Published:Updated:

`அது என்னுடைய வேலை கிடையாது' - சர்ச்சைக்கு விளக்கம் அளித்த விராட் கோலி!

`அது என்னுடைய வேலை கிடையாது' - சர்ச்சைக்கு விளக்கம் அளித்த விராட் கோலி!
`அது என்னுடைய வேலை கிடையாது' - சர்ச்சைக்கு விளக்கம் அளித்த விராட் கோலி!

கருண் நாயர் டெஸ்ட் அணிக்குத் தேர்வு செய்யப்படாததில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என இந்திய கிரிக்கெட் அணிக் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

photo credit:@bcci

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் முன்னணி வீரர்களான ஷிகர் தவான், ரோஹித் சர்மா, முரளி விஜய் ஆகியோர் கழற்றிவிடப்பட்டு அவர்களுக்குப் பதிலாக பிரித்வி ஷா, மாயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் என இளம்படையைக் களமிறங்கியுள்ளது பி.சி.சி.ஐ. முன்னணி வீரர்கள் அணிக்குத் தேர்வு செய்யப்படாதது சர்ச்சையானது. இந்தச் சர்ச்சையைவிட இளம்வீரர் கருண் நாயரை அணியில் எடுக்காததுதான் தற்போது பெரிய பிரச்சனையாக இந்திய கிரிக்கெட் வாரியத்தைச் சுற்றி வட்டமடித்துக்கொண்டிருக்கிறது. இங்கிலாந்து தொடருக்கு எடுக்கப்படும் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரிலேயே அவர் பெயர் இடம்பெறவில்லை. முன்னாள் வீரர்கள் கங்குலி, சேவாக், ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் தேர்வுக்குழுவின் நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதன் எதிரொலியாகத் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கருண் நாயரிடம் பேசுவதாக அறிவித்தார்.

இந்தநிலையில் கருண் நாயர் தேர்வு குறித்து விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார். முதல் டெஸ்ட் நடைபெறவுள்ள ராஜ்கோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``வீரர்களைத் தேர்வு செய்வது என்பது என்னடைய வேலை கிடையாது. தேர்வுக்குழுவினர் தங்களது வேலையைச் செய்துள்ளார்கள். இதில் எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. ஓர் அணி என்ற முறையில் நாங்கள் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாக செய்துவருகிறோம். அனைவரும் அவர்களது வேலை என்ன என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தேர்வாளர்கள் இதைப் பற்றி ஏற்கெனவே பேசிவிட்டார்கள். இதில் நான் என்ன கூற முடியும். அனைவரும் சேர்ந்து வீரர்களைத் தேர்வு செய்வது கிடையாது. இதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். கருணிடம் தேர்வுக்குழு தலைவர் பிரசாத் பேசிவிட்டார் என நினைக்கிறேன். ஏற்கெனவே பேசிவிட்ட ஒரு விஷயத்தில் நான் கருத்து தெரிவிப்பது நியாயமற்றது. வெளியில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல் வேலை செய்ய வேண்டும் என நினைக்கிறேன்" எனக் கூறினார்.