Published:Updated:

முகமது அபாஸ்.. பாகிஸ்தானிலிருந்து மற்றறொரு வேகப்புயல்..!

உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை கிரிக்கெட் உலகுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும் பாகிஸ்தான் அணியின் வரிசையில் புதிதாக இடம்பிடித்துள்ளார் முகமது அப்பாஸ். 

முகமது அபாஸ்.. பாகிஸ்தானிலிருந்து மற்றறொரு வேகப்புயல்..!
முகமது அபாஸ்.. பாகிஸ்தானிலிருந்து மற்றறொரு வேகப்புயல்..!

2014-ம் ஆண்டு அபுதாபி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 356 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். 4 ஆண்டுகளுக்கு பிறகு,  அதே மைதானத்தில், அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மீண்டும் மிகப்பெரிய (373 ரன்கள் வித்தியாசத்தில்) வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது பாகிஸ்தான். அதுமட்டுமல்ல, டெஸ்ட் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அடைந்த முதல் வெற்றி இது.


ஒரே போட்டி...10 விக்கெட்டுகள்
அபுதாபியில் சமீபத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட்டில், பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 282 ரன்களுக்கு ஆல்-அவுட். ஆஸ்திரேலிய தரப்பில் உஸ்மான் கவாஜா (3), பீட்டர் சிடில் (4), ஷான் மார்ஷ் 5), ட்ராவிஸ் ஹெட் (14) ஆகியோர் முகமது அபாஸின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பெவிலியனுக்கு திரும்பினார். இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை ஸ்லிப்பில் கேட்ச் கொடுக்கக் கூடாது என கவனமாக விளையாடிய ஷான் மார்ஷ், முகமது அபாஸின் பந்தில் ஹாரிஸ் சோஹைலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இப்படி, ஆஸ்திரேலியா டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு டெக்னிக்கில் வீழ்த்தினார் முகமது அபாஸ். குறிப்பாக, மிட்ச்செல் ஸ்டார்க்கை யார்க்கரில் வீழ்த்தியது வேற லெவல். அபாஸ் வேகத்தில் ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய, முதல் இன்னிங்ஸில் ஆஸி 145 ரன்களில் ஆல் அவுட்.

இரண்டாவது இன்னிங்ஸில் ஃபக்கர்  ஜமான் (66), பாபர் அசாம் (99), சர்ஃபராஸ் அகமது (81) வெளுத்து வாங்க, 409 ரன்களில் டிக்ளேர் செய்தது பாகிஸ்தான். 538 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியை மீண்டும் பதம்பார்த்தார் முகமது அபாஸ். இந்தமுறை இன்னும் உக்கிரமாக..! ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஃபின்ச் (31), மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான டிராவிஸ் ஹெட் (36), மிட்சல் மார்ஷ் (5), லபுஷாங்கனே(43), கேப்டன் டிம் பெயின் (0) என ஒருவர் கூட அபாஸ் வேகத்துக்கு முன் ஈடுகொடுக்க முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரியவே, 164 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா.


 

ரெக்கார்டு வேகம்
தங்கள் அணி விளையாடாத டெஸ்ட் போட்டியை ஃபாலோ செய்வது குறைவு. ஏதேனும் ஆச்சர்யங்கள் நிகழ்ந்தால் மட்டுமே, மற்ற நாடுகளின் டெஸ்ட் போட்டியை உன்னிப்பாக கவனிப்போம். சமீபத்தில், ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை கிரிக்கெட் உலகமே உற்று கவனித்தது. காரணம், முகமது அபாஸ். டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி 18 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், அபுதாபி டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகள் உள்பட, இந்தத் தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி, `யார் இந்த அபாஸ்’ என கவனம் ஈர்த்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் முகமது அபாஸ் எடுத்தது 59 விக்கெட்டுகள். சாரசரி 15.64. அதுமட்டுமல்ல, குறைந்த சராசரி வைத்திருக்கும் டாப் -5 பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களில் அபாஸும் ஒருவர். 10 டெஸ்ட் போட்டிகளில், 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அபாஸ், விரைவில் டெஸ்ட் அரங்கில் நம்பர் -1 இடத்தைப் பிடிப்பார் என்பது நிச்சயம்.

கடந்த 100 ஆண்டுகளில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெஸ்ட் ஆவரேஜ் வைத்திருப்பதால்தான், முகமது அபாஸை ஏகத்துக்கும் புகழ்கிறார்கள் கிரிக்கெட் நிபுணர்கள். அபுதாபி டெஸ்ட் போட்டி முடிவதற்குள்ளேயே, ``டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 பெளலராக இருக்கும் அபாஸ்” என ட்வீட் செய்துவிட்டார் தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன். அதை ஆமோதிக்கும் விதத்தில் இருந்தது ஏபிடியின் ட்வீட். ஸ்டெயின், டி வில்லியர்ஸ் மட்டுமல்ல, முகமது கைஃப், மைக்கல் வாகன் என முன்னாள் வீரர்கள் உள்பட எல்லோரும் `அபாஸ் புராணம்’ பாடியதிலேயே அறியலாம் அவர் பெருமையை..! லைன் அண்ட் லென்த், ரன்களைக் கட்டுப்படுத்துவது, விக்கெட் எடுப்பது என, கிளாசிக் வேகப்பந்து வீச்சாளுக்குத் தேவையான எல்லா பாக்ஸையும் டிக் அடிக்கிறார் அபாஸ்.

கிரிக்கெட் என்ட்ரி
பாகிஸ்தானில் சியல்கோட் லெதர் ஃபேக்டரியில் வெல்டிங் பணி செய்து வந்த அபாஸ், 2009-ம் ஆண்டு முதல் தர கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார்.  2017-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனாலும், இங்கிலாந்து சுற்றுப்பயணம்தான் அவரை இந்த உலகத்துக்கு யாரென காட்டியது.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், 23  ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அபாஸ், இரண்டாவது இன்னிங்ஸில் அலெஸ்டர் குக், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், ஸ்டூவார்ட் ப்ராட் என சாய்த்தது எல்லாமே முக்கிய விக்கெட்டுகள். விளைவு, பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. அந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் அபாஸ்!  பொதுவாக, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் ரன் எடுக்காதவரை அவரை நல்ல பேட்ஸ்மேனாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமல்ல பெளலர்களுக்கும் இது பொருந்தும். அதனால்தான், இங்கிலாந்தில் வைத்து இங்கிலாந்துக்கு தண்ணி காட்டிய `அபாஸ்’ இன்று கவனிக்கப்படுகிறார்.

வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சோயிப் அக்தர், முகமது ஆமிர் என குறிப்பிட்ட இடைவெளியில் உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை கிரிக்கெட் உலகுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும் பாகிஸ்தான் அணி. அந்த வரிசையில் புதிதாக இடம்பிடித்துள்ளார் முகமது அபாஸ். பெஸ்ட் பெளலர் என பெயரெடுப்பது சுலபம். அதைத் தக்கவைப்பது கடினம். இனி பந்து அபாஸ் கையில்..!