Published:Updated:

இந்திய அணியை வீழ்த்திக்கொண்டிருக்கும் 'தி ரவி சாஸ்திரி எஃபெக்ட்!'

இந்திய அணியை வீழ்த்திக்கொண்டிருக்கும் 'தி ரவி சாஸ்திரி எஃபெக்ட்!'

இந்தியாவின் தோல்விக்குப் பின்னால் ஒரு மோசமான நாள் நிற்கப்போவதில்லை. அங்கு நிற்கப்போவது - 15 வருடங்களில் சிறந்த இந்திய அணியை உருவாக்கிய ரவி சாஸ்திரி மட்டுமே!

Published:Updated:

இந்திய அணியை வீழ்த்திக்கொண்டிருக்கும் 'தி ரவி சாஸ்திரி எஃபெக்ட்!'

இந்தியாவின் தோல்விக்குப் பின்னால் ஒரு மோசமான நாள் நிற்கப்போவதில்லை. அங்கு நிற்கப்போவது - 15 வருடங்களில் சிறந்த இந்திய அணியை உருவாக்கிய ரவி சாஸ்திரி மட்டுமே!

இந்திய அணியை வீழ்த்திக்கொண்டிருக்கும் 'தி ரவி சாஸ்திரி எஃபெக்ட்!'

``இங்கிலாந்தில் விளையாடியது கிரிக்கெட்டின் வேறு  ஃபார்மட். அங்கும் நாங்கள் மிகச்சிறப்பாகவே விளையாடினோம். 4-1 என்ற நம்பர் எங்கள் அணியினர் போராடிய விதத்தை முழுமையாகச் சொல்லாது" - ஆசியக் கோப்பை வென்றதும், இங்கிலாந்து தொடரைப் பற்றி பெருமையாகத் தம்பட்டம் அடித்தார் இந்தியப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. `கடந்த 15 ஆண்டுகளில் இதுதான் இந்தியாவின் சிறந்த அணி' என இங்கிலாந்தில் பெருமையடித்தார். தோற்கும்போதும் தடுமாறும்போதும்கூட பெருமை பேசுவது எவ்வளவு மோசமானது. அதிலும் அந்த மனநிலையை மொத்த அணிக்கும் கடத்தி வைத்திருக்கும்போது...! ஆம், இந்திய அணி கிரிக்கெட்டை மிகமோசமாக அணுகிக்கொண்டிருக்கிறது.

6 அணிகள் விளையாடிய ஒரு ஒருநாள் போட்டித் தொடர் முடிந்ததும், என்றோ முடிந்துபோன ஒரு தொடரைப் பற்றி ஏன் பேச வேண்டும்? தங்களைவிட மிகவும் பலம் குறைவான அணிகளை வென்றதற்காகப் பெருமைப்பட முடியாது. வங்கதேசத்தை வீழ்த்திவிட்டோம் என்று கர்வப்பட முடியாது. அதனால் இங்கிலாந்து தொடர் பற்றிப் பேசுகிறார். ரோஹித் எவ்வளவு கூலாக அணியை வழிநடத்தினார் என்று பேசுகிறார். ஃபீல்டிங் மற்றும் மிடில் ஓவர் பௌலிங் சிறப்பாக இருந்தது என்று பெருமிதப்படுகிறார். இந்திய அணியின் பயிற்சியாளர் பேசுவதற்கு அவ்வளவு விஷயங்கள்தான் இருந்ததா? இந்திய அணியில் பிரச்னைகள் என்று எதுவுமே இல்லையா?

உலகக் கோப்பைக்கு இன்னும் 7 மாதங்கள்தான் இருக்கிறது. இந்திய அணியின் மிடில் ஆர்டரில் விளையாடப்போவது யாரென்று தெரியவில்லை. இரண்டு ஆண்டுகளாக மனீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், ஸ்ரேயாஸ் ஐயர், அம்பாதி ராயுடு, கே.எல்.ராகுல் என்று பலரையும் பரிசோதித்துவிட்டனர். ஆனால், இன்னும் இந்தியா தடுமாறிக்கொண்டே இருக்கிறது. இந்த ஆசியக் கோப்பையில் இந்தியாவின் நம்பர் 5, 6, 7 பேட்ஸ்மேன்களின் சராசரி வெறும் 24.57. ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் சரி, வங்கதேசத்துக்கு எதிரான ஃபைனலிலும் சரி, 200+ இலக்கை சேஸ் செய்வதற்கே இந்திய மிடில் ஆர்டர் இந்த ஆட்டம் போடுகிறது. அதை எப்படிச் சரிசெய்வது என்று இந்திய அணிப் பயிற்சியாளர் சிந்தித்திருக்கிறாரா? அவருக்கே வெளிச்சம்! 

