Published:Updated:

16 டாட் பால்கள்... 17 சிங்கிள்கள்... வெஸ்ட் இண்டீஸ் ஜெயித்திருக்கலாமோ! #INDvWI

இந்த முடிவு அவர்களுக்குத் தகுதியானது அல்ல என்று கரீபிய வீரர்களுக்குத் தெரியும். அதனால்தான் ஆட்டம் முடிந்து சில நொடிகள் அசைவின்றி நின்றார் ஷாய் ஹோப். அவர்கள் நிச்சயமாக வென்றிருக்கவேண்டும். 

16 டாட் பால்கள்... 17 சிங்கிள்கள்... வெஸ்ட் இண்டீஸ் ஜெயித்திருக்கலாமோ! #INDvWI
16 டாட் பால்கள்... 17 சிங்கிள்கள்... வெஸ்ட் இண்டீஸ் ஜெயித்திருக்கலாமோ! #INDvWI

​மிகப்பெரிய விஷயமாய்க் கருதப்பட்ட ஒரு மைல் கல்லை ஜஸ்ட் லைக் தட் எட்டிவிட்டார் விராட் கோலி. 205-வது இன்னிங்ஸில் 10,000 ரன்களைக் கடந்து பிரமிக்கவைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள், 37-வது சதம், 2018-ல் ஆயிரம் ஒருநாள் ரன்கள் என வழக்கம்போல் இவரது சாதனை பட்டியல் அப்டேட் ஆகியிருக்கிறது. கோலியின் சாதனைகள், அந்தக் கொண்டாட்டங்கள் தாண்டி, இந்தியாவுக்குத் தோல்வி பயத்தைக் காட்டிவிட்டது வெஸ்ட் இண்டீஸ் அணி. கோலி ஆட்ட நாயகன் விருது வென்றபோது, ``இந்த முடிவுக்கு வெஸ்ட்​ இண்டீஸ் தகுதியான அணி" என்றார். ஆனால், 66 பந்துகளில் 65 ரன்கள் தேவை என்ற நிலையில் இருக்கும் ஒரு அணி வெற்றியைத் தவிர எதையும் எதிர்பார்க்காதல்லவா. ஆம், இந்த முடிவு அவர்களுக்குத் தகுதியானது அல்ல என்று கரீபிய வீரர்களுக்குத் தெரியும். அதனால்தான் ஆட்டம் முடிந்து சில நொடிகள் அசைவின்றி நின்றார் ஷாய் ஹோப். அவர்கள் நிச்சயமாக வென்றிருக்கவேண்டும். 

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இரண்டு அணிகளுமே 321 ரன்கள்தான் எடுத்திருந்தன. ஆனால், அவர்களின் ரன் குவிப்பு ஒரேமாதிரி இல்லை. இந்தியா தொடக்கத்தில் நிதானமாகவும், முடிவில் அதிரடியாகவும் ஆடியது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்தில் அதிரடி காட்டி, கடைசியில் அமைதி காத்தது. பௌண்டரி, சிக்ஸர்கள் மூலம் இந்தியா எடுத்தது 148 ரன்கள் (28 பௌண்டரி, 6 சிக்ஸர்கள்). வெஸ்ட் இண்டீஸ் - 174 ரன்கள் (27 பௌண்டரி, 11 சிக்ஸர்கள்). வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களைவிட சிக்ஸர்கள் குறைவாக இருந்தாலும், இந்திய வீரர்கள் சிங்கிள் மற்றும் டபுள் எடுப்பதில் தீவிரமாக இருந்தனர். 50 ஓவர்களில் இந்தியா 119 சிங்கிள்களும், வெஸ்ட் இண்டீஸ் 102 சிங்கிள்களும் எடுத்தன. வித்தியாசம் - 17! இந்திய வீரர்கள் விளையாடிய டாட் பால்களை (116) விட, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் (132) விளையாடிய டாட் பால்களின் எண்ணிக்கை 16 அதிகம். 16...17... இதுதான் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் நிற்கவைத்துள்ளது ! சிங்கிள் எடுப்பதில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆர்வம் காட்டாததுதான் வெற்றியை அவர்களிடமிருந்து பறித்துவிட்டது. 

