Published:Updated:

ஆஸ்திரேலியா அணிக்குத் தேர்வான பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரின் மகன்!

ஆஸ்திரேலியா அணிக்குத் தேர்வான பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரின் மகன்!
ஆஸ்திரேலியா அணிக்குத் தேர்வான பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரின் மகன்!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அப்துல் குவாதிரின் மகனான உஸ்மான் குவாதிர், தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக விளையாடும் ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன்  அணிக்குத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில், கடந்த 1977-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை சர்வதேசப் போட்டிகளில் விளையாடியவர், அப்துல் குவாதிர். வலது கை லெக் ஸ்பின்னரான இவர், பாகிஸ்தான் அணியை 5 ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தவும் செய்திருக்கிறார். இவரது மகனான உஸ்மான் குவாதிர், பாகிஸ்தான் அணிக்காக ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறார். தனது தந்தையைப் போலவே லெக் ஸ்பின்னரான உஸ்மான், 2020-ம் ஆண்டு, ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிக்கும் வகையில், கடந்த 2016-ம் ஆண்டு அந்நாட்டுக்குக் குடிபெயர்ந்தார். ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடிவந்த உஸ்மான், தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக விளையாடும் ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணியில் இடம்பிடித்திருக்கிறார். கான்பெரா மைதானத்தில், வரும் 31-ம் தேதி இந்தப் போட்டி நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களுடன் இளம் வீரர்களும் இடம்பெற்றிருக்கும் அந்த அணிக்கு, ஜார்ஜ் பெய்லி கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். 

வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிவரும் உஸ்மான், விக்டோரியா அணிக்கெதிரான தனது அறிமுகப் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிவரும் அவர், 'ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிப்பேன்' என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.