பும்ரா, புவனேஷ்வர் குமார் தவிர்த்து அணியில் நிரந்தரமாக விளையாடப்போகும் வேகப்பந்துவீச்சாளர் யார்? இரண்டு ஸ்பின்னர்களோடு களமிறங்க முடிவு செய்துவிட்டதால் இன்னும் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளரை அடையாளம் காணாமலேயே இருக்கிறார்கள். சித்தார்த் கௌல், உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர் தவிர்த்து  இப்போது கலீல் அஹமது, தீபக் சஹார் எனச் சோதனை செய்துகொண்டே இருக்கிறார்கள். இந்தத் தொடரில் அவர்களின் செயல்பாடுகள் பற்றி மூச்சு விடவில்லை. ஆனால், இங்கிலாந்து தொடர் பற்றி இன்னும் அவ்வளவு பெருமை பேசவேண்டியிருக்கிறது.

இங்கிலாந்தில் தோற்றுக்கொண்டிருக்கும்போது ``கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் சிறந்த அணி இதுதான்" என்கிறார். இந்தியா 4-1 எனத் தோற்றிருந்தாலும், லார்ட்ஸ் தவிர்த்து ஒவ்வொரு போட்டியிலுமே இந்தியா போராடியது. அதற்காக, `15 ஆண்டுகளில் சிறந்த அணி’ என்று ரவி சாஸ்திரி சொல்வதை `கர்வம்’ என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல? டிராவிட் தலைமையில் இந்தியா அங்கு டெஸ்ட் தொடர் வென்றுள்ளதை அவர்கள் மறந்துவிட்டார்களா? சாதனைகள் செய்துவிட்டு பெருமை பேசுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது. இப்படித் தோற்கும்போதெல்லாம் பெருமை பேசுவது சரியா? இது அணிக்குள் எப்படியான ஆட்டிட்யூடை வளர்த்திருக்கிறது என்பதுதான் மிகப்பெரிய பிரச்னை. 

'நாங்கள்தான்' என்ற மனப்பான்மை இந்திய வீரர்களுக்குள் ஆழமாகப் பதிந்துவிட்டதுபோலத்தான் தெரிகிறது. ரவி சாஸ்திரி சொல்வதற்கெல்லாம் தவறாமல் தலையசைக்கிறார் கேப்டன் விராட் கோலி. அவரும் அதே மனநிலையில்தான் இப்போதெல்லாம் பிரஸ் மீட்டில் பேசுகிறார். இங்கிலாந்து தொடரின் தொடக்கத்தில், ``அணித் தேர்வில் நான் செய்த முடிவு தவறாகிவிட்டது" என்று வெளிப்படையாகச் சொன்னவர், தொடர் முடிவில் பத்திரிகையாளர்களிடம் வேறு மாதிரி பேசுகிறார். தவறுகளை ஏற்றுக்கொள்ளும்போதுதான் அதைச் சரிசெய்ய முடியும். இவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவே தயாராக இல்லை. பிறகு எப்படி மிடில் ஆர்டர், ஃபாஸ்ட் பௌலிங் சிக்கல்களைச் சரிசெய்யப்போகிறார்கள். கடைசி வரை தாங்கள் செய்தது சரியென்றேதான் இந்தக் கூட்டணி வாதிடும். 

சாஸ்திரியின் தாக்கம் கோலியோடு மட்டும் முடிந்துவிடவில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம். முன்னாள் கேப்டன் தோனி, துணைக் கேப்டன் ரோஹித் என அணி மொத்தமும் அது பரவிக்கிடக்கிறது. அதன் உச்சம், எதிர்த்து விளையாடும் கத்துக்குட்டி அணிகளைக் கொஞ்சம்கூட மதிக்காதது! எப்போதும் கத்துக்குட்டி அணிகளுக்கு எதிரான போட்டிக்கு முன்பு கேப்டன்கள் சொல்வது : "We respect them and we are not taking them lightly". அது வெறும் டெம்ப்ளேட் வசனம்தான். ஆட்டத்தில் தெரிந்துவிடும், உண்மையிலேயே அந்தக் கத்துக்குட்டியை மதித்தார்களா என்று. இந்த ஆசியக் கோப்பையில் இந்தியா எந்தக் கத்துக்குட்டி அணியையும் மதிக்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முகமது செஷாத் அதிரடியாக ஆட, கொஞ்சம் ஆட்டம் கண்ட கேப்டன் தோனி, 12-வது ஓவரிலேயே ஆறாவது பந்துவீச்சாளரைப் பயன்படுத்தினார். இத்தனைக்கும் அந்த அணி 11 ஓவர்களில் 64 ரன்களே எடுத்திருந்தது. ஆனால், விக்கெட் ஏதும் விழவில்லை. இதை இந்திய அணியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே இடத்தில், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க ஓப்பனர்கள் இருந்திருந்தால் 3 அல்லது 4 பௌலர்களுக்கு மேல் இந்தியா பயன்படுத்தியிருக்காது. ஏனெனில், அவர்கள் அடிக்கக்கூடியவர்கள். அடிக்கலாம். ஆனால், ஆப்கானிஸ்தான் எப்படி? 

செஷாத்துக்கு இந்தியாவிடம் எந்தத் திட்டமும் இல்லை. அதனால்தான் சஹார், கலீல், கௌல், குல்தீப், ஜடேஜா, ஜாதவ் என அத்தனை பேரையும் உடனுக்குடன் மாற்றிக்கொண்டே இருந்தார் தோனி. செஷாத்தின் பலவீனம் தெரிந்திருந்தால், அதற்கு ஏற்ற பௌலரை வைத்து பலவீனத்தைப் பயன்படுத்த முயற்சி செய்திருக்கலாம். நமக்கு அதுதான் தெரியவில்லையே! நாம் உலகிலேயே சிறந்த அணி வேறு. ஆப்கானிஸ்தானுக்கும் அதன் ஒரு வீரருக்கெல்லாம் திட்டம் தீட்ட முடியுமா?

வங்கதேசத்துக்கு எதிராகவும் அதே கதை. ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில், அந்த அணி முதல் 5 ஓவர்களில் 33 ரன்கள் எடுத்திருந்தது. இப்போதும் விக்கெட் விழவில்லை. 5 ஓவர்களில் 33 ரன்கள் என்பது பெரிய விஷயமே இல்லை. ஆனால், கேப்டன் ரோஹித்துக்குப் பொறுக்கவில்லை. ஃபார்மில் இல்லாத வங்கதேச ஓப்பனர்கள் எப்படி ரன் அடிக்கலாம்? தோனியாவது கலீல், சஹார் எனப் புதுமுக வீரர்களை மாற்றிக்கொண்டிருந்தார். ரோஹித், புவி - பும்ரா ஸ்பெல்லையே உடைத்து, ஆறாவது ஓவரிலேயே சஹாலைக் கொண்டுவந்தார். அவர் ஓவரில் லிட்டன் தாஸ் வெளுத்து வாங்க, உடனே மீண்டும் புவி. அவர் வீசிய ஆட்டத்தின் 10-வது ஓவரில் 1 ரன்தான் எடுக்கப்பட்டது. ஆனாலும், விக்கெட் விழவில்லையே! ஒரே ஓவரில் புவியின் இரண்டாவது ஸ்பெல் முடிவுக்கு வந்தது. இப்போது குல்தீப் - ஜடேஜா ஸ்பெல். இந்தப் போட்டியில் 12 ஓவர்களில் 5 பௌலர்களைப் பயன்படுத்தினார் ரோஹித். தோனி - 6, ரோஹித் - 5! போதாக்குறைக்கு மீண்டும் தசைநார் கிழிந்த கேதர் ஜாதவ் மீது அவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கவேண்டிய அவசியம்? ஏற்கெனவே 7 மாதங்கள் ஓய்வில் இருந்தவர், உலகக் கோப்பையில் விளையாட வேண்டாமா? 

ஆப்கனுக்கெதிரான போட்டியில், செஷாத் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும்போது ரோஹித்தின் முகம் அப்படிச் சுருங்கியிருந்தது. அடிக்கடி பௌண்டரி எல்லையில் பௌலர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். சரி, புது பௌலர்களுக்கு அறிவுரை கொடுக்கிறார்போல என்று நினைத்தால், இந்தியா பேட்டிங் செய்யும்போது ஒவ்வொரு ஓவரும் தண்ணீர் பாட்டிலுடன் களம் புகுந்தார். கூட தவான் வேறு! இந்தப் போட்டியில் வெல்ல வேண்டும் என்பதைவிட, இந்த அணியிடம் தோற்றுவிடக்கூடாது என்ற மனநிலையே இரண்டு போட்டியிலும் ஓங்கியிருந்தது. அதனால்தான் இரண்டு ஆட்டங்களும் கடைசிப் பந்து வரை எடுத்துச்செல்லவேண்டி இருந்தது. மற்ற அணிகளுக்குத் தருவதுபோல் உண்மையான ரெஸ்பெக்ட் கொடுத்திருந்தால், இந்த இந்திய அணிக்கு 253, 223 எல்லாம் பெரிய இலக்காகவே இருந்திருக்காது. 

