Published:Updated:

`அது மிகவும் பெருமையான தருணம்' - இந்திய அணிக்குத் தேர்வானதை விவரிக்கும் சுப்மன் கில்!

மாரியப்பன் பொ
`அது மிகவும் பெருமையான தருணம்' - இந்திய அணிக்குத் தேர்வானதை விவரிக்கும் சுப்மன் கில்!
`அது மிகவும் பெருமையான தருணம்' - இந்திய அணிக்குத் தேர்வானதை விவரிக்கும் சுப்மன் கில்!

கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற பத்தொன்பது வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட்டில் இந்தியா சாம்பியனாக முழு முதல் காரணமானவர். ஒரு சதம், மூன்று அரைசதங்களோடு தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.

கடந்த சனிக்கிழமை இரவு அவருக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பு அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது எனக் கூறியுள்ளார், இந்த அதிரடி ஆட்டக்காரர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட்போட்டியின்போது ஹனுமத் விஹாரிக்குப் பதிலாக இந்திய அணியில் இடம்பிடித்ததை அறிந்த நிகழ்வு குறித்துதான் இப்படி விவரிக்கிறார் சுப்மன் கில். 

முதலில் தன் நண்பர்கள்தான் விளையாடுகிறார்கள் என்று எண்ணியதாகவும், பின்புதான் நிஜமாகவே ஹனுமத் விஹாரிக்குப் பதிலாக தான் இந்திய அணியில் இடம்பிடித்ததை பி.சி.சி.ஐ-யின் அறிவிப்பு மூலம் தெரிந்துகொண்டதாக அதிர்ச்சி விலகாமல் பேசுகிறார். இதற்காக இந்திய அணியில் இடம் கிடைத்ததால், தற்போது நடக்கும் விஜய் ஹசாரே கோப்பையின் நாக் அவுட் சுற்றுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். 

``அது மிகவும் பெருமையான தருணம், இந்திய அணியின் டிரஸ்ஸிங் அறையில் இடம் கிடைத்ததே நெகிழ்வாக இருக்கிறது. சீனியர் ப்ளேயர்களின் ஆட்டங்களை நேரில் பார்க்கவும், அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளவும் ஆவலாக இருந்தது" எனக் கூறியவர், மேலும் , `` கோலி தான் என் ஆஸ்தான வீரர், அவரோடு சேர்ந்து இருப்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது, நேரம் கிடைக்கும் தருணங்களில் அவரோடு உரையாடி, சில ஆட்ட நுணுக்கங்களைத் தெரிந்துகொள்வேன்" சில நாள்களில் நடக்கவிருக்கும் ரஞ்சிக் கோப்பையில் பஞ்சாபுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணியோடு விளையாடும் இந்த வாய்ப்பு தன்னம்பிக்கை தருவதாக இருக்கிறது" என்றும் அவர் கூறினார்.

உலகக் கோப்பை மட்டுமின்றி தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பையிலும் ஒரு சதம், மூன்று அரைசதம் என வெளுத்து வாங்குகிறார் கில்.