Published:Updated:

டியர் கோலி... நீங்கள் சச்சினைவிட சிறந்த பேட்ஸ்மேனா..? ஒரு சச்சின் ரசிகனின் கடிதம்!

டியர் கோலி... நீங்கள் சச்சினைவிட சிறந்த பேட்ஸ்மேனா..? ஒரு சச்சின் ரசிகனின் கடிதம்!
டியர் கோலி... நீங்கள் சச்சினைவிட சிறந்த பேட்ஸ்மேனா..? ஒரு சச்சின் ரசிகனின் கடிதம்!

சச்சினின் காலகட்டம் என்பது பெளலர்கள் கோலோச்சிய, பயம்காட்டிய, பதற்றம்கூட்டிய காலம். மெக்ராத், கில்லெஸ்பி, ஷேன் வார்னே, பிரெட் லீ, வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், சக்லைன் முஸ்தாக், ஆலன் டொனால்டு, ஷான் பொல்லாக், ஆம்புரோஸ், கோர்ட்னி வால்ஷ், சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன், ஹீத் ஸ்ட்ரீக், ஹென்ரி ஒலாங்கா, டேரன் காஃப், ஆலன் முல்லாளி, ஆண்ட்ரூ ஃப்ளின்ட்டாஃப், ஷேன் பாண்ட், கிறிஸ் கெய்ன்ஸ் என ஒவ்வொரு டீமிலும் ஸ்ட்ரைக்கிங் பெளலர்கள் இருந்த காலம் அது.

நான் கோலி வெறுப்பாளன் கிடையாது. கோலியை மிகவும் நேசிக்கும், மதிக்கும், பிரமிக்கும் மனிதன் நான். விராட் கோலி இந்தத் தலைமுறையின் நாயகன். ஆனால், `சச்சினைவிட கோலி சிறந்த பேட்ஸ்மேன்’ என்கிற ஒப்பீடுகளை என்னால் ஒருபோதும், ஒருகாலமும் ஏற்றுக்கொள்ள முடியாது. சச்சின் கிரிக்கெட்டின் பிதாமகன்!

சச்சினின் காலகட்டம் வேறு... விராட் கோலியின் காலகட்டம் என்பது வேறு. `சிவாஜி ஓவர் ஆக்டிங்’ என இந்தத் தலைமுறை சொல்வது எவ்வளவு அபத்தமோ, அதே அளவுக்கு அபத்தமானது சச்சின் - கோலி ஒப்பீடு. கமலை ரஜினியுடன்தான் ஒப்பிடமுடியும். ரஜினியைக் கமலுடன் ஒப்பிட்டுத்தான் பேசமுடியும். கமலை தனுஷோடு ஒப்பிடமுடியுமா, ஒப்பிடுவது சரியா?

கோலி எராவின் மிகச்சிறந்த பெளலர் யார் எனக் கொஞ்சம் யோசிக்காமல் சொல்ல முடியுமா. நிச்சயம் பெயர்கள் மனதில் வராது. ஏனென்றால் இந்தக் காலகட்டத்தில் அப்படி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் பெளலர்கள் என்று யாரும் கிடையாது. ஆனால், சச்சினின் காலகட்டம் என்பது பெளலர்கள் கோலோச்சிய, பயம்காட்டிய, பதற்றம்கூட்டிய காலம். மெக்ராத், கில்லெஸ்பி, ஷேன் வார்னே, பிரெட் லீ,  வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், சக்லைன் முஸ்தாக், ஆலன் டொனால்டு, ஷான் பொல்லாக், ஆம்புரோஸ், கோர்ட்னி வால்ஷ், சமந்தா வாஸ், முத்தையா முரளிதரன், ஹீத் ஸ்ட்ரீக், ஹென்ரி ஒலாங்கா, டேரன் காஃப், ஆலன் முல்லாளி, ஆண்ட்ரூ ஃப்ளின்ட்டாஃப், ஷேன் பாண்ட், கிறிஸ் கெய்ன்ஸ் என ஒவ்வொரு டீமிலும் ஸ்ட்ரைக்கிங் பெளலர்கள் இருந்த காலம் அது.