சரி, இந்தப் போட்டிகள் முடிந்த பிறகு, இந்தக் கேப்டன்களாவது தவறுகளை ஏற்றுக்கொள்கிறார்களே என்றால் அதுவும் இல்லை. ஆப்கானிஸ்தான் போட்டிக்குப் பிறகு சித்தார்த் கௌல், கலீல் அஹமது, தீபக் சஹார் அடங்கிய புது வேகப்பந்துக் கூட்டணியைக் குறை சொல்லிய தோனி, 60 ரன்கள் மட்டுமே எடுத்த மிடில் ஆர்டர் பற்றிப் பேசவில்லை. ஃபைனல் முடிந்ததும் பேசிய ரோஹித் ``ஒட்டுமொத்த தொடரிலும் ஆதிக்கம் செலுத்தியதற்கான பரிசு இது" என்று பெருமிதம் கொண்டார். கடைசி இரண்டு போட்டிகளிலும் இந்தியா எத்தனை ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தியது என்று ரோஹித்துக்கும் சாஸ்திரிக்கும் மட்டுமே தெரிந்திருக்கக்கூடும்!

சில தினங்களுக்கு முன்பு பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் ஃபுல்ஹாம் (Fulham) அணியை 3-0 என வென்றது மான்செஸ்டர் சிட்டி. போட்டி முடிந்ததும் மான்செஸ்டர் சிட்டி பயிற்சியாளர் பெப் கார்டியாலோ, ``என் அணியின் ஆடிய விதம் எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. எளிமையான வாய்ப்பை ஒரு வீரர் வீணடித்தார். பிறகு இன்னொரு வீரர் மிஸ் பாஸ் செய்கிறார். ஒரு இடத்தில் இன்னொரு எக்ஸ்டிரா டச் செய்து பந்தை பாஸ் செய்ய, அது எதிரணி மீண்டு வருவதற்கு எளிதாக இருந்தது. என் வீரர்களின் ஆட்டம் எனக்குப் பிடிக்கவில்லை. நான் அவர்கள்மீது வருத்தமாக இருக்கிறேன். இது அவர்களுக்கும் தெரியும்" என்று பத்திரிகையாளர் சந்திப்பில் பொரிந்து தள்ளினார். இத்தனைக்கும் கேள்வி என்ன தெரியுமா: ``உங்கள் அணியின் ஆட்டத்தில் நீங்கள் எந்த அளவுக்குத் திருப்தியாக இருக்கிறீர்கள்?" என்பதுதான். 3 கோல் அடித்து எளிதாக வென்ற பிறகும், அணி செய்த சின்னச் சின்னத் தவறுகளையும் சுட்டிக் காட்ட அவர் தவறவில்லை. அதனால்தான் அப்போது மூன்றாவது இடத்தில் இருந்த அணி இப்போது முதல் இடத்தில் இருக்கிறது. 

ஆனால், இந்திய கிரிக்கெட்டில் பயிற்சியாளர்கள் இப்படி வெளிப்படையாக வெளியில் சொல்லிவிடமுடியாது. இங்கு வீரர்களுக்குத்தான் முக்கியத்துவம். ஆனால், குறைந்தபட்சம் பிரச்னை இருக்கிறது என்பதையாவது ஒப்புக்கொள்ளலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு `நாங்கள் நன்றாகத்தான் விளையாடினோம்', 'இதற்கு முந்தைய இந்திய அணிகள் இப்படிப் போராடவில்லை' என்று பேசிக்கொண்டிருப்பது அணியைப் பின்னோக்கிதான் அழைத்துச் செல்லும். அணி மொத்தமும் மோசமான ஆட்டிட்யூடை வளர்த்துவிடும்.

வளர்த்துவிட்டிருக்கிறது! இப்படித் தவறுகளை ஏற்றுக்கொள்ள மறுத்துக்கொண்டே இருந்தால், சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல் போல், 2015 உலகக் கோப்பை அரையிறுதி போல், ஒரு தோல்வி இந்தியாவை வெளியேற்றும். அப்போதும்கூட ``இதுவரை எங்களைப் போல் எந்த அணியும் விளையாடவில்லை. This is one bad day" என்றுதான் கேப்டனும் பயிற்சியாளரும் சொல்வார்கள். நிச்சயம் அதுபோன்ற ஒரு சூழ்நிலை வரும். ஆனால், அங்கு இந்தியாவின் தோல்விக்குப் பின்னால் அந்த ஒரு மோசமான நாள் நிற்கப்போவதில்லை. அங்கு நிற்கப்போவது - 15 வருடங்களில் சிறந்த இந்திய அணியை உருவாக்கிய ரவி சாஸ்திரி மட்டுமே!