Published:Updated:

வெறும் ஐந்தரை நாள்கள், 520 ஓவர்களில் முடிந்த தொடர்! வெஸ்ட் இண்டீஸ் தொடரால் என்ன லாபம்? #INDvWI

வெறும் ஐந்தரை நாள்கள், 520 ஓவர்களில் முடிந்த தொடர்! வெஸ்ட் இண்டீஸ் தொடரால் என்ன லாபம்? #INDvWI
வெறும் ஐந்தரை நாள்கள், 520 ஓவர்களில் முடிந்த தொடர்! வெஸ்ட் இண்டீஸ் தொடரால் என்ன லாபம்? #INDvWI

10 நாள்கள்... 900 ஓவர்கள் நடந்திருக்க வேண்டிய ஒரு டெஸ்ட் தொடர் வெறும் ஐந்தரை நாள்களிளேயே இழுத்து மூடப்பட்டுவிட்டது. அதுவும் வெறும் 519.2 ஓவர்களில் 7 இன்னிங்ஸ் ஆடப்பட்டுள்ளன. ஒரு ஆட்டத்துக்கான நேரத்தில் ஒரு தொடரே முடிந்துவிட்டதுதான் கொடுமை.

``டெஸ்ட் மேட்ச்னா என்னா?"

``5 நாள் நடக்கற கிரிக்கெட்டுக்குப் பேரு டெஸ்ட் மேட்ச்"

``ஒரு மேட்ச் 5 நாள்னா, ரெண்டு மேட்ச் எத்தன நாள்"

``டூ டூஸ் ஆர் ஃபோர்... த்ரீ டூஸ் ஆர் சிக்ஸ்... ஃபைவ் டூஸ் ஆர் டென்... பத்து நாளு"

``ஒரு நாளுக்கு எத்தன ஓவரு?"

``குறைஞ்சது 90 ஓவர்"

``அப்போ 10 நாளைக்கு?"

``தொள்ளாயிரம்"

10 நாள்கள்... 900 ஓவர்கள் நடந்திருக்க வேண்டிய ஒரு டெஸ்ட் தொடர் வெறும் ஐந்தரை நாள்களிலேயே இழுத்து மூடப்பட்டுவிட்டது. அதுவும் வெறும் 519.2 ஓவர்களில் 7 இன்னிங்ஸ்கள் ஆடப்பட்டுள்ளன. ஒரு போட்டிக்கான நேரத்தில் ஒரு தொடரே முடிந்துவிட்டதுதான் கொடுமை. கடந்த 10 ஆண்டுகளாக கிரிக்கெட் சந்தித்த பரிணாமம், டெஸ்ட் கிரிக்கெட்டை கொஞ்சம் கொஞ்சமாகக் கிழிப்பது தொடர்ந்துகொண்டிருக்கிறது. உலகறிந்த இந்த விஷயத்தை ஏன் திரும்பத் திரும்பப் பேசவேண்டும். அதில் இந்தியாவின் பங்கு அதிகமாக இருப்பதனால்தான்!

இந்தத் தொடர் ஆரம்பித்தபோது, `வெஸ்ட் இண்டீஸ் கூடல்லாம் எதுக்காக ஆடிட்டு இருக்காங்க?' என்று சலித்துக்கொண்டார்கள் சில ரசிகர்கள். அவர்களின் கேள்வியை நியாயப்படுத்தும் வகையில்தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டமும் அமைந்தது. ஆனால், உண்மையில் இது இந்தியாவுக்கு ஒரு தேவையான தொடர்தான். என்னதான் ஆசியக் கோப்பையை வென்றிருந்தாலும், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிரான தொடர்தான் அனைவரின் கண்முன்னும் வந்துபோகும். ஆஸ்திரேலிய மண்ணில் மனதளவில் தைரியமாக விளையாட இந்தியாவுக்கு வெற்றி தேவைப்பட்டது. அது இந்தத் தொடரின்மூலம் கிடைத்திருக்கிறது. அதேவேளை, இந்திய அணியின் அணித்தேர்வில் நிலவிய குழப்பங்களுக்கு விடை தேட வேண்டியிருந்தது. அதற்கும் இந்தத் தொடர் உதவி செய்திருக்கிறது. 

