Published:Updated:

"தோனி ஒரு நாள் அணிக்குத் தேறுவாரா?!" - டிவிலியர்ஸின் 'சிக்ஸர்' பதில்

"தோனி ஒரு நாள் அணிக்குத் தேறுவாரா?!" - டிவிலியர்ஸின் 'சிக்ஸர்' பதில்
"தோனி ஒரு நாள் அணிக்குத் தேறுவாரா?!" - டிவிலியர்ஸின் 'சிக்ஸர்' பதில்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மீதான விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு தென்னாப்பிரிக்காவின் டிவிலியர்ஸ் பதிலளித்திருக்கிறார். 

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இந்தியா வந்துள்ள டிவிலியர்ஸ், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை வெகுவாகப் பாராட்டினார். ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடன் இனைந்து பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடியுள்ள டிவிலியர்ஸ், ``கடந்த சில ஆண்டுகளாக ஒரு கேப்டனாக விராட் கோலி, தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளார். மிகவும் சிறந்த கேப்டனாக அவர் உருவெடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு பேட்ஸ்மேனாக அவர் இன்னும் சில விஷயங்களில் முன்னேற வேண்டி இருக்கிறது. மொத்தத்தில் அவர், தனது கரியரின் உச்சத்தில் இருக்கிறார். விராட் கோலியுடன் பேட்டிங் செய்வது மிகவும் எளிது. நமது எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொண்ட ஒருவருடன் இணைந்து விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கக் கூடியது. கோலி அப்படிப்பட்ட ஒருவர். அவருக்கு ரொனால்டோவை மிகவும் பிடிக்கும். அதனால், அவர் ரொனால்டோ என்றால், நான் மெஸ்ஸி’’ என்று அவர் விளையாட்டாகக் குறிப்பிட்டார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மீதான விமர்சனங்கள் குறித்த கேள்வியை செய்தியாளர் ஒருவர் எழுப்பியவுடன், சிரித்தபடி பதிலளித்த டிவிலியர்ஸ், ``ஒரு ஆண்டின் 365 நாள்களிலும் என்னுடைய அணியில் தோனி இடம்பிடிப்பார். அவருக்கு 80 வயது ஆனாலும், நான் அவரைத் தேர்வு செய்வேன்; அவர் எனது அணிக்காக விளையாடுவதை உறுதி செய்வேன். அவர் ஒரு சிறந்த வீரர்; அவரது ரெக்கார்டுகளைப் பார்த்தாலே இது தெரியும். அப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் அணிக்குத் தேர்வு செய்யாமல் இருப்பீர்களா?. நான் அதை நிச்சயம் செய்ய மாட்டேன்’’ என்றார். சமீபகாலமாக தோனியின் பேட்டிங் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆசியக் கோப்பைத் தொடரில் சரியாக சோபிக்காத அவர், உடனடியாக ஓய்வு பெற வேண்டும் என்ற வாதத்தினை விமர்சகர்கள் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.