Published:Updated:

`இதில் என்ன தயக்கம்; கேப்டனாகத் தயார்!- உத்வேகத்தில் ரோஹித் சர்மா

`இதில் என்ன தயக்கம்; கேப்டனாகத் தயார்!- உத்வேகத்தில் ரோஹித் சர்மா
`இதில் என்ன தயக்கம்; கேப்டனாகத் தயார்!- உத்வேகத்தில் ரோஹித் சர்மா

``இந்திய அணிக்கு முழு நேர கேப்டனாகச் செயல்பட தயார்'' என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

PC : BCCI

ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. வெற்றிக்களிப்புடன் செய்தியாளர்களிடம் பேசினார் ரோஹித் சர்மா. அப்போது அவரிடம் இந்திய அணிக்கு முழுநேர கேப்டனாகப் பதவி ஏற்கத் தயாரா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ``நிச்சயம் தயாராக இருக்கிறேன். இதில் என்ன தயக்கம்; ஆசியக் கோப்பையை வென்றுவிட்டோம். எப்போது வாய்ப்பு வந்தாலும் தலைமை ஏற்கத் தயார்” என்றார் சிரிப்புடன். மேலும், `அணியில் மூத்த வீரர்கள் இல்லை. அவர்கள் மீண்டும் அணிக்குத் திரும்புவார்கள் என்றாலும், இருக்கும் வீரர்களைக் கொண்டு சிறப்பாகச் செயல்பட வேண்டும். நானும் அணியின் பயிற்சியாளரும் வீரர்களுக்கு முழுச் சுதந்திரம் அளித்திருக்கிறோம்.

PC : BCCI

அவர்கள் எவ்வித அழுத்தமுமின்றி விளையாட உறுதி செய்தோம். ஒவ்வொரு அணியிலும் இருக்கும் நிலையற்ற சூழலைப் புரிந்துகொண்டு அதை வழிநடத்துவது அவசியம். அந்த வகையில் அனைத்தையும் புரிந்துகொண்டு அணியை வழிநடத்தினேன். நாங்கள் துபாய்க்கு வந்ததும் அம்பதிராயுவிடமும், தினேஷ் கார்த்திக்கிடமும் நீங்கள் இந்தத் தொடர் முழுவதும் விளையாடுவீர்கள் எவ்வித அழுத்தமும் இல்லாமல் விளையாடுங்கள் என்றேன். வீரர்களை இப்படித்தான் உருவாக்க வேண்டும். அவர்களும் அதை ஏற்றுச் சிறப்பாகச் செயல்பட்டனர். இரு போட்டிகளில் அணியின் செயல்பாடு சிறப்பாக இல்லை.

PC : BCCI

இதைக் காரணமாகக் கொண்டு அடுத்த போட்டியில் விளையாடுவோமா என்ற கேள்வியை வீரர்களுக்குள் விதைத்து விடக்கூடாது. ஒருபோட்டியின் மூலம் மட்டுமே வீரர்களின் திறமையை முடிவுசெய்துவிட முடியாது. நான் எல்லா வீரர்களுக்கும் சமமான வாய்ப்பைக் கொடுத்தேன். அவர்களின் திறமை புரிந்துகொண்டு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் 4 மற்றும் 6 வது இடத்துக்கு நிலையான வீரர்கள் அமையவில்லை. உலகக் கோப்பைக்குள் இது சரியாகும் என நம்புகிறோம். இளம் வீரர்களுடனான இந்திய அணி, ஆசியக் கோப்பை வென்றதை பெருமையாக நினைக்கிறேன். வெப்பமான சீதோஷ்ணநிலையை தாங்கிக்கொண்டு வீரர்கள் விளையாடியுள்ளனர். இங்கிலாந்திலிருந்து வந்து திடீரென அதிகமான வெயிலில் விளையாடுவது எளிதானதல்ல. வீரர்களின் உடற்தகுதி முக்கியப் பிரச்னையாக உள்ளது. அவர்கள் உடல்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.