இன்று இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நியூஸிலாந்து என எல்லா அணிகளுமே பழம்பெருமை பேசும் அணிகளாகிவிட்டன. 90-2000-களில் இவை ஸ்டார் பேட்ஸ்மேன்களும், ஸ்ட்ரைக்கிங் பெளலர்களும் நிரம்பியிருந்த திறமையான அணிகள். அப்போதைய கென்யா அணிகூட பலம்வாய்ந்த அணியாக இருந்தது. ஒட்டியானோ, டிக்கோலோ, ஒடும்பே, மார்ட்டின் சுஜி என கென்யா அணியில்கூட பெயர் சொல்லும் ப்ளேயர்கள் இருந்தார்கள். ஆனால், இன்றோ நிலைமையே தலைகீழ். 90-களில் இந்தியாவைப் புரட்டியெடுத்த இலங்கையின் இன்றைய லைன் அப் என்ன. ஒரு நட்சத்திர வீரராவது அங்கே இருக்கிறாரா?

சச்சின் 10,000 ரன்கள் என்னும் மைல்கல்லைத் தொட்டது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக. 2001-ம் ஆண்டு இந்தூரில் நடந்தது அந்தப் போட்டி. க்ளென் மெக்ராத், டேமியன் ஃப்ளெம்மிங், ஷேன் வார்னே என உலகின் முக்கிய பெளலர்களுக்கு எதிராக, அவர்களின் பெளலிங்கை துவம்சம் செய்து 139 ரன்கள் குவித்து 10,000 ரன்களைக் கடந்தார் சச்சின் டெண்டுல்கர். அன்று மட்டும் 19 பவுண்டரிகள் சச்சினின் பேட்டில் இருந்து தெறித்தது. ஈஸியாக இந்தோரை பேட்டிங் பிட்ச் என்று சிலர் சொல்லிவிடலாம். ஆனால், அன்று இந்தியாவின் டார்கெட்டான 300 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவின் பதிலடி 181 ரன்கள் மட்டுமே. கில்கிறிஸ்ட், பான்டிங், மைக்கேல் பெவன், ஸ்டீவ் வாக், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், டேரன் லீமேன் என அன்றைய உலகின் பவர்ஃபுல் பேட்டிங் லைன் அப்பைக் கொண்டிருந்த ஆஸ்திரேலியாவாலேயே அங்கு ரன்கள் எடுக்கமுடியவில்லை என்பதே உண்மை. 

கோலியை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், இன்றைய வெஸ்ட் இண்டீஸ் டீமில் பெயர்சொல்லக்கூடிய பெளலர் ஒருவரை சொல்லுங்கள் பார்ப்போம். ஹோல்டர், ரோச், நர்ஸ், பிஷூ எனக் கத்துக்குட்டி பெளலர்களை அடித்து துவைப்பதில் எல்லாம் என்ன பெரிய பெருமை இருக்கிறது. சச்சினைவிட கோலியின் ஸ்ட்ரைக் ரேட் அதிகம், ஆவரேஜ் அதிகம், இன்னிங்ஸ்கள் குறைவு எனத் தயவுசெய்து புள்ளிவிவரங்களை தூக்கிக்கொண்டு வரவேண்டாம். புள்ளிவிவரங்கள் சொல்வது எல்லாமே உண்மையில்லை. காலம்தான் முக்கியம். யாருக்கு எதிராக, எந்த மாதிரியான அணிக்கு எதிராக, எப்படிப்பட்ட பெளலர்களுக்கு எதிராக ஒரு பேட்ஸ்மேன் ரன்கள் அடிக்கிறார் என்பதுதான் இங்கே முக்கியம். 

சச்சினின் ரசிகனாக நான் அடுத்து சொல்லப்போவது கொஞ்சம் ஓவராகக்கூடத் தோன்றலாம். ஆனால், இதில் உண்மை இருக்கிறது. சச்சினுக்கு லைஃப் கிடைக்காது. அதாவது அவரது கேட்சை யாராவது தவறவிட்டிருந்தால் அன்று சச்சின் 100 ரன்கள் அடிக்காமலேயே அவுட் ஆகிவிடுவார். கேட்ச் டிராப் ஆகி சச்சின் சதம் அடித்த இன்னிங்ஸ்கள் எல்லாம் என் நினைவுக்குத் தெரிந்து இல்லை. ஆனால், நேற்றுகூட கோலி 157 ரன்கள் குவித்த இன்னிங்ஸில் அவர் அரை சதம் அடிப்பதற்கு முன்பாகவே கேட்ச் டிராப் ஆனது.

