Published:Updated:

பிசிசிஐ -யின் புதிய சட்டம்; மாற்றப்படுகிறதா இந்தூர் போட்டி? #IndvWi

பிசிசிஐ -யின் புதிய சட்டம்; மாற்றப்படுகிறதா இந்தூர் போட்டி? #IndvWi
பிசிசிஐ -யின் புதிய சட்டம்; மாற்றப்படுகிறதா இந்தூர் போட்டி? #IndvWi

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இந்தத் தொடரின் 2-வது ஒருநாள் போட்டியானது அறிவிக்கப்பட்டபடி இந்தூர் மைதானத்தில் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  


Photo: Twitter/Mohandas Menon‏

ஆசியக்கோப்பை தொடரைத் தொடர்ந்து இந்திய அணி சொந்த மண்ணில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.  2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் மோதவுள்ளன. வரும்  அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்தத் தொடரின் 2-வது ஒருநாள் போட்டி அக்டோபர் 24-ம் தேதி இந்தூர், ஹோல்கர் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அறிவிக்கப்பட்ட அந்த மைதானத்தில் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பி.சி.சி.ஐ-யின் புதிய விதிகளின்படி, மைதானத்தின் மொத்த இருக்கைகளில் 90% இருக்கைகளை ரசிகர்கள் விற்பனைக்கு விட வேண்டும். மீதம் இருக்கும் 10% இடங்கள் மட்டுமே விளம்பரதாரர்களுக்கும் இதர மாநில உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் இலவச டிக்கெட்டுகளாக இருக்கும். இதற்கு மத்தியப் பிரதேச மாநில கிரிக்கெட் சங்கம் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்தியப்பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலாளரான மிலிந்த் கன்மாடிகர்,  ``ஹோல்கர் மைதானத்தில் 27,000 இருக்கைகள் உள்ளன. இதில் 10 சதவிகிதம்தான் என்றால், 2,700 இருக்கைகள்தான் கிடைக்கும். அதிலும் பெவிலியனில் 7,000 இருக்கைகள்தான். அதில் 10% என்றால் 700. பி.சி.சி.ஐ ஸ்பான்ஸ்ர்களுக்கு ஒதுக்கிய பின்னர் இதிலும் பாதிதான் மாநிலத்துக்கு கிடைக்கும். இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. பி.சி.சி.ஐ இதில் மாற்றம் கொண்டுவராவிட்டால், போட்டியை நடத்தமுடியாது என்று கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர்” என்றார். 

இது தொடர்பாக பி.சி.சி.ஐ மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில்,  ``போட்டியை வேறு மைதானத்துக்கு மாற்ற எங்களுக்கு விருப்பம் இல்லை. திட்டமிட்டபடி போட்டி அதே மைதானத்தில் நடைபெறும் என்று நம்புகிறோம். ஆனால், இதையே அவர்கள் பிரச்னை ஆக்குவார்கள் என்றால், வேறு மைதானம் தொடர்பாக பரிசீலிப்போம்” என்றார். 

மத்தியப்பிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்துக்கும், பி.சி.சி.ஐ -க்கும் இடையே நடக்கும் இந்த மோதலால் மத்தியப்பிரதேச கிரிக்கெட் ரசிகர்கள் போட்டி நடக்குமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.