

மொகாலி: மொகாலியில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
மொகாலியில் நடந்த 20வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில், வழக்கம் போல் கேப்டன் கில்கிறிஸ்ட் (7) சொதப்பினாலும், அடுத்து வந்த வீரர்கள் ஓரளவு நிலைத்து நின்று ஆடினர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மன்தீப்சிங் 41 ரன்கள் எடுத்தார்.
சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை தொடர்ச்சியாக வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். இந்த 6வது ஐ.பி.எல். தொடரில் நிகழ்த்தப்பட்ட முதல் ஹாட்ரிக் சாதனை இது தான். இதனால் பஞ்சாப் அணி மீண்டும் நிலைகுலைந்தது.
இந்த சூழலில் 7-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய மன்பிரீத் கோனி, யாரும் எதிர்பாராத வண்ணம் விசுவரூபம் எடுத்தார். நரின் வீசிய 19வது ஓவரில் மட்டும் 2 சிக்சரும், ஒரு பவுண்டரியும் விரட்டினார். இந்த ஓவரில் மட்டும் சுனில் நரின் 23 ரன்களை வாரி இறைத்தார்.
இறுதிகட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்திய கோனி 18 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 42 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். அவரது அதிரடியால் சவாலான ஸ்கோரை எட்டிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது.
அடுத்து ஆடிய கொல்கத்தாவுக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பிரவீன்குமார் பந்தில் பிஸ்லா, விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த காலிசும் (1) வந்த வேகத்தில் நடையை கட்டினார்.
இதைத் தொடர்ந்து கேப்டன் கவுதம் கம்பீரும், இயான் மோர்கனும் ஜோடி சேர்ந்து சிக்கலில் தத்தளித்த அணியை மீட்டதுடன் ஸ்கோரையும் கணிசமாக உயர்த்தினர். கம்பீர் தொடர்ந்து தனது 3வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இருவரும் விளையாடிய விதத்தை பார்த்த போது, கொல்கத்தா அணி எளிதில் வெற்றியை நெருங்கும் என்றே தோன்றியது.
அணியின் ஸ்கோர் 106 ரன்களாக இருந்த போது கம்பீர் 60 ரன்களில் ஆட்டம் இழந்தார். அது மட்டுமின்றி கோனி தனது கடைசி 3 ஓவர்களில் வெறும் 7 ரன்களே விட்டுக்கொடுத்து கொல்கத்தாவை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கினார். இதைத் தொடர்ந்து மோர்கனும் 47 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
##~~## |