Published:Updated:

`கபில் தேவ், ஸ்ரீநாத் வரிசையில் உமேஷ் யாதவ்!’ - இந்திய அணிக்கு 72 ரன்கள் இலக்கு #INDvWI

`கபில் தேவ், ஸ்ரீநாத் வரிசையில் உமேஷ் யாதவ்!’ - இந்திய அணிக்கு 72 ரன்கள் இலக்கு #INDvWI
`கபில் தேவ், ஸ்ரீநாத் வரிசையில் உமேஷ் யாதவ்!’ - இந்திய அணிக்கு 72 ரன்கள் இலக்கு #INDvWI

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 72 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 

Photo Credit: ICC

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் சேர்த்திருந்தது. 

முந்தைய நாள் ஸ்கோருடன் இந்திய அணியின் இன்னிங்ஸை ரஹானே மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோர் தொடங்கினர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சில் சிக்கிய இந்திய வீரர்கள், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி, 59 ரன்களுக்கு கடைசி 6 விக்கெட்டுகளை இழந்தது. ரிஷப் பன்ட் 92 ரன்களும், ரஹானே 80 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி, 106.4 ஓவர்களில் 367 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்டன் ஹோல்டர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

இதையடுத்து, 56 ரன்கள் பின்தங்கியநிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்தியப் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். முதல் ஓவரிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த உமேஷ் யாதவ், தொடக்க வீரர் பிராத் வொய்ட் விக்கெட்டை வீழ்த்தினார். மற்றொரு தொடக்க வீரர் பவெல், அஷ்வின் சுழலில் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி, 3.3 ஓவர்களில் 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. இதைத் தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 46.1 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணி தரப்பில் அம்ப்ரீஸ் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார்.

Photo Credit: ICC

இந்திய அணி தரப்பில், உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளும் ஜடேஜா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 72 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளும் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையில் கபில் தேவ், ஸ்ரீநாத் ஆகியோர் வரிசையில் உமேஷ் யாதவும் இடம்பிடித்தார்.