Published:Updated:

ஐ.பி.எல்: ஜடேஜா அதிரடியில் சென்னை வெற்றி

ஐ.பி.எல்: ஜடேஜா அதிரடியில் சென்னை வெற்றி
ஐ.பி.எல்: ஜடேஜா அதிரடியில் சென்னை வெற்றி
ஐ.பி.எல்: ஜடேஜா அதிரடியில் சென்னை வெற்றி

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று மாலை நடந்த 26வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். கம்பீருடன், யூசுப்பதான் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினர்.  பவுண்டரியுடன் இன்னிங்சை தொடங்கிய வைத்த கம்பீர் 25 ரன் எடுத்திருந்தபோது, கிறிஸ் மோரிசின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

இதன் பிறகு யாரும் கொல்கத்தா அணி நிலைகுலைந்து போனது. அடுத்து வந்த காலிஸ் பந்தை எதிர்கொள்வதற்கு முன்பே ரன் அவுட் ஆகி ‘டைமண்ட் டக்’ ஆனார். இதைத் தொடர்ந்து கொல்கத்தா அணிக்கு, சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் கடுமையாக நெருக்கடி கொடுத்தனர்.

யூசுப் பதான் 25 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதன் பிறகு டெபப்ரதா தாஸ் (19), சுனில் நரின் (13) ஆகியோர் மட்டுமே சற்று ஆறுதல் அளித்தனர். 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய கொல்கத்தா அணி 9 விக்கெட்டுக்கு 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி களம் கண்டது. மைக்ஹஸ்சி- அஸ்வின் தொடக்க ஆட்டக்காரராக இறங்கினர். அஸ்வின் 11 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் ஹஸ்சி போராட, மறுமுனையில் விஜய் (2), சுரேஷ் ரெய்னா (7), கேப்டன் டோனி (9) வரிசையாக வெளியேறினர். இதனால் சென்னை அணி சிக்கி தவித்தது.

சுழல்பந்து ஜாலங்கள் சுனில் நரினும், செனநாயக்கேவும் சென்னை அணியின் ரன்குவிப்பை முடக்கினர். கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 50 ரன்கள் தேவைப்பட்ட போது, கொல்கத்தாவின் கையே சற்று ஓங்கி இருந்தது போல் தெரிந்தது.

இந்த சூழலில் பத்ரிநாத்தும் (6) கிளீன் போல்டாக, நெருக்கடி மேலும் அதிகமானது. இதைத் தொடர்ந்து மைக் ஹஸ்சியும், ரவீந்திர ஜடேஜாவும் ஜோடி சேர்ந்தனர். பந்து வீச்சில் கலக்கிய ஜடேஜா தான், கடைசியில் பேட்டிங்கிலும் கைகொடுத்தார். ஜடேஜா, பவுலர்கள் பாலாஜி, நரின் ஓவர்களில் தலா ஒரு சிக்சரை பறக்க விட்டு பதற்றத்தை கொஞ்சம் கொஞ்சமாக தணித்தார்.

##~~##
இதற்கிடையே மைக் ஹஸ்சி 40 ரன்களில் ஆட்டம் இழந்தார். கடைசி 2 ஓவர்களில் சென்னை அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது ஜடேஜாவும், வெய்ன் பிராவோவும் களத்தில் இருந்தனர். இந்த பரபரப்பான ஓவரை காலிஸ் வீசினார். இதில் ஜடேஜா 2 பவுண்டரியும், பிராவோ ஒரு பவுண்டரியும் விரட்ட, அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் திரட்டப்பட்டது. ஆட்டமும் சென்னை பக்கம் திரும்பியது.
இதில் ஜடேஜா கொடுத்த கேட்ச் வாய்ப்பை யூசுப் பதான் நழுவ விட்டதுடன், அது பவுண்டரிக்கு ஓடியது. அந்த கேட்ச்சை மட்டும் அவர் பிடித்திருந்தால் ஒரு வேளை ஆட்டத்தில் மாற்றம் உருவாகி இருக்கலாம்.
இதையடுத்து கடைசி ஓவரில் 2 ரன் தேவைப்பட, யூசுப் பதான் வீசிய முதல் பந்தையே சிக்சருக்கு தூக்கிய ரவீந்திர ஜடேஜா ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜடேஜா 36 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் முத்திரை பதித்த அவரே ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
6வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 4வது வெற்றியாகும். அதே சமயம் 6வது லீக்கில் விளையாடிய கொல்கத்தாவுக்கு இது 4வது தோல்வியாகும்.
சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் நாளை சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது.