Published:Updated:

36, 20, 5... கோலி + ரோஹித்... கிளாஸிக் கூட்டணியின் மைல்கற்கள்! #INDvWI

36, 20, 5... கோலி + ரோஹித்... கிளாஸிக்  கூட்டணியின் மைல்கற்கள்! #INDvWI
36, 20, 5... கோலி + ரோஹித்... கிளாஸிக் கூட்டணியின் மைல்கற்கள்! #INDvWI

சரியாக 1 வருடம் 11 நாள்கள் முன்பு... பார்ஸபாரா மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் தொடக்கம் முதலே தடுமாறியது இந்தியா. 27 ரன்களுக்கு 4 விக்கெட். உலகின் சிறந்த 'டாப் 3' பேட்ஸ்மேன்கள் மூவரும் இணைந்து வெறும் 10 ரன்களே அடித்தனர்.  கேப்டன் விராட் கோலி டக் அவுட் ஆனார். அந்த மைதானத்தில் நடந்த முதல் போட்டி... அதுவும் 7 ஆண்டுகள் கழித்து அஸாமில் நடந்த போட்டி... சரணடைந்தது இந்தியா. நேற்றுவரை வடகிழக்கு ரசிகர்களின் ஏமாற்றம் மட்டுமே அந்த ஆடுகளத்தில் மிஞ்சியிருந்தது. அதே மைதானத்தில், அதே ரசிகர்கள் முன்பு அந்த ஏமாற்றங்களைக் களைத்துள்ளது இந்திய அணி. அன்று ரன் எடுக்காமல் வெளியேறிய இந்திய கேப்டன், இப்போது ஆட்ட நாயகன். அன்று 10 ரன்கள் அடித்த இந்தியாவின் டாப் - 3 நேற்று அடித்தது 296 ரன்கள்! வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை வெளுத்து கவுஹாத்தி நேற்றே தீபாவளி கொண்டாடிவிட்டது.

வெஸ்ட் இண்டீஸ் அடித்த 322 என்ற இலக்கு எந்த இடத்திலும் இந்திய அணிக்குக் கடினமாக இருக்கவில்லை. 'இந்தப் போட்டியில் இந்தியாவின் மிடில் ஆர்டர் பலம் தெரிந்துவிடும்' என்றுதான் பெரிதும் நம்பினர். ஆனால், மிடில் ஆர்டருக்கான தேவையே ஏற்படவில்லை. இரண்டாவது ஓவரில் தவான் வெளியேறியிருந்தாலும், விராட் கோலி வழக்கத்தைவிட அதிரடியாக விளையாடி சேஸிங்கை எளிதாக்கிவிட்டார். 47 பந்துகள் மீதமிருக்கையிலேயே இலக்கை எளிதாக எட்டிவிட்டது இந்தியா. இரண்டு அணிகளுமே 300+ ரன்கள் அடித்திருந்தாலும், அவர்கள் ஆடிய கிரிக்கெட் வித்தியாசமானது. இரண்டு அணிகளின் அணுகுமுறையும் முற்றிலும் மாறுபட்டது. அதுதான் ஆட்டத்தின் முடிவையும் தீர்மானித்தது. 

வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பேட்டிங்குக்கும் கோலி - ரோஹித் ஷர்மா ஆடியதற்கும் நிறைய வித்தியாசம். கோலி, ரோஹித் இருவரின் ஆட்டத்திலுமே நிறைய வித்தியாசம் இருந்தது. இவர்கள் இணைந்தால் வழக்கமாக ரோஹித் அடித்து ஆடுவார். கோலி பொறுமையாக விளையாடுவார். ஆனால், நேற்று நடந்தது நேர் எதிர். ரோஹித் 18 ரன்கள் எடுத்திருந்தபோது, 11-வது ஓவரிலேயே அரைசதம் கடந்துவிட்டார். ஆட்டத்தில் அவ்வளவு வேகம். "களத்திற்குள் சென்றதும், 'நான் அடித்து ஆடுகிறேன். நீ நிதானமாக ஆடு' என்று ரோஹித்திடம் சொல்லிவிட்டேன்" என்று பரிசளிப்பு விழாவில் சொல்லியிருந்தார் விராட். அந்தளவுக்கு அவருக்கு நம்பிக்கை அளித்தது வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு. பெரிதாக வேரியேஷன்கள் இல்லாதபோது பெர்ஃபெக்ஷனாவது காட்டவேண்டும். அவர்கள் அதையும் செய்யவில்லை. ரோஹித்துக்கு ஷார்ட் லென்த்துலும், கோலிக்கு ஃபுல் லென்த்தில் pad-களுக்குப் பக்கத்திலும் பிட்ச் செய்தனர். அந்த இரண்டு பேட்ஸ்மேன்களுக்கும் எப்படிப் பந்துவீசக்கூடாதோ அப்படியே அதைச் செய்தார்கள். விளைவு, கோலி ஒருநாள் போட்டிகளில் தன் 36-வது சதத்தைப் பூர்த்திசெய்தார். ரோஹித் 20-வது சதமடித்தார். இந்தக் கூட்டணி ஐந்தாவது முறையாக 200 ரன்களைக் கடந்தது!

வெஸ்ட் இண்டீஸ் பௌலர்களிடம் இல்லாத வெரைட்டியை ரோஹித் - கோலி கூட்டணி கவுஹாத்தி ரசிகர்களுக்குக் காட்டியது. இருவரின் இன்னிங்ஸும் இரண்டு விதமான கிளாசிக்கல் இன்னிங்ஸ்கள். இருவரும் ஒரேமாதிரியான பௌன்ஸரை எதிர்கொள்வதிலேயே அவ்வளவு வெரைட்டி காட்டினார்கள். 6-வது ஓவரில் தாமஸ் வீசிய பௌன்ஸரை தன் ஃபேவரிட் புல் ஷாட் மூலம் பேக்வேர்ட் ஸ்கொயர் திசையில் சிக்ஸர் அடித்தார் ரோஹித். அதுபோன்ற பந்துகளை, ரோஹித் அப்படி ஆடவில்லை என்றால்தான் ஆச்சர்யம். அடுத்த ஓவரில் அதேபோல் ஒரு பௌன்ஸர் வீசுகிறார் கீமர் ரோச். பேட்ஸ்மேன் கோலி. நிச்சயம் பந்தை தூக்கியடிக்கமாட்டார். ரோஹித் போல் பேட் face-ஐ முழுதாகக் காட்டாமல், கிராஸ் பேட் ஷாட் அடித்தார். அதே திசையில் புயல்வேக பௌண்டரி. இது கோலி ஸ்டைல்.

பௌன்ஸர்களைத் தன் வழக்கமான பாணியில் எதிர்கொண்டாலும், நேற்று கொஞ்சம் வித்தியாசமாகவே விளையாடினார் விராட். ஆஃப் சைடு வரும் பந்துகளை வழக்கமா கவர் டிரைவ் செய்யும் விராட், இந்தப் போட்டியில் அதிகமாக கவர் டிரைவ்கள் ஆடவில்லை. அந்தப் பந்துகளை ஆடுவதில் கொஞ்சம் அதிகமாக டைமிங் எடுத்துக்கொண்டார். பந்து கிரீஸைத் தாண்டும்வரை காத்திருந்து கட் ஷாட் ஆடினார். அதுவும் ஸ்பின்னர்களின் பந்துவீச்சை கட் செய்யவேண்டுமென்ற மனநிலையைலேயே ஆடினார்போல! பிஷூவின் லெக் ஸ்பின்னர்களை கட் செய்வது எளிது. பேட்ஸ்மேனை விட்டு வெளியே செல்லும் அந்தப் பந்துகளால் பிரச்னை இல்லை. ஆனால், நர்ஸ் வீசிய ஆஃப் ஸ்பின்னர்களையும் அப்படியே விளையாடிக்கொண்டிருந்தார். பேட்ஸ்மேனை நோக்கி வரும் ஆஃப் ஸ்பின்னர்களை அப்படி ஆடுவதற்கு உச்சபட பெர்ஃபெக்ஷன் வேண்டும். இரண்டு பந்துகள் தவிர மற்ற அனைத்து பந்துகளிலும் அந்த பெர்ஃபெக்ஷனைக் காட்டினார் கோலி. 

அவர் 47 ரன்களில் இருந்தபோது நர்ஸ் பந்தை கட் செய்ய, அது பேக்வேர்ட் பாயின்ட் ஃபீல்டரின் கைக்கு 5 செ.மீ மேலே சென்று பௌண்டரி ஆனது. ஃபீல்டர் இன்னும் கொஞ்சம் விழிப்பாக இருந்திருந்தால் அது கேட்ச். அதேபோல் இன்னொரு பந்தை கட் செய்யும்போது அது ஸ்டம்பிக்கு மிக அருகில் சென்றது. இவைபோல 95 ரன்களில் இருக்கும்போது, மிட்விக்கெட் திசையில் தூக்கி அடித்து அவுட்டாகத் திரிந்தார். அவுட்டான பந்தோடு சேர்த்து, தான் சந்தித்த 107 பந்துகளில் கோலி செய்தது 4 தவறுகள்! ரோஹித் பெரிதாக தவறு செய்யவில்லை என்றாலும், இரண்டு முறை தவறான ஷாட் செலக்ஷானால் ஸ்லிப் திசையில் எட்ஜானார். தவான் - ஒரு தவறான ஷாட்டால் வெளியேறினார். சந்தித்த 253 பந்துகளில், இந்திய பேட்ஸ்மேன்கள் செய்த தவறை இப்படி எளிதாகப் பட்டியலிட்டுவிடலாம். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் செய்த தவறுகளை அப்படிப் பட்டியிலமுடியாது. 

சாமுவேல்ஸ் தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களுமே அட்டாகிங் ஷாட் ஆட முயற்சி செய்துதான் வெளியேறினர். முதல் போட்டியில் ஆடிய சந்தர்பால் ஹெம்ராஜ், வெளிய சென்ற பந்தை அடித்து இன்சைட் எட்ஜாகி வெளியேறினார். ஹோப் டாப் எட்ஜானார். கீரன் பவல் பௌண்டரி எல்லையில் கேட்சானார். ரோவ்மேன் பவல் ஸ்லாக் ஸ்வீப் அடிக்க முயன்று, ஹோல்டர் பேடில் ஸ்வீப் அடிக்க முயன்று போல்டானார்கள். நர்ஸ் கூட ஸ்லாக் ஷாட் ஆடப்போய் எல்.பி.டபிள்யூ ஆனார். இப்படி அனைத்து பேட்ஸ்மேன்களுமே ஸ்லாக் ஷாட் ஆடித்தான் அவுட்டானார்கள். அவுட்டான பந்துகள் மட்டுமல்ல, மொத்த இன்னிங்ஸிலுமேகூட அப்படித்தான் ஆடிக்கொண்டிருந்தனர். பொதுவாக எல்.பி.டபிள்யூ அப்பீல்களெல்லாம், மிகச்சிறப்பான பந்தை டிஃபன்ஸ் ஆடமுடியாமல் pad-ல் வாங்கியதால் எழும். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு எதிரான அப்பீல்கள் அப்படியானது அல்ல. எந்த வேரியேஷனும் இல்லாத பந்துக்கு பேட்டை சுழற்றி, அது தவறிப்போய் pad-ல் பட்டு எழுந்த அப்பீல்கள் அவை. அப்படி சுத்திக்கொண்டே இருந்தனர்.

தொடக்கத்தில் ஷாய் ஹோப் தவிர யாருமே ஸ்ட்ரைக் ரொடேட் செய்வதில் பெரிதாக அக்கறை செலுத்தியாகத் தெரியவில்லை. முதல் 10 ஓவர்களில் அவர்கள் எடுத்தது வெறும் 9 சிங்கிள்கள்தான். நல்லவேளையாக அவர்களது இன்னிங்ஸை ஹிட்மேயர் தூக்கி நிறுத்திவிட்டார். 21 வயதில் மிகப்பெரிய திறமைசாலி. பலம், ஸ்டைல், வேகம் எல்லாமே இருக்கிறது. பொதுவாக விக்கெட்டுக்கு இடையே மந்தமாக ஓடும் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு நடுவே, இவர் வித்தியாசமாகத் தெரிகிறார். விக்கெட்டுகளுக்கு இடையே மிகச் சிறப்பாக ஓடுகிறார். நிறைய சிங்கிள்களை டபுளாக்கினார். களத்தில் இருந்த நேரத்தில் மிகவும் துடிப்பாக விளையாடினார். என்னதான் அதிரடி காட்டினாலும், அதிலும் ஒரு நிதானம் இருக்கவேண்டும். அந்த நிதானம்தான் கோலி, ரோஹித் ஆகியோரின் இன்னிங்ஸ்களை பெரிதாக்குகிறது. சதமடித்ததும் ஓய்ந்துவிடாமல் அதே வேகத்தில் ஆட வைக்கிறது. அந்த நிதானத்தை ஹிட்மேயர் வளர்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில், அவர் அவுட்டாகும்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 10 ஓவர்கள் இருந்தன. ஆனால், ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்தான் இல்லை. இருந்திருந்தால் இந்தியாவுக்கு இலக்கு இன்னும் அதிகமாகியிருக்கும். ஏனெனில், கடைசி 10 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அடித்தது 68 ரன்கள்தான்.

பேட்ஸ்மேன்களின் தவறுகள் ஒருபுறமிருக்க, வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டரின் நிறைய முடிவுகள் கேள்வியெழுப்பின. பலம் வாய்ந்த இந்திய பேட்டிங் ஆர்டருக்கு எதிராக ஆறாவது பௌலிங் ஆப்ஷன் இல்லாமல் களமிறங்கினார். சரி, அப்படித்தான் இறங்கினாரே பார்ட் டைம் பௌலர்களையாவது சரியாகப் பயன்படுத்திருக்கவேண்டாமா?! கோலி 70-களில் ஆடிக்கொண்டிருக்கும்போதே "ஹேம்ராஹின் இடதுகைப் பந்துவீச்சைப் பயன்படுத்தவேண்டும்" என்று வர்ணனையில் சொல்லிக்கொண்டிருந்தார் மைக்கேல் ஹோல்டிங். அதைக் கடைசிவரை ஹோல்டர் சிந்திக்கவே இல்லை போல. எல்லாம் முடிந்தபிறகு 41-வது ஓவரில், ஹேம்ராஜ் கையில் பந்தைக்கொடுத்தார். அது எதற்கென்று ஹோல்டருக்குத்தான் வெளிச்சம். எந்த பௌலிங் யூனிட்டையும் அசால்டாக டீல் செய்யும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அதிக ஆப்ஷன்கள் நிச்சயம் வேண்டும். அடுத்த போட்டியில் ஹோல்டர் அதைச் செய்தாகவேண்டும். 

அதேசமயம், இந்தியப் பந்துவீச்சைப் பற்றி என்ன சொல்வது? குல்தீப் யாதவை டெஸ்ட் போட்டிகளில் எடுக்கிறார்கள், ஒருநாள் போட்டியில் வெளியே அமர்த்துகிறார்கள். இது என்ன டிசைன் என்று புரியவில்லை. புவி, பும்ரா இல்லாமல் வேகப்பந்துவீச்சாளர்கள் எந்த திட்டமுமின்றி பந்துவீசுகின்றனர். விக்கெட் எடுக்கும் டெலிவரிகள் வீசுவதேயில்லை. ஏதோ வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் மோசமான ஷாட்களால் அவுட்டானதால் பரவாயில்லை. இல்லையேல் இந்திய பந்துவீச்சு நன்றாக அடிபட்டிருக்கும். இந்தப் போட்டியைப் பார்த்தால் பும்ரா, புவனேஷ்வர் குமார் தாண்டி இந்தியாவுக்கு நல்ல வேகப்பந்துவீச்சாளர் கிடைப்பது கடினமென்று தெரிகிறது. இந்தப் போட்டியின் பேட்டிங் பெர்ஃபாமன்ஸை வைத்து ரவி சாஸ்திரி சந்தோஷப்பட்டுக்கொள்ளாமல், இந்த பௌலிங் பிரச்னைகளை சரிசெய்தால், இந்தியாவின் உலகக் கோப்பை வாய்ப்பு பிரகாசமாகும்!