Published:Updated:

அறிமுக டெஸ்ட்டில் 6 விக்கெட்... ஆஸி-யை மிரட்டிய பிலால் ஆசிஃப் யார்?

6 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள பிலால், ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்.

அறிமுக டெஸ்ட்டில் 6 விக்கெட்... ஆஸி-யை மிரட்டிய பிலால் ஆசிஃப் யார்?
அறிமுக டெஸ்ட்டில் 6 விக்கெட்... ஆஸி-யை மிரட்டிய பிலால் ஆசிஃப் யார்?

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. துபாயில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அனுபவ வீரர் முகமது ஹஃபீஸ் தன் பங்குக்கு சதம் அடிக்க, டெஸ்ட் அரங்கில் தன் முதல் சதத்தைப் பதிவுசெய்தார் ஹாரிஸ் சோஹைல். இதனால், பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 482 ரன்கள் குவித்தது.

கவாஜா, கேப்டன் டிம் பெய்ன், ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மார்னஸ், நாதன் லியான் என முக்கிய விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆல் அவுட்டாகக் காரணமாக இருந்தார் பிலால் ஆசிஃப். 7 மெய்டன் உட்பட 21.3 ஓவர்களில் 36 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸிலேயே 6 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் ஈர்த்துள்ளார் ஆசிஃப். சர்வதேச டெஸ்ட் அரங்கில் அடியெடுத்து வைத்த முதல் போட்டியிலேயே `யார் இந்த ஆசிஃப்’ எனப் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளார்.

ஆமாம், யார் இந்த ஆசிஃப்?

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் அருகே, அலூ மகார் ஷெரிஃப் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த பிலால் ஆசிஃப், 2017-ம் ஆண்டு, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றார். வலது கை ஆஃப் ஸ்பின்னரான ஆசிஃப், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம்பெற்றிருந்தார். ஆனாலும், ப்ளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்தான் அவரது அறிமுக டெஸ்ட் போட்டி.

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இவரின் பவுலிங் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து ஐ.சி.சி-யின் அங்கீகாரம் பெற்ற, சென்னையில் ராமச்சந்திரா மருத்துவமனை வளாகத்தில் உள்ள பரிசோதனை மையத்தில் அவரது பந்துவீச்சு குறித்து பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனையில் அவரது பந்துவீச்சு முறையாக இருப்பது தெரியவந்தது. ஓராண்டுக்குப் பிறகு, துபாயில் நடைபெறும் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் பிலால் தேர்வானார்.

முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான உஸ்மான் கவாஜா (85), ஆரோன் ஃபின்ச் (62) மட்டுமே பாகிஸ்தான் பந்துவீச்சைச் சமாளித்து ஆடினர். 160/1 என்றிருந்த நிலையில், ஷான் மார்ஷ், பிலாலின் பந்தை எதிர் நோக்க, ஸ்லிப்பில் இருந்த ஷாரிக் கேட்ச் பிடிக்க, அறிமுக டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸிலேயே தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார். ஆர்ப்பாட்டம் இல்லாத கொண்டாட்டத்தை வெளிப்படுத்திய பிலால், அடுத்தடுத்து நிகழ்த்தியவை எல்லாம் மாயாஜாலம்!

பிலாலின் பந்து வீச்சில் பேடில் ஸ்வீப் செய்த கவாஜாவின் கேட்ச்சை இமாம்-உல்-ஹக் பிடிக்க, ஆஸ்திரேலிய அணியின் முக்கிய விக்கெட் பறிபோனது. ஆஸ்திரேலிய அணியில் முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றுள்ள டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஸ்சாங்கே இருவரையும் டக் அவுட்டில் பெவிலியனுக்கு அனுப்பிவைத்தார் ஆசிஃப். 

தடுமாறிக் கொண்டிருந்த ஆஸ்திரேலியா அணிக்கு ரன் சேர்க்க கேப்டன் டிம் பெயின் களம் இறங்கினார். ஆனால், பிலாலின் ஸ்பின் மேஜிக்கில் அவரும் சிக்கிக் கொண்டார். ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், பிலால் ஆசிஃப் பந்து வீச்சுக்கு நாதன் லியோன் ஆட்டமிழந்தார்.

ஆசிஃபின் மிரட்டல் பந்துவிச்சால், ஆஸி., அணியின் ரன் குவிப்பு சரிந்தது. அறிமுக டெஸ்ட் போட்டியில், சிறந்த பவுலிங் ஃபிகர் கொண்ட பாகிஸ்தான் அணி வீரர்களின் பட்டியலில், பிலால் ஆசிஃபின் நேற்றைய ஆட்டம் மூன்றாம் இடம் பிடித்தது. 1996-ம் ஆண்டு, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 66 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் எடுத்த முகமது சாகித், 1969-ம் ஆண்டு, 99 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் எடுத்த முகமது நாசீர் ஆகியோரின் ரெக்கார்டுகள் முன்னிலையில் உள்ளன.

160/1 என்று ஆஸ்திரேலியா வலிமையான அஸ்திவாரம் அமைத்தப்போதும், அதை தன் மாயாஜால ஆஃப் ப்ரேக் பவுலிங் மூலம் தகர்த்து எறிந்திருக்கிறார் ஆசிஃப். டெஸ்ட் போட்டி உங்களை அன்புடன் வரவேற்கிறது ஆசிஃப்!