இன்று அம்பயரிங், தொழில்நுட்பத்தாலும், புதிய விதிமுறைகளாலும் முன்னேற்றம் கண்டுவிட்டது. அம்பயர் அவுட் கொடுத்தாலும் அவுட் இல்லை என ரிவ்யூ கேட்கமுடியும். ஆனால், அன்று அப்படியில்லை. எத்தனை முறை 80களிலும், 90 ரன்களிலும் அம்பயர்களின் தவறான முடிவால் சச்சின் அவுட் ஆகியிருக்கிறார் தெரியுமா. நோ பாலிலும், தவறான எல்பிடள்யூ அவுட்களாலும், பந்து பேட்டில் படாமலேயே கீப்பரிடம் கேட்சாகியும் சச்சின் தவறவிட்ட சதங்களின் எண்ணிக்கையே 50-ஐத் தொடும். 

சச்சின் டெண்டுல்கர் தனக்கு இணையான திறமையாளர்களுடன், ஸ்டார்களுடன் விளையாடியவர். சச்சின் சுயநலத்துக்காக தனக்காக மட்டுமே ஆடினார் என்பது காலகாலமாக அவர் மீது வைக்கப்படும் கொடூரமான, உண்மைகள் இல்லாத அறமற்ற விமர்சனம். 1996 உலகக்கோப்பை நினைவிருக்கிறதா, சச்சினை மட்டுமே நம்பி இந்தியா களமிறங்கிய உலகக்கோப்பை தொடர் அது. 
 சச்சின் அவுட் ஆனால் இந்தியா அவுட். அதுதான் அன்றைய நிலை. ஒட்டுமொத்த பிரஷரையும் தன்மேல் தூக்கிச் சுமந்தவர் சச்சின். கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அவர்மீது சுமத்தப்பட்டது. 1996 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் இந்தியா, கென்யாவுடன் ஆடும். கென்யா எப்படிப்பட்ட அணி என்பதே அப்போது யாருக்கும் தெரியாது. கென்யா முதலில் பேட்டிங் செய்து 199 ரன்கள் எடுத்தது. சச்சினும், ஜடேஜாவும்தான் சேஸிங்கைத் தொடங்குவார்கள். மிகவும் நிதானமாக ஆடுவார் சச்சின். ஜடேஜா 53 ரன்னில் அவுட். சித்து 1 ரன்னில், காம்ப்ளி 2 ரன்னில் அவுட் என நடையைக்கட்டுவார்கள். ஆனால், கடைசிவரை களத்தில் நின்று 127 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கணக்கை சென்சுரியோடு தொடங்கிவைப்பார் சச்சின்.

இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியா வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்ளும். 50 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகும் வெஸ்ட் இண்டீஸ். குறைவான டார்கெட்தான். ஆனால், இந்தியா வெற்றிபெறுமா என்பது மிகப்பெரிய கேள்வியாகவே இருந்தது. காரணம் வெஸ்ட் இண்டீஸின் பெளலிங் லைன் அப். வால்ஷ், ஆம்புரோஸ், பிஷப், கிப்ஸன், ஹூப்பர் என ஸ்ட்ரைக்கிங் பெளலர்களைக் கொண்டிருந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜடேஜா 1 ரன்னில் அவுட் ஆவார். சித்து 1 ரன்னில் அவுட், அசாருதின் 32 ரன்னில் அவுட் என இந்தியாவின் டாப் ஆர்டர் கழன்றுகொண்டேயிருக்கும். ஆனால், சச்சின் மட்டும் களத்தில் நின்று 70 ரன்கள் அடிப்பார். அப்போதும் அவர் ரன் அவுட்தான். மேற்கு இந்திய வீரர்கள் அவரது விக்கெட்டை வீழ்த்தவில்லை. அணியின் ஸ்கோர் 125 ரன்னில் இருக்கும்போது சச்சின் அவுட் ஆவார். காம்ப்ளி கடைசி நேரத்தில் நின்று அடிக்க இந்தியா வெற்றிபெறும். 

