Published:Updated:

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 5 பௌலர்கள் எதற்கு? ஹைதராபாத் ரசிகர்கள் பாவம்! #INDvWI

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 5 பௌலர்கள் எதற்கு? ஹைதராபாத் ரசிகர்கள் பாவம்! #INDvWI
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 5 பௌலர்கள் எதற்கு? ஹைதராபாத் ரசிகர்கள் பாவம்! #INDvWI

'மயாங்க் அகர்வால் ஆடியிருக்கவேண்டும்' என்பதுதான் பெரும்பாலானவர்களின் வாதம். ஆனால், அவர் இன்று களமிறங்கியிருந்தால் அது அவருக்கே ஆபத்தாகியிருக்கும்!

முதல் போட்டியை மூன்றாவது நாளிலேயே வென்று விட்டதால், இதுதான் கடைசி டெஸ்ட் போட்டி என்பதால், இந்திய அணியில் சிலபல மாற்றங்கள் வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் போட்டிக்கு அறிவிக்கப்பட்ட 12 பேர் கொண்ட அணியையே மீண்டும் அறிவித்துள்ளது இந்திய அணி. அகர்வாலை இறக்கியிருக்கலாம், ஷர்துலை இறக்கியிருக்கலாம் என சமூக வலைதளங்களில் பல கருத்துகள். கடந்த போட்டியில் ஆடாத நால்வரில் ஒருவருக்காவது இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக வாய்ப்பு வழங்கியிருக்கலாம் என்பது பலரது கருத்து. இப்போது ஷர்துல் தாக்கூர் மட்டுமே அந்த வாய்ப்பில் நீடிக்கிறார். இந்திய அணியின் இந்த முடிவு ரொம்பவே தவறானது. அதுவும் விஹாரி புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

'மயாங்க் அகர்வால் ஆடியிருக்கவேண்டும்' என்பதுதான் பெரும்பாலானவர்களின் வாதம். ஆனால், அவர் இன்று களமிறங்கியிருந்தால் அது அவருக்கே ஆபத்தாகியிருக்கும்! தவான், விஜய் இல்லாத தொடரில், கே.எல்.ராகுல் தன்னால் முடிந்த அளவுக்குத் தன்னை நிரூபிக்கப் பார்ப்பார். அதுவும் முதல் போட்டியில் டக் அவுட் ஆன பிறகு, இரண்டு ஜூனியர்களுக்கு வழிவிடமாட்டார். மிடில் ஆர்டரில் களமிறங்க அவர் முன்வருவதும் சந்தேகம். அறிமுக போட்டியில் சதமடித்த பிரித்வி ஷா எப்படியும் அந்த இடத்திலிருந்து நகர்த்தப்படமாட்டார். அதனால் அகர்வால் வாய்ப்பு பெற்றிருந்தாலும் அவர் மிடில் ஆர்டரில்தான் இறக்கிவிடப்பட்டிருப்பார். ஆனால், அது அகர்வாலைத்தான் பாதிக்கும். 