தொடர்ச்சியாக சொதப்பிவரும் ஓப்பனர்களுக்கான மாற்று யார், நிரந்தர விக்கெட் கீப்பர் யார், ஆல்ரவுண்டர் யார் எனச் சிலபல கேள்விகளுக்கு இந்திய அணிக்கு இந்தத் தொடரில் ஓரளவு பதில் கிடைத்துள்ளது. முதல் தொடரிலேயே தொடர் நாயகனாகியுள்ள பிரித்வி ஷா, இப்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் நம்பர் 1 ஓப்பனர். விளையாடிய 2 இன்னிங்ஸ்களிலும் தலா 92 ரன் எடுத்து ``ஃபார்மில் இருக்கும் கீப்பருக்குத்தான் ஆஸ்திரேலியா வாய்ப்பு" என்று ரவி சாஸ்திரியிடம் சான்றிதழ் வாங்கிவிட்டார் ரிசப் பன்ட். 1 சதம், 7 விக்கெட் என பாண்டியாவின் இடத்துக்கு டஃப் கொடுக்கிறார் ரவீந்திர ஜடேஜா. இந்திய நிர்வாகம் எதிர்பார்த்த வெற்றியும், பதில்களும் கிடைத்துவிட்டது என நாம் சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம். ஆனால்..!

இந்தக் கொண்டாட்டத்துக்கு மத்தியில் சில உண்மைகளை யோசிக்க மறந்துவிடுகிறோம். கவாஸ்கரும், மஞ்ச்ரேகரும் புகழ்ந்து தள்ளியதில் பிரித்வி ஷாவை கேள்வியே இல்லாமல் நாம் ஏற்றுக்கொண்டுவிட்டோம். முதல் தொடர் முடிந்ததுமே குற்றம் சொல்வதும் தவறுதான். ஆனால், சில உண்மைகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஐந்தரை ஆண்டுகள் முன்னால் சென்று பார்த்தால், ஷிகர் தவானின் டெஸ்ட் வாழ்க்கை இப்படித்தான் தொடங்கியது. முதல் போட்டியிலேயே அதிரடியாக டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கியவர், ஆசியாவுக்கு வெளியே வைத்திருக்கும் சராசரி 31.40. தவானின் பேட்டிங் டெக்னிக் இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் சுத்தமாக எடுபடாது. பந்தின் மூவ்மென்டை அவர் சரியாகக் கணிக்காமல்தான் பெரும்பாலும் விரைவில் வெளியேறுவார். ஒருநாள் போட்டிகளைப் போல் டெஸ்ட் போட்டியை அணுகியதே அவரது இடம் பறிபோகக் காரணம்.

பிரித்வியின் ஆட்டத்தில் அதே அணுகுமுறை இருப்பதுதான் இப்போது அவர்மீதான இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது. டெஸ்ட் போட்டியில் ஒரு வீரர் `டாட் பால்' ஆடுவது மிக முக்கியம். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போகும் பந்தை விடுவதால், ஸ்ட்ரோக் செய்வதால், ஓர் அதி அற்புதமான பந்தை டிஃபண்ட் செய்வதால், அடித்த பந்து ஃபீல்டரால் தடுக்கப்படுவதால் டாட் பால்கள் வரும். பிரித்வி ஆடிய டாட் பால்கள் பெரும்பாலும் நான்காம் ரகம். ஸ்ட்ரோக் வைத்ததும், பந்துகளை ஆடாமல் விட்டதும் மிக மிகச் சொற்பம். ஆஃப் சைட் மிகவும் வெளியே செல்லும் பந்துகளையும், தோளுக்கு மேலே வரும் பந்துகளையும் மட்டுமே ஆடாமல் விடுகிறார். ஸ்ட்ரோக்... ஆடுவதே இல்லை. அனைத்துப் பந்துகளையும் அடிக்கவே முற்படுகிறார். முதல் டெஸ்டில் பல ஷாட்கள் எட்ஜாகி பௌண்டரி ஆனது. இரண்டாவது டெஸ்டிலும் அதேதான். 

ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ். 11.2-வது ஓவர். வாரிகேன் பந்தில், ஷா கட் ஷாட் அடிக்க, எட்ஜாகி ஸ்லிப் ஏரியாவுக்குச் சென்றது. அங்கு நின்றிருந்த ஷாய் ஹோப் அதைத் தவற விடுகிறார். வர்ணனையாளர்களாக இருந்த மஞ்ச்ரேக்கர், கவாஸ்கர் இருவரும் ஸ்லிப் ஃபீல்டர் எப்படியெல்லாம் தயாராக இருக்கவேண்டும் என்று பாடம் எடுக்க ஆரம்பிக்க, ஷா ஆடிய மோசமான ஷாட் யார் கண்ணுக்கும் தெரியவில்லை. ஃப்ளாட்டான பிட்சில், `இந்தப் பந்துகள் தரமற்றவை' என்று கோலியால் குற்றம்சாட்டப்பட்ட SG பந்துகளில், இந்த வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை எதிர்கொள்வதும்... பௌன்ஸ் நிறைந்த ஆடுகளங்களில், அதிக மூவ்மென்ட் கொடுக்கும் கூக்கபர்ர பந்துகளில், மிட்செல் ஸ்டார்க், பீட்டர் சிடில், நாதன் லயான் கூட்டணியை எதிர்கொள்வதும் ஒன்றல்ல. பேட்ஸ்மேனின் டெக்னிக் அங்கு மிகமுக்கியம். ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேனாக, பிரித்வி ஷா அங்கு எந்தளவுக்கு ஜொலிப்பார் என்பது சந்தேகம்தான்.

இந்தக் கேள்வி அவரோடு மட்டும் நின்றுவிடவில்லை. ரிசப் பன்ட், ஜடேஜா என அனைவரையும் தொடர்கிறது. பன்ட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 92, 92 என அவுட்டானார். இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா தடுமாறியபோது ரஹானேவுடன் நல்ல கூட்டணி அமைத்தார். ஆனால், நேற்று நடந்த மூன்றாவது நாள் ஆட்டத்தைக் கவனித்தால் அங்கும் சில கேள்விகள் எழுகின்றன. ரஹானே, பன்ட் இருவரும் இரண்டாவது நாளன்று இந்திய அணியின் இன்னிங்ஸைக் கட்டமைத்தபோது அந்தப் பந்து ரொம்பவுமே பழையதாகியிருந்தது. ஒருவேளை அவுட்ஸ்விங் ஆகியிருக்கும். ஆனால், 11 ஓவர்கள் பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர்களுக்குக் கொஞ்சம் கூட பந்து ஒத்துழைக்கவில்லை. அந்தக் கூட்டணி பெரும்பாலும் சந்தித்தது சுழலைத்தான் (இரண்டாவது நாளில் 27.1 ஓவர்கள்). அதனால் மிக எளிதாக ரன் சேர்த்துவிட்டனர். 

மூன்றாவது நாள் காலை... புதிய பந்தை எடுக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர். அடுத்த 6 ஓவர்களில் ரஹானே, ஜடேஜா, பன்ட் என அனைவரும் அவுட். பந்தின் பௌன்ஸைக் கணிக்காமல் ரஹானே வெளியேறினார். `அரௌண்ட் தி ஸ்டம்ப்' லைனில் வந்த பந்தின் மூவ்மென்ட்டில் தடுமாறி வெளியேறுகிறார் ஜடேஜா. பன்ட் சந்தித்த அந்தப் பந்து, பழைய பந்தாக இருந்திருந்தால் அவ்வளவு பௌன்ஸ் ஆகியிருக்காது. லாங் ஆஃப் திசையில் விளாசியிருக்கலாம். ஆனால், புதிய பந்து ஷாட் ஆடுவதற்கான டைமிங் தரவில்லை. கவர் பாயின்ட் ஃபீல்டரிடம் கேட்ச். ரஹானே அவுட் ஆஃப் ஃபார்ம். இந்த இன்னிங்ஸை வைத்து அவர் ஆஸ்திரேலியாவில் விளையாடுவார் என்று நம்பிக்கை கொள்ள முடியாது. ஆனால், சொதப்பல் தொடரும் என்றும் சொல்ல முடியாது. ஏனெனில், டெஸ்ட் போட்டியின் டெக்னிக் அறிந்த வீரர் அவர். ஆனால், பன்ட், ஜடேஜா அப்படியில்லை... இந்திய ஆடுகளத்திலேயே ஒரு புதிய பந்துக்குத் தாங்கவில்லை அவர்களின் டெக்னிக். இவர்கள்தான் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளப்போகிறார்கள். 