அடுத்த போட்டி ஆஸ்திரேலியாவுடன். மார்க் வாக் சதம் அடிக்க, மார்க் டெய்லர் அரை சதம் அடிக்க, ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 258 ரன்கள் அடிக்கும். மெக்ராத், டேரன் ஃப்ளெம்மிங், ஷேன் வார்னே, மைக்கேல் பெவன், மார்க் வாக், ஸ்டீவ் வாக் என ஆஸ்திரேலியா மிகச் சிறப்பான பெளலிங் அட்டாக்கை வைத்திருந்தது. வழக்கம்போல ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜடேஜா 1 ரன்னில் அவுட், வினோத் காம்ப்ளி டக் அவுட், கேப்டன் மொகமது அசாருதின் 10 ரன்னில் அவுட் என டாப் ஆர்டர் எகிறும். சஞ்சய் மஞ்ரேக்கருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் போடுவார் சச்சின். மெக்ராத், ஃப்ளெம்மிங், வார்னே என எல்லோருடைய பந்துகளையும் சிதறடிப்பார் சச்சின். 84 பந்துகளில் 90 ரன்கள். 14 பவுண்டரி 1 சிக்ஸர். கடைசியில் பார்ட் டைம் ஸ்பின்னரான மார்க் வாக்கின் பந்துவீச்சில் ஸ்டம்ப்பிங் ஆகி வெளியேறுவார். இந்தியாவின் வெற்றிக்கனவும் முடிவுக்கு வரும்.

அடுத்ததுதான் மிக முக்கியமான ஆட்டம். இந்தியா இலங்கையைச் சந்திக்கும். சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன், குமார தர்மசேனா, ஜெயசூர்யா என வேகப்பந்து, ஸ்பின் என அச்சுறுத்தும் பெளலிங் லைன் அப்போடு களமிறங்கியது இலங்கை. இந்தியாதான் முதலில் பேட்டிங். ஜடேஜாவுக்கு பதில் மனோஜ் பிரபாகர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்குவார். ஆனால், ரிசல்ட்டில் எந்த மாற்றமும் இல்லை. 36 பந்துகள் எதிர்த்து ஆடி வெறும் 7 ரன்கள் எடுத்து அவுட் ஆவார் பிரபாகர். அடுத்து மஞ்ச்ரேக்கர் கொஞ்ச நேரம் நின்று 32 ரன்கள் அடிப்பார். சச்சின் அப்போதைய கேப்டன் அசாருதினுடன் பார்ட்னர்ஷிப் போட்டு இலங்கையின் பெளலிங்கைப் புரட்டியெடுப்பார். 137 பந்துகளில் 137 ரன்கள். 8 பவுண்டரி 5 சிக்ஸர். அணியின் ஸ்கோர் 268 ரன்கள் இருக்கும்போது சச்சின் அவுட் ஆவார். இந்தியாவின் டோட்டல் 271 ரன்கள். 

ஆனால், இந்த ஸ்கோரை இலங்கை ஈஸியாக சேஸ் செய்துவிடும். ஏனென்றால், இந்தியாவின் பெளலிங் லைன் அப் அப்படி. மனோஜ் பிரபாகரின் கேரியரையே அன்றோடு முடிவுக்குக் கொண்டுவந்தார் ஜெயசூர்யா. மனோஜ் பிரபாகரின் 4 ஓவர்களில் மட்டும் 47 ரன்கள். அன்றைய போட்டியில் சச்சின் பெளலிங்கும் போட்டிருப்பார். பெளலர்கள் எல்லாம் எக்கானமி ரேட்டில் அடிவாங்க சச்சின் 10 ஓவர்கள் வீசி 41 ரன்கள்தாம் கொடுத்திருப்பார். ஜெயசூர்யா, ரணதுங்கா, திலகரத்னே என இலங்கை வீரர்கள் எல்லோரும் சேர்ந்து அடிக்க கூட்டுமுயற்சியில் இலங்கை வெற்றிபெறும். சச்சினின் சதம் வீணாகப் போகும். சச்சின் சதம் அடித்தால் இந்தியா தோற்கும் என்கிற அபாண்டமான விமர்சனங்கள் அப்போதிருந்துதான் எழ ஆரம்பித்தன.

1996 உலகக்கோப்பையில் சச்சின் சிங்கிள் டிஜிட்டில் அவுட் ஆன ஒரே போட்டி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான லீக் போட்டிதான். ஹீத் ஸ்ட்ரீக் பெளலிங்கில் 3 ரன்னில் க்ளீன் போல்டாவார் சச்சின். 1996 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான இந்தியாவின் அரை இறுதிப்போட்டியை ரசிகர்கள் யாரும் மறக்கமுடியாது. 252 ரன்கள்தாம் இந்தியாவுக்கு டார்கெட். வழக்கம்போல ஓப்பனிங் பேட்ஸ்மேன்களில் ஒருவரான சித்து சிங்கிள் டிஜிட்டில் அவுட் ஆவார். மஞ்ரேக்கருடன் பார்ட்னர்ஷிப்பில் இறங்கி இந்தியாவின் சேஸிங்கைத் தொடர்வார் சச்சின். 88 பந்துகளில் 66 ரன்கள். 9 பவுண்டரிகள். ஜெயசூர்யாவின் பந்துவீச்சில் சச்சின் ஸ்டம்பிங் செய்யப்படும்போது இந்தியாவின் ஸ்கோர் 98 ரன்கள். அடுத்த 22 ரன்கள் அடிப்பதற்குள் இந்தியாவின் 7 விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு சரிவதுபோலச் சரிந்துகொண்டேயிருக்கும். சச்சின் அவுட். இந்தியாவும் அவுட். 