முதல் 10 ஓவர்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிதாக ஸ்டிரைக் ரொடேட் செய்யவில்லை. அந்த 60 பந்துகளில் 39 பந்துகளில் ரன் எடுக்கவேயில்லை. வெறும் 8 சிங்கிள்கள்தாம். ஆனால், போகப் போக டாட் பால்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. காரணம் கோலி - ராயுடு கூட்டணி நிதானமாக சிங்கிள்கள் எடுத்து ஸ்டிரைக் ரொடேட் செய்தது. 41-வது ஓவரில் ராயுடு அவுட்டாகும்வரை இந்த ஜோடி சீராக விளையாடியது. 11 - 20 ஓவர்களுக்கிடையே 28 சிங்கிள்களும், அடுத்த 10 ஓவர்களில் 27 சிங்கிள்களும், 31-40 ஓவர்களுக்குள் 26 சிங்கிள்களும் எடுத்தனர். அதாவது மிடில் ஓவர்களில் இந்தியா எடுத்தது 81 சிங்கிள்கள். பிஷூ வீசிய 18-வது ஓவரிலும், மெக்காய் வீசிய 27-வது ஓவரிலும் 2 பௌண்டரிகள் அடித்தாலும், 2 முறை ஸ்டிரைக் ரொடேட் செய்தனர். ஹோல்டர் வீசிய ஆட்டத்தின் 30-வது ஓவரில் 2 பௌண்டரிகள் அடித்தவர்கள், மற்ற 4 பந்துகளிலுமே சிங்கிள் எடுத்தனர். எந்த இடத்திலும் இந்த ஜோடி சிங்கிள் எடுப்பதை மறக்கவேயில்லை. 

16 டாட் பால்கள்... 17 சிங்கிள்கள்... வெஸ்ட் இண்டீஸ் ஜெயித்திருக்கலாமோ! #INDvWI

அதேசமயம் மிடில் ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் எடுத்தது 64 சிங்கிள்கள்தாம். முதல் 10 ஓவர்களில் 12 சிங்கிள்கள் எடுத்திருந்தாலும், அடுத்தடுத்து அவர்களின் ஸ்டிரைக் ரொடேஷன் குறைந்தது. ஷாய் ஹோப் விக்கெட் விழாமல் தடுப்பதில் ஆர்வம் காட்ட, ஹிட்மேயர் சிக்ஸர்கள் அடிப்பதில் ஆர்வம் காட்ட, சிங்கிள்கள் வருவது வெகுவாகக் குறைந்தது. 11 - 20 ஓவர்களில் 18, 21-30 ஓவர்களில் 19 என இந்தியாவைவிட மிகக் குறைவாகவே சிங்கிள்கள் எடுத்தனர். ஆனால், பௌண்டரி, சிக்ஸர் என அவர்கள் ரன் குவித்துக்கொண்டே இருந்ததால், ஸ்டிரைக் ரொடேட் செய்யாதது அப்போது அவர்களுக்குப் பிரச்னையாகத் தெரியவில்லை. இலக்கை நோக்கி விரைவாக நகர்ந்துவிட்டதால், சிங்கிள்களின் தேவை போகப் போக குறைந்துகொண்டே இருந்தது. 

ஆனால், குல்தீப் ஓவரில் ஹிட்மேயர் வெளியேற ஆட்டம் மாறத்தொடங்கியது. ஜடேஜா புயல் வேகத்தில் (ஸ்பின்னர்தான். ஆனால், ஓவர் அந்த வேகத்தில்தான் முடியும்) 2 ஓவர்களை எகனாமிகலாக வீசிச் சென்றார். அந்த இரண்டு ஓவர்களில் மட்டும் 9 டாட் பால்கள். ஜேசன் ஹோல்டர் களத்தில் நிலைக்க நேரம் எடுத்துக்கொண்டார். அதற்காக அவர் சிங்கிள் எடுத்து, நல்ல டச்சில் இருந்த ஹோப்-கு ஸ்டிரைக் கொடுத்திருக்கலாம். அதைச் செய்யாமல் தொடர்ச்சியாக டாட் பால்கள் விளையாடத் தொடங்கினார். 40 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் ஸ்கோர் - 259/5. இந்தியா 221/3. அந்த நிலையில் இந்திய அணியைவிட 38 ரன்கள் அதிகம் எடுத்திருந்தது வெஸ்ட் இண்டீஸ். கடைசி 10 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்தாலே வென்றுவிடலாம். ஸ்பின்னர்களுக்கு 5 ஓவர்கள் இருக்கின்றன. சொல்லப்போனால் எந்த இந்திய பௌலருமே அதுவரை அச்சுறுத்தவில்லை. கொஞ்சம் அச்சுறுத்திய குல்தீப் யாதவும் ரன்களை வாரி வழங்கத் தொடங்கிவிட்டார். எளிதாக வென்றிக்கலாம். ஆனால்... வெஸ்ட் இண்டீஸ் அணியின் அணுகுமுறை மோசமாக இருந்தது.

