Published:Updated:

ஐ.பி.எல்: சொந்த மண்ணில் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐ.பி.எல்: சொந்த மண்ணில் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐ.பி.எல்: சொந்த மண்ணில் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐ.பி.எல்: சொந்த மண்ணில் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது சொந்த மண்ணில் புனே வாரியர்ஸ் அணியிடம் 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

19வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், புனே வாரியர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற புனே கேப்டன் ராஸ் டெய்லர் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பிஞ்ச்சும், ராபின் உத்தப்பாவும் களம் இறங்கினர்.

இந்த ஜோடியை பிரிக்க சென்னை பவுலர்கள் எடுத்துக் கொண்ட பல்வேறு முயற்சிகளுக்கு 13வது ஓவரில் பலன் கிடைத்தது. ரவீந்திர ஜடேஜாவின் பந்தில் சிக்சர் அடித்த ஆரோன் பிஞ்ச் மீண்டும் சிக்சருக்கு முயற்சித்த போது, விக்கெட் கீப்பர் டோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அவர் 67 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

பிஞ்ச் - உத்தப்பா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் குவித்தது. வலுவான தொடக்க கண்ட புனே அணி, தொடக்க ஜோடி பிரிந்ததும் திடீரென தடுமாறியது. உத்தப்பா 26 ரன்களிலும், கேப்டன் டெய்லர் 8 ரன்னிலும், மிட்செல் மார்ஸ் 2 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

17 ஓவர்கள் வரை புனே அணியின் ரன்ரேட் சற்று மந்தமாக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் ஆல் ரவுண்டர் ஸ்டீவன் சுமித், சென்னை அணியின் பந்து வீச்சை நொறுக்கினார். இதனால் ஸ்கோர் மறுபடியும் எகிறியதுடன், 150 ரன்களையும் கடந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் புனே வாரியர்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. ஸ்டீவன் சுமித் 39 ரன்களுடன் களத்தில் இருந்தார். கடைசி 2 ஓவர்களில் மட்டும் அந்த அணி 28 ரன்களை சேகரித்தது.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அனிருதா (0) 2வது பந்திலேயே ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரெய்னாவும் 8 ரன்னில் வீழ்ந்தார். விஜய் (24), பத்ரிநாத் (34), ரவீந்திர ஜடேஜா (27) ஆகியோர் குறிப்பிடத்தக்க வகையில் விளையாடினாலும், ரன்ரேட்டை அவர்களால் உயர்த்த முடியவில்லை. இதனால் சென்னை அணி கடுமையான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது.

##~~##
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெய்ன் பிராவோ (1), கேப்டன் டோனியும் (10) ஏமாற்றியதால் சென்னை அணியின் நம்பிக்கை முற்றிலும் தகர்ந்து போனது. 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 24 ரன்கள் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.
5வது ஆட்டத்தில் ஆடிய புனே அணிக்கு இது 2வது வெற்றியாகும். அதே நேரத்தில் 4வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி சந்தித்த 2வது தோல்வியாகும். ஏற்கனவே மும்பை அணியிடமும் தோல்வியை சந்தித்திருந்தது. சென்னை அணி வரும் 18ஆம் தேதி டெல்லி டேர்டெவில்சுடன் விளையாடுகிறது.