

பெங்களூர்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி- பெங்களூர் அணிகளுக்கு எதிரான ஆட்டம் சமன் அடைந்த நிலையில் சூப்பர் ஓவரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி பெற்றது.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தி்ல் நேற்றிரவு நடந்த 21வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்-பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் டெல்லியை பேட் செய்ய அழைத்தது. இதன்படி பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் கேதர் ஜாதவ் 29 ரன்னும், சேவாக் 25 ரன்னும் எடுத்தார்.
153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் 12 ரன்களிலும், கிறிஸ் கெய்ல் 13 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். ஐ.பி.எல். போட்டியில் 2 ஆயிரம் ரன்களை கடந்த 6வது வீரர் என்ற பெருமையை கெய்ல் பெற்றுள்ளார்.
இதன் பிறகு கேப்டன் விராட் கோலியும், டிவில்லியர்சும் இணைந்து பிரமாதமாக ஆடினர். அணியை வெற்றி பெற வைப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், டிவில்லியர்ஸ் 39 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதன் பிறகு ஆட்டத்தின் போக்கு மாறியது. கிடுகிடுவென விக்கெட்டுகள் சரிந்ததுடன், கோலியும் (65) 19வது ஓவரில் ஆட்டம் இழந்தார்.
கடைசி ஓவரில் பெங்களூர் அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டன. 20வது ஓவரை இர்பான் பதான் வீசினார். அவர் வீசிய முதல் பந்தை ராம்பால் சிக்சருக்கு தூக்கினார். ஆனால் அடுத்த 4 பந்துகளில் 4 ரன்களே எடுத்தனர். கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட போது, அதை எதிர்கொண்ட ராம்பால் அடிக்க தவறினாலும், விக்கெட் கீப்பர் ஜாதவ் தடுமாறியதால் ஒரு ரன் எடுத்து விட்டனர். இதனால் இந்த ஆட்டம் சமன் ஆனது. அதாவது பெங்களூர் அணியின் ஸ்கோரும் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் ஆனது.
ஐ.பி.எல். வரலாற்றில் சமன் ஆன 4வது ஆட்டம் இதுவாகும். ஏற்கனவே இந்த தொடரில் ஹைதராபாத்-பெங்களூர் இடையிலான ஆட்டம் டையில் முடிந்திருந்தது.
##~~## |