முதல் தரப் போட்டிகளில் ஓப்பனராகப் பட்டையைக் கிளப்பிய மயாங்க், இந்த ஐ.பி.எல் தொடரில் கிறிஸ் கெய்ல் - கே.எல்.ராகுல் கூட்டணியால் கிங்ஸ் லெவன் அணியில் ஓப்பனிங் ஸ்லாட்டை இழந்தார். மிடில் ஆர்டரில் சோபிக்க முடியாமல் அணியிலும் இடத்தை இழந்தார். ஒருவேளை அவர் ஐ.பி.எல் தொடரில் சோபித்திருந்தால் பிரித்விக்கு முன்னதாகவே இந்திய அணிக்கு ஆடியிருப்பார். அந்தத் தொடரை வைத்துத்தானே பெரும்பாலும் அணித்தேர்வு நடக்கிறது. ஒருவேளை அவர் மிடில் ஆர்டரில் இறக்கப்பட்டு இந்த முறை சோபிக்கவிட்டால் அவ்வளவுதான். இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இரண்டாவது இன்னிங்ஸ் வாய்ப்பே கிடைக்காது. இரண்டாவது டெஸ்ட் வாய்ப்பை புதியதொரு தொடரில் நம்மவர்களும் தரமாட்டார்கள். ஆஸ்திரேலிய தொடருக்கு தவான் அல்லது விஜய் இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். அகர்வால் கருண் நாயரோடு சேர்ந்து கர்நாடகாவுக்கு மட்டும் ஆடும் நிலை ஏற்படும். இப்படியான ஒரு சோதனை முயற்சியைவிட, அறிமுகமாகாத வீரராகவே அகர்வாலை ஆஸ்திரேலியா அழைத்துச் செல்லலாம். சிலபல வாய்ப்புகள் கொடுத்தபிறகு அவரைப்பற்றிய முடிவு எடுக்கலாம். அதனால், அகர்வால் விளையாடாமல் இருப்பதே நலம். 

ஆஸ்திரேலிய தொடரில் கோலி இரண்டு ஸ்பின்னர்களையும் களமிறக்கினால்கூட குல்தீப் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கமாட்டார். ஒருவேளை 4 பௌலர்களை மட்டும் (பாண்டியா சேர்க்காமல்) களமிறக்கினால் விஹாரிதான் ஏழாவது பேட்ஸ்மேன். அவரது ஆஃப் ஸ்பின் கைகொடுக்கக்கூடும் என்பதால் அதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால், அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கவேண்டும். சமீப காலமாக ரஹானே சொதப்பி வருவதால், பேக் - அப் வீரரை நம்பிக்கையோடு வைத்திருத்திருக்கவேண்டும். அதைச் செய்ய இந்தியா தவறியிருக்கிறது.  நிச்சயம் ஏழாவது பேட்ஸ்மேனாக விஹாரியை களமிறக்கியிருக்கலாம். சீக்கிரமே வெளியேறும் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 பௌலர்கள் ஆடவேண்டிய அவசியமே இல்லை. 

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு இந்தியா 8 பௌலர்களோடு செல்லும். இந்த 3 ஸ்பின்னர்களுமே ஸ்குவாடில் இடம் பிடிப்பார்கள். மிச்சமுள்ள அந்த 5 ஸ்லாட்களை புவி, பும்ரா, ஷமி, இஷாந்த், உமேஷ் ஆகியோர் நிரப்பிவிடுவார்கள். அதனால் இந்தப் போட்டியில் அறிமுகமாவதால், சிறப்பாக செயல்படுவதால் சிராஜ், ஷர்துல் ஆகியோரால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்திட முடியாது. ஆனால், பிளேயிங் லெவனில் எந்த 3 (அல்லது 2) வேகப்பந்துவீச்சாளர்களைக் களமிறக்குவது என்ற குழப்பம் நிச்சயம் கோலிக்கு ஏற்படும். அதற்காக உமேஷ், ஷமி இருவரையும் தொடர்ந்து சோதிப்பது அவசியம். அதனால் அவர்கள் இருவரும் கட்டாயம் விளையாடியிருக்க வேண்டும். அப்படி ஷர்துலுக்கு வாய்ப்புக்கொடுப்பதற்காக குல்தீப்பை தூக்கியிருக்கலாம். ஏனெனில், இந்தியா ஆஸ்திரேலியாவில் 3 ஸ்பின்னர்களைக் களமிறக்கப்போவதில்லை. ஷமியை நீக்கியது தவறு. 

