Published:Updated:

`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்!’ - கேப்டன் கோலி நம்பிக்கை

`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்!’ - கேப்டன் கோலி நம்பிக்கை
`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்!’ - கேப்டன் கோலி நம்பிக்கை

'பேட்டிங் ஆர்டரில் 4-வது வீரராகக் களமிறங்க அம்பாதி ராயுடு தகுதியானவர்' என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்திருக்கிறார். 

Photo Credit: BCCI

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்குப் பின்னர், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் நாளை முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. 
இந்தப் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ``உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி, 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. அந்தத் தொடருக்கான சிறந்த அணியைத் தேர்வுசெய்வதில் இந்தப் போட்டிகள் முக்கியப் பங்கு வகிக்கும். 

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்தவரை 4-வது வீரராகக் களமிறங்குபவரை முடிவுசெய்ய, அந்த இடத்தில் பல்வேறு வீரர்களைக் களமிறங்கச் செய்தோம். நீண்ட நாள்களாகவே இந்தப் பிரச்னை இருந்துவந்தது. துரதிருஷ்டவசமாக எந்த ஒரு வீரரும் அந்த இடத்துக்குப் பொருத்தமாக இருக்கவில்லை. ஆனால் ராயுடு வந்தபிறகு, அந்தப் பிரச்னை தீர்ந்தது. அந்த இடத்துக்கு அம்பாதி ராயுடு பொருத்தமாக இருப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். ஆசியக் கோப்பை தொடரில் அவர் விளையாடிய விதம் அதை உணர்த்தியது.

உலகக் கோப்பை தொடருக்குத் தயாராவதற்காக அவருக்குப் போதிய வாய்ப்புகள் வழங்குவதே, இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக இருக்கும். 
நான்காவது வீரராகக் களமிறங்க அம்பாதி ராயுடு சரியான தேர்வு. அணி நிர்வாகமும் இதை நம்புகிறது. ஒரு நாள் போட்டிகளைப் பொறுத்தவரை அவரது அனுபவம், அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் மற்றும்          ஐபிஎல் தொடர் ஆகியவற்றில், இதை நானே நேரடியாகப் பார்த்திருக்கிறேன். ராயுடுவின் வருகைக்குப் பின்னர், பேட்டிங் ஆர்டர் பேலன்ஸ் ஆகியிருக்கிறது’’ என்றார்.

கடந்த ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அம்பாதி ராயுடு, அந்தத் தொடரில் 602 ரன்கள் குவித்து அசத்தினார். இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் அணியில் அவர் இடம்பிடித்தார். ஆனால், யோ யோ தேர்வில் தேர்ச்சி பெறாததால், இங்கிலாந்து தொடரில் அவர் விளையாடவில்லை. ஆசியக் கோப்பை தொடருக்கு முன்னதாக யோ யோ டெஸ்டில் தகுதிபெற்ற அம்பாதி ராயுடு, விராட் கோலி இல்லாத நிலையில் மூன்றாவது வீரராகக் களமிறங்கினார். ஆசியக் கோப்பை தொடரில் 6 போட்டிகளில் களமிறங்கிய ராயுடு, 175 ரன்கள் எடுத்தார்.