2000-ம்களில் கங்குலி, டிராவிட், ஷேவாக், யுவராஜ் சிங், மொகமது கைஃப் என பேட்ஸ்மேன்கள் உருவெடுக்க ஆரம்பித்த பிறகுதான் சச்சினின் மேல் ஏற்றப்பட்டிருந்த பாரம் குறையத் தொடங்கியது. அப்போதும் அது முழுமையாக நீங்கிவிடவில்லை. 1996 உலகக்கோப்பையில் எப்படி அதிக ரன்கள் அடித்தவர் சச்சின் டெண்டுல்கரோ அதேபோல் 2011 உலகக்கோப்பையிலும் அதிக ரன்கள் அடித்தவர் சச்சின்தான். 

2011 உலகக்கோப்பையை இந்தியா வென்றதும் இந்திய அணி வீரர்கள் தங்கள் தோள்களில் சச்சினைத் தூக்கிக்கொண்டு மும்பை வான்கடே மைதானம் முழுக்க வலம்வந்தார்கள். யுவராஜ், ரெய்னா, யூசுஃப் பதான், ஹர்பஜன் சிங் என சச்சினைத் தூக்கிக்கொண்டுவந்த வீரர்கள் பலர் மாறிக்கொண்டேயிருந்தார்கள். ஆனால், ஒருவர் மட்டும் மாறவேயில்லை. அவர் விராட் கோலி. மைதானம் முழுக்க சச்சினைத் தூக்கித் தோளில் சுமந்தார் கோலி. அப்போது ஹர்ஷா போக்ளே கோலியிடம் ஏன் மைதானம் முழுக்க சச்சினைத் தூக்கிக்கொண்டு வந்தீர்கள் எனக் கேட்க, ``22 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டை தன் தோள்களில் தூக்கிச் சுமந்தவர் சச்சின். அவரை இப்போது நாங்கள் தூக்கிச் சுமப்பது எங்களுக்கு வாழ்நாள் பெருமை'' என்றார் விராட் கோலி. ஆமாம்... கோலிக்குத் தெரியும் சச்சினுக்கு முன்னால் தான் யாரென்று.

ஒரு தலைமுறை என்பது 20 ஆண்டுகள் என்று சொல்கிறார்கள். ஆனால், கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள், ஒரு தலைமுறைக்கும் மேலே கோலோச்சியவர் சச்சின். ரன்கள் அடிப்பதற்கு சவாலான பிட்ச்களில் சதங்கள் அடித்திருக்கிறார். வேகத்தாலும், சுழலாலும் மிரட்டிய பெளலர்களை சிக்ஸர்களாலும், பவுண்டரிகளாலும் மிரளவைத்திருக்கிறார். அவர் சதம் அடிக்காத நாடுகளே கிடையாது என்னும் அளவுக்கு அவரது பேட்டிங் உச்சத்தில் இருந்தது. பேட்டிங் மட்டுமல்ல இந்தியாவின் எழுச்சிக்கு பெளலிங்கிலும் துணை நின்றவர் சச்சின். 

சச்சினின் யுகமே வேறு. அங்க அவருக்கு நிகர் யாருமே இல்லை என்பதே வரலாறு. சச்சினுக்கு முன்மாதிரிகளும் கிடையாது. பின் மாதிரிகளும் கிடையாது. ஒரு மைதானம் முழுக்க... 50 ஆயிரம் பேர்...  ஒற்றைப் பெயரை மட்டுமே மந்திரம் போல உச்சரித்துக்கேட்டது உண்டா?

இன்றுவரை காதுகளில் சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்.... ஒலித்துக்கொண்டேயிருக்கிறது!

அடுத்த கட்டுரைக்கு