ஒருவேளை மயாங்க் அகர்வால், ஹனுமா விஹாரி இருவரும் விளையாடியிருந்தால் அவர்களுக்கு இந்தத் தொடர் ஒரு நம்பிக்கையாக இருந்திருக்கும். இருவருமே ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் விளையாடக்கூடிய, டெஸ்ட் கிரிக்கெட்டின் டெக்னிக் கொண்டிருக்கும் வீரர்கள். ஆனால், அவர்களுக்கு முன் இந்திய அணியில் விளையாடியதெல்லாம் பிரித்வி, ஹர்டிக் பாண்டியா என ஐ.பி.எல், டி-20 போட்டிகளில் கலக்கியவர்கள். சமீப காலமாகவே இந்திய அணியின் அணித்தேர்வு அப்படித்தான் இருக்கிறது. இந்த ஆண்டு அறிமுகமான 5 வீரர்களில் (ஜஸ்பிரீத் பும்ரா, ரிசப் பன்ட், ஹனுமா விஹாரி, பிரித்வி ஷா, ஷர்துல் தாக்கூர்) நால்வர் ஐ.பி.எல் தொடரின்மூலம் அடியெடுத்துவைத்தவர்கள். 

இந்த வீரர்கள் வெளிநாட்டுத் தொடரில், டி-20, ஒருநாள் போட்டியைப் போலவே விளையாடினால் அங்கு இந்தியாவும் இதேபோல் இரண்டரை நாள்களில், மூன்று நாள்களில் சரண்டர் ஆகிவிடும். ``ஐ.பி.எல் தொடர் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டை அழித்துவிட்டது" என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் கார்ல் ஹூப்பர் வருந்தியிருந்தார். இதோ அப்பட்டமாகக் கண்முன் தெரிகிறதா. ரேஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர் கூட்டணி தவிர்த்து மற்ற அனைவருமே ஒருநாள் போட்டியைப் போலவே ஆடினார்கள். விளைவு - ஐந்தரை நாள்களில் தொடரே முடிவுக்கு வந்துவிட்டது. நடப்பு டி-20 சாம்பியன். ஆனால், `இவர்களோடு எதற்குத் தொடர்' என்று நாம் கலாய்க்கும் நிலையில்தானே இருக்கிறது அவர்கள் நிலை. 

இங்கிலாந்து தொடரில், பிர்மிங்ஹம் டெஸ்டில் மூன்றரை நாள்களிலும், லார்ட்ஸில் இரண்டரை நாள்களிலும் வீழ்ந்தது இந்தியா. வெளிநாடுகளில் நமக்கும் இந்த நிலை வந்துள்ளது. இப்படியே டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகிக்கொண்டிருந்தால் ஆஸ்திரேலியாவிலும் அது தொடரலாம். ஒரே ஆறுதல் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், நம்பிக்கை என எதுவுமே இல்லாமல் இருக்கும் ஆஸ்திரேலியாவைச் சந்திப்பதுதான். டி-20 மட்டுமே கிரிக்கெட் இல்லை. அந்த அணுகுமுறையோடு அனைத்து ஃபார்மட்டிலும் விளையாடினால், சீக்கிரம் 5 நாள் ஆட்டங்களுக்கு முடிவுரை எழுதிவிடலாம்.

அடுத்த கட்டுரைக்கு