Published:Updated:

‘கோலிக்கு பிரச்னையில்லை இந்தியாவுக்குதான் சிக்கல்!’ - தரநிலையில் மல்லுக்கட்டும் ஆஸ்திரேலியா

‘கோலிக்கு பிரச்னையில்லை இந்தியாவுக்குதான் சிக்கல்!’ - தரநிலையில் மல்லுக்கட்டும் ஆஸ்திரேலியா
‘கோலிக்கு பிரச்னையில்லை இந்தியாவுக்குதான் சிக்கல்!’ - தரநிலையில் மல்லுக்கட்டும் ஆஸ்திரேலியா

டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையைப் பொறுத்த வரையில் கோலி சிறப்பாக செயல்பட்டால் அவருக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் ஓர் ஆண்டு கிரிக்கெட் விளையாடத் தடை இருப்பதால் கோலியின் மகுடத்துக்குப் பாதிப்பில்லை.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நாளைத் தொடங்குகிறது. விராட்கோலி தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. மேலும், டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுடன் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி  7-ம் தேதி துபாயில் தொடங்குகிறது. இவ்விரு தொடர்களின் முடிவுகள் தரநிலையில் எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற தகவலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் தோல்விகளைச் சந்தித்திருந்தாலும் தரநிலையில் முதலிடத்தில் தான் உள்ளது. இங்கிலாந்து தொடரில் ஒன் மேன் ஷோ காட்டிய கேப்டன் விராட் கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தால் இந்திய அணி தரநிலையை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும். டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் கோலி சிறப்பாக செயல்பட்டால் அவருக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா வீரர் ஸ்மித்துக்கு பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோலியின் மகுடத்துக்குப் பாதிப்பில்லை. 

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 115 புள்ளிகளுடன் தற்போது முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் 116 புள்ளிகள் கிடைக்கும், 1-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் 114 புள்ளிகள்பெறும். தொடர் டிராவில் முடிந்தால் இந்தியாவுக்கு 112 புள்ளிகளும் வெஸ்ட் இண்டீஸுக்கு 84 புள்ளிகளும் கிடைக்கும். இது இந்தியாவுக்குப் பிரச்னையாக இருக்காது. ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் வென்றால் இந்தியாவுக்கு 109 புள்ளிகள்தான் கிடைக்கும். வெஸ்ட் இண்டீஸ் தொடரைக் கைப்பற்றினால் இந்தியாவுக்கு 108 புள்ளிகள்தான் கிடைக்கும் இது சிக்கலை ஏற்படுத்தும். பாகிஸ்தானுக்கெதிரான தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றினால் அந்த அணி 109 புள்ளிகள் பெற்று தரநிலையில் முதலிடத்தைப் பிடித்து விடும். 1-0 என்ற கணக்கில் கைப்பற்றினாலும் ஆஸ்திரேலியாவுக்கு 108 புள்ளிகள் கிடைத்துவிடும்.

வீரர்கள் தரநிலையிலும் மாற்றம் ஏற்படும் சூழல் உள்ளது. டெஸ்ட் வீரர்கள் தரநிலையில் இந்திய வீரர் கோலி முதலிடத்தில் உள்ளார். புஜாரா 6-வது இடம், லோகேஷ் ராகுல் 19-வது இடத்திலும் உள்ளனர். இவர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இவர்களின் தரநிலையில் முன்னேற்றம் காணப்படும். இந்தியாவில் போட்டி நடப்பது இவர்களுக்குச் சாதகமான சூழல் ஆகும். ஆல்ரவுண்டர் தரநிலையில் ஜடேஜா இரண்டாவது இடத்தில் உள்ளார். அஸ்வின் 5-வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்கள் தரநிலையில் ஜடேஜா 4-வது இடத்திலும், அஸ்வின் 8-வது இடத்திலும் உள்ளனர். இந்திய ஆடுகளங்கள் பொதுவாக சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இவர்கள் ஏற்றம் காண வாய்ப்பு உள்ளது.