ்திரேலியா பவுலிங்கின் மிக முக்கியப் புள்ளி. தக்க சமயத்தில் விக்கெட்டுகள் எடுப்பது மட்டுமல்லாமல் எகனாமிக்கலாகவும் பந்துவீசக் கூடியவர். இந்திய அணியுடன் ஹாட்ரிக் எடுத்து அசத்திய இவர் இந்த டி20 உலகக் கோப்பையிலும் அதிரடிகாட்ட காத்துக்கொண்டிருக்கிறார்.