அதே சமயம், ஷிராஜுக்கு முன்பாக ஷர்துலுக்கு வாய்ப்புக்கொடுப்பதெல்லாம் எதில் சேர்ப்பது என தெரியவில்லை. கடைசியாகப் பந்துவீசிய 3 முதல் தரப் போட்டிகளில் (5 இன்னிங்ஸ்கள்) 25 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் முகமது சிராஜ். முதல் தரப் போட்டிகளில் 38.3 என அற்புதமான ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கிறார். அதாவது ஒவ்வொரு 38.3 பந்துகளுக்கும் ஒரு விக்கெட். அதேசமயம் ஷர்துல் தாக்கூரின் முதல் தர ஸ்டிரைக் ரேட் 54.6. அணியில் சேர்க்கப்பட்டிருப்பது இவர்தான். லிமிடட் ஓவரில் விளையாடியதற்காக அவர்தான் அணியில் சேர்க்கப்படுகிறார். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டவர் இன்னும் வெளியில்தான் அமர்த்தப்படவுள்ளார். இந்திய அணியின் இந்த மோசமான செலக்ஷன் முறை, டெஸ்ட் அணியை எங்கோ கொண்டுபோய் நிறுத்தப்போகிறதோ! ஆஸ்திரேலிய தொடரை மனதில் வைத்துத்தான் அணியைத் தேர்வு செய்யவில்லை. குறைந்தபட்சம் போட்டி நடக்கும் ஊரையாவது மனதில் வைத்து அணியைத் தேர்வு செய்திருக்கலாம். பாவம் ஹைதராபாத்!

ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் கடைசியாக ஒருநாள் போட்டி நடந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதுவும் தோனி, ரோஹித், புவனேஷ்வர் குமார் என்று யாருமே இல்லாத அணி. முதல் முறையாக 2017-ல் டி-20 போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவுடனான அந்தப் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2013-ம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த பிப்ரவரியில் ஒரு டெஸ்ட் போட்டி மட்டும் நடந்தது. அதுவும் வங்கதேசத்தோடு! 'யார் வெல்வார்' என்ற பரபரப்பு டாஸ் போடும்போது மட்டும்தான் இருந்தது. கிளைமேக்ஸ் தெளிவாகத் தெரிந்தபின் படம் பார்த்தார்கள் ஹைதராபாத் ரசிகர்கள். இந்த 5 ஆண்டுகளில் அங்கு நடந்த ஒரே போட்டி அதுதான். இப்போது இரண்டாவது போட்டி. அதுவும் இரண்டரை நாளில் டெஸ்ட்டுக்கு ஃபுல் ஸ்டாப் வைக்கக்கூடிய இந்த வெஸ்ட் இண்டீஸ் அணியோடு. 

வெறுமனே கோலியின் சதமும், அஷ்வினின் விக்கெட் வேட்டையும் மட்டும் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்காது. சமமான போட்டி இருக்கவேண்டும். அப்படி சமமான போட்டி இந்த ஆட்டத்தில் இருக்கப்போவதில்லை. இத்தனைக்கும் அந்த வங்கதேச டெஸ்ட் போட்டியில் சதமடித்த முரளி விஜய், ரித்திமான் சஹா ஆகியோர் இப்போது அணியிலேயே இல்லை. அதனால் வீரர்களின் தனிப்பட்ட பெர்ஃபாமன்ஸைத்தான் கொண்டாடியாகவேண்டும். அதுவும் அணியில் உள்ளூர் வீரர் இருந்தால் அது டபுள் கொண்டாட்டம்! ஹைதராபாத் அணிக்காக 8 ஆண்டுகள் ஆடிவரும் விஹாரியின் ஆட்டம் அவர்களுக்கான ஆறுதலாக இருந்திருக்கும். அவரது இன்னிங்ஸுக்காகவாவது ஹைதராபாத் ரசிகர்கள் இந்த சுமார் ஆட்டத்தை ரசித்திருப்பார்கள். கடந்த 5 ஆண்டுகளில் பிரமாதமான ஒரு சர்வதேச ஆட்டத்தைக்கூட பார்த்திடாத இந்த ரசிகர்களுக்காக, அதையாவது செய்திருக்கலாம். உங்கள் டீம் செலக்ஷனைப் பார்த்து நாடே வியக்கு!

அடுத்த கட்டுரைக்கு