16 டாட் பால்கள்... 17 சிங்கிள்கள்... வெஸ்ட் இண்டீஸ் ஜெயித்திருக்கலாமோ! #INDvWI

ஜடேஜாவின் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 4 பந்துகளை ஸ்ட்ரோக் செய்தார் ஹோப். அதற்கு முந்தைய ஓவரில் ஹோல்டர் தன் பங்குக்கு 5 டாட் பால்கள் ஆடியிருந்தார்! 7 ஓவர்களுக்கு 44 ரன்கள் கொடுத்திருந்த ஜடேஜா, கடைசி 3 ஓவர்களில் வெறும் 5 ரன்கள் மட்டும் கொடுத்து ஸ்பெல்லை முடித்துக்கொண்டார். அதுவரை அற்புதமாக ஆடிவந்த ஹோப்-ன் அணுகுமுறை கடைசி 10 ஓவர்களில் மிக மோசமாக இருந்தது. 43-வது ஓவரில் ஷமியின் 5 பந்துகளை டாட் ஆக்கினார். அந்த ஓவர் முடியும் போது எகானமி முதல் முறையாக 7 ரன்களைத் தாண்டியது (7.57). வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விளையாடிய டாட் பால்கள் மெள்ள, இந்தியாவை ஆட்டத்துக்குள் கொண்டுவந்தது. 

கடைசி 4 ஓவர்களில் 27 ரன்கள் தேவை... உமேஷ் வீசிய ஓவரின் 4 பந்துகளை டாட் பாலாக்கினார் ஹோப். ஒரு பந்தைக்கூட ஸ்டிரைக் ரொடேட் செய்யும் எண்ணத்தோடு அவர் ஆடவில்லை. இந்த இடத்தில்தான் கோலி தான் மாஸ்டர் பேட்ஸ்மேன் என்பதை நிரூபிக்கிறார். இறுதிக் கட்டத்தில் பௌண்டரி, சிக்ஸர் என அதிரடி காட்டினாலும், அவர் சிங்கிள்கள் எடுக்கத் தவறவில்லை. இந்தியா 321 என்ற ஸ்கோரை எட்ட பௌண்டரிகளும் சிக்ஸர்களும் மட்டும் காரணம் அல்ல. இந்திய வீரர்கள் எடுத்த 30 சிங்கிள்களும், 8 டபுள்களும்தாம். அதாவது ஓடியே 46 ரன்கள் எடுத்தனர். தோனி மட்டுமல்ல, நான் ஸ்டிரைக்கர் எண்டில் முதல் ஒருநாள் இன்னிங்ஸ் ஆடும் பன்ட், ஜடேஜா என யார் இருந்தாலும் தவறாமல் ஸ்டிரைக் ரொடேட் செய்தார் கோலி. அதனால்தான் கடைசி 10 ஓவர்களில் இந்தியா 100 ரன்கள் எடுத்தது​.​

16 டாட் பால்கள்... 17 சிங்கிள்கள்... வெஸ்ட் இண்டீஸ் ஜெயித்திருக்கலாமோ! #INDvWI

சதமடித்திருந்தாலும் ஷாய் ஹோப், கோலி செய்ததைச் செய்யத் தவறினார். 48-வது ஓவரில் சஹால் 3 ரன் மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுக்க, ஆட்டம் பரபரப்பானது. ஒருவழியாக கடைசி ஓவரில் உமேஷ் தயவில் 13 ரன்கள் கிடைக்க தோல்வி தவிர்க்கப்பட்டது. ஆனால், இது உண்மையில் வெஸ்ட் இண்டீஸ் வென்றிருக்கவேண்டிய ஆட்டம். 40 ஓவர்களில் அவர்கள் இருந்த நிலைக்கு, 3 ஓவர்கள் மீதமிருக்கையிலேயே வென்றிருக்கவேண்டும். ஆனால், சிங்கிள்கள் எடுக்காமல் அதிக டாட் பால்கள் விளையாடி, தங்கள் வெற்றிக்குத் தாங்களே முட்டுக்கட்டையாக நின்றுகொண்டனர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். அவர்கள் சிக்ஸர் ஸ்ப்பெஷலிஸ்ட்கள்தான்... இருந்தாலும் கிரிக்கெட்டின் அடிப்படையைப் பின்பற்றினால்தான் இதுபோன்ற ஆட்டங்களை வெல்ல முடியும்.