Published:Updated:

``200 அடிச்சிருனு அவர் சொன்னார்... ப்ச்..!’’ - ரோஹித் ஷர்மா

சிறப்பான ஒப்பனிங் கொடுத்த ரோஹித் ஷர்மா, 150 ரன்கள் கடந்த போது, நான்காவது முறையாக இரட்டைச் சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.

``200 அடிச்சிருனு அவர் சொன்னார்... ப்ச்..!’’  - ரோஹித் ஷர்மா
``200 அடிச்சிருனு அவர் சொன்னார்... ப்ச்..!’’ - ரோஹித் ஷர்மா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4 வது ஒருநாள் போட்டியில், 40 ஓவர்களைக் கடந்தும் ரோஹித் ஷர்மா பேட்டிங் செய்வதைப் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் மனதில் எழுந்தது ஒரே கேள்விதான்... `இன்னிக்கும் ரோஹித் டபுள் செஞ்சுரியா?’. ரோஹித் 4 வது முறையாக 200 அடிப்பதற்கு வாய்ப்பு அதிகம் இருந்தது. இதற்கு முன் அவர் 3 முறை டபுள் செஞ்சுரி அடித்தபோதும், 100 ரன்களுக்குப் பிறகுதான் பட்டாசாக வெடித்துச் சிதறியிருக்கிறார். நேற்றும் அப்படித்தான். சதம் அடித்தபிறகு சிக்ஸர்கள், பவுண்டரிகள் எனப் பறக்கவிட்டார். 120-லிருந்து 150 ரன்னை விருட்டெனக் கடந்தார். `இருக்கு, இன்னிக்கும் கச்சேரி இருக்கு’ என ரோஹித் ரசிகர்கள் உற்சாகமானார்கள். ஆனால், நர்ஸ் பந்தில் ஹேமராஜிடம் கேட்ச் கொடுத்து, 162 ரன்களில் வெளியேறி டபுள் செஞ்சுரியைத் தவறவிட்டார் ரோஹித்.

மும்பை பிராபோர்ன் மைதானத்தில் சதம் அடிப்பது ரோஹித்துக்குத் தண்ணி பட்ட பாடு. குஜராத்துக்கு எதிரான போட்டியில் முதல் டி - 20 சதம் அடித்ததும், ரஞ்சிக் கோப்பையில் 309 ரன்கள் விளாசியதும் இதே மைதானத்தில்தான். ஈடன் கார்டனைப் போலவே, ரோஹித்துக்கு இதுவும் ராசியான மைதானம்தான். அதனால், இங்கும் இரட்டைச் சதம் அடிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் அந்த வாய்ப்பை நழுவவிட்டார். இருந்தாலும், ஒரு நாள் போட்டிகளில் அதிகமுறை 150 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இப்போது ரோஹித் டாப். 7 முறை 150 ப்ளஸ் ரன்களை கடந்துள்ள ரோஹித், 21 முறை சதம் அடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209, இலங்கைக்கு எதிராக 264, 208* என அதிக இரட்டைச் சதங்கள் அடித்தவர்கள் வரிசையில் முன்னணியில் இருக்கும் ரோஹித், நேற்று டபுள் செஞ்சுரி வாய்ப்பை நழுவவிட்டது குறித்து, பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கமளித்தார். 

``பேட்டிங்கின் போது, சதம், இரட்டைச் சதம் அடிக்க வேண்டும் என எப்போதுமே திட்டமிடுவதில்லை. முடிந்தவரை சிறப்பாக ஆட வேண்டும், அதிக ரன்கள் எடுக்க வேண்டும், அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்பதைத்தான் கருத்தில் கொள்வேன்.  எதிர்முனையில் இருந்த அம்பதி ராயுடு கூட, `200 அடிக்க வாய்ப்பு இருக்கிறது. அடித்துவிடுங்கள்!’ என்றார். ஆனால், நான் அதைப் பற்றி யோசிக்காமல், பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தினேன். பொதுவாக, நான் சதம், இரட்டைச் சதத்ததை மனதில் வைத்து ஆடுவதில்லை. இதற்கு முன் அடிக்கப்பட்ட 3 இரட்டைச் சதங்களும், டபுள் செஞ்சுரி அடிக்க வேண்டும் என்று மனதில் வைத்து அடிக்கப்பட்டதல்ல. அதுவாகவே அமைந்தது” என்றார் ரோஹித்.

பிராபோர்ன் பிட்ச் குறித்த கேள்விக்கு, ``இங்கு சேஸ் செய்யும் போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், முதலில் பேட் செய்யும் அணி அதிக ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். என்னைப் பொறுத்தவரை பேட்ஸ்மேன், பவுலர்கள் என இரு தரப்பினருக்கும் சாதகமான பிட்ச்சாக இருந்தது. களத்தில் இறங்கியவுடன், சிறந்த ஷாட்களை அடிக்க முடியாது. இன்றைய போட்டியில், கலீலின் பந்துவீச்சு வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை ரன் அடிக்கவிடாமல் தடுத்துவிட்டது” என்றார்.

ரோஹித் ஒருபுறம் அடித்து நொறுக்க, மறுபுறம் சத்தமின்றி சதம் அடித்துவிட்டார் அம்பதி ராயுடு. கடந்த 21 மாதங்களில் இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் அல்லாது வேறு ஒரு பேட்ஸ்மேன் அடிக்கும் முதல் சதம் இது. அதுமட்டுமல்ல, 4 வது இடத்துக்கு தான்தான் பொருத்தமான ஆள் என்பதையும் சொல்லாமல் சொல்லிவிட்டார். மிடில் ஆர்டர் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டார். போட்டி முடிந்த பின் நடந்த பிரஸ் மீட்டிலும் ரோஹித் இதை உறுதிப்படுத்தினார். விராட் கோலி 17-வது ஓவரில் வெளியேறியபோது, `அப்பாடா...’ என வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பெருமூச்சு விட்டிருப்பார்கள். ஆனால், 3 வது விக்கெட்டுக்கு ரோஹித்துடன் ஜோடி சேர்ந்து, பிரித்து மேய்ந்தார் ராயுடு. இந்த ஜோடி 27.1 ஓவர்களில் குவித்தது 211 ரன்கள். 

இதுவரை இந்த மைதானத்தில் நடந்த 8 ஒருநாள் போட்டிகளில், 4 முறை வெஸ்ட் இண்டீஸ் அணி பங்கேற்றுள்ளது. இதில், 2006-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில், 377 ரன்களை சேஸ் செய்ய களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஓப்பனிங் சொதப்பியது. இந்தியாவின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல், ஹேம்ராஜ், ஹோப், பவல்ஸ், சாமுவேல்ஸ் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறினர். 100 ரன்கள் கூட எட்டாத நிலையில் 7 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ், 153 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இது, ஒருநாள் அரங்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி அடைந்த மோசமான (224 ரன்கள் வித்தியாசம்) தோல்வி. இதுகுறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர், ``வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதிக ரன்களை விட்டுக் கொடுத்து, சேஸிங்கின் போது ரன் சேர்க்கத் தவறினோம். அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது பின்னடைவாக அமைந்தது. இந்திய அணியின் பந்துவீச்சு பேட்டிங்கிற்கு சவாலாக இருந்தது.” என்றார்.