Published:Updated:

‘இன்னொரு ட்ரிபிள் சென்சுரி கூட அடிக்கலாம் பாஸ்!’ - நம்பிக்கையுடன் கருண் நாயர்

‘இன்னொரு ட்ரிபிள் சென்சுரி கூட அடிக்கலாம் பாஸ்!’ - நம்பிக்கையுடன் கருண் நாயர்
‘இன்னொரு ட்ரிபிள் சென்சுரி கூட அடிக்கலாம் பாஸ்!’ - நம்பிக்கையுடன் கருண் நாயர்

‘கம்பேக்’ கொடுப்பது சாதாரண விஷயம் இல்லை. தாய் நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பது அனைவரது கனவு. என்னுடைய ட்ரெய்னர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளருடன் அதிகப்படியான நேரத்தை செலவிட்டு வருகிறேன் என கருண் நாயர் தெரிவித்துள்ளார்.

கருண் நாயர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சேவாக்கிற்கு அடுத்தபடியாக 300 ரன்கள் குவித்த இரண்டாவது இந்தியக் கிரிக்கெட் வீரர். 6 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள கருண் இச்சாதனையை புரிந்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 303 ரன்களை குவித்து அசத்தினார். அன்றைய தினங்களில் ‘ஹாட் டாக்’ கருண் தான். இந்திய அணிக்கு அட்டகாசமான ஒரு வீரர் கிடைத்து விட்டார் என முன்னணி வீரர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் அதன்பின்னர் அவருக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. கடைசியாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் களமிறங்கினார். அதில் 5 ரன்களில் அவுட் ஆனார். 

ஆசியக்கோப்பையை வென்றுள்ள இந்திய அணி, மேற்கு இந்திய தீவுகளுடன் விளையாடுகிறது. இதற்காக இந்தியா வந்துள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 4-ம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையில் களமிறங்கவுள்ள இதில், முன்னணி வீரர்கள் தவான்,புவனேஷ்வர்குமார், ரோகித் ஷர்மா உள்ளிட்டோர் இடம்பெறவில்லை.  பும்ரா, புவனேஷ்வர் குமார் இரண்டு பேருக்கும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயத்தால் அவதிப்படும் இஷாந்த் ஷர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் சேர்க்கப்படவில்லை. 

இளம்வீரர்கள் பிரித்வி ஷா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், மாயன்க் அகர்வால் ஆகியோர் முதல்முறையாக இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதேபோல் இங்கிலாந்து டெஸ்டில் கலக்கிய ரிஷப் பாண்ட், ஹனுமா விஹாரியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் கருண் நாயருக்கு இடம் இல்லை.

இதுகுறிந்து மனம் திறந்துள்ள கருண் நாயர். ‘தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினரின் முடிவுக்கு மதிப்பளித்து நகர்ந்து செல்ல வேண்டும். இவை அனைத்திற்கும் பேட்டின் மூலமே பதிலளிக்க வேண்டும். முத்தசம் அடித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. அதிலிருந்து கடந்து வர வேண்டும். கடந்த காலத்தை விட்டு விட்டு நமக்கு முன்னாள் இருப்பதை நோக்கி நகர வேண்டும். ஒவ்வொரு நாளும் என்னைத் தொடர்ந்து மேன்மைபடுத்திக்கொண்டிருக்கிறேன்.  நான் அணியில் இடம்பிடிக்கும் போது பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் எனது திறமை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். கண்டிப்பாக எனக்காக வாய்ப்பு தேடி வரும். அதிகமான ரன்களை குவிப்பேன். நான் அந்த நாளுக்காக வெறியுடன் காத்திருக்கிறேன். அனைவருக்கும் முச்சதம் அடித்த இரண்டு இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் நானும் ஒருவன் என்று. நான் யாரிடமும் எதையும் நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

சர்வதேச அளவில் ஜொலிக்க வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும். உள்ளூர் போட்டிகளில் அதிகப்படியான ரன்களை குவிக்க வேண்டும். சரிவில் இருந்து மீண்டு   ‘கம்பேக்’ கொடுப்பது சாதாரண விஷயம் இல்லை. தாய் நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பது அனைவரது கனவு. என்னுடைய ட்ரெய்னர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளருடன் அதிகப்படியான நேரத்தைச் செலவிட்டு வருகிறேன். மீண்டும் அணியில் இடம்பிடிப்பேன்” என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.