Published:Updated:

`மூன்றாவது முறையாக ஃபைனலில் வங்கதேசம்!’ - 7-வது முறையாக வாகை சூடுமா இந்தியா? #AsiaCup #INDvBAN

`மூன்றாவது முறையாக ஃபைனலில் வங்கதேசம்!’ - 7-வது முறையாக வாகை சூடுமா இந்தியா? #AsiaCup #INDvBAN
`மூன்றாவது முறையாக ஃபைனலில் வங்கதேசம்!’ - 7-வது முறையாக வாகை சூடுமா இந்தியா? #AsiaCup #INDvBAN

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில், இன்று இந்தியா-வங்க தேசம் அணிகள் மோத உள்ளன. 

ஆசியக் கோப்பை வரலாற்றில் 9 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி, 6 முறை சாம்பியனான இந்திய அணி, மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள வங்கதேச அணியுடன் துபாய் மைதானத்தில் இன்று மோதுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்றுவந்த 14 -வது ஆசியக் கோப்பை தொடர், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் , ஹாங்காங், இலங்கை என 6 அணிகளுடன் தொடங்கியது ஆசியக் கோப்பை தொடர். லீக் ஆட்டங்களில் இலங்கை, ஹாங்காங் வெளியேற, சூப்பர் 4 சுற்றில் சிறப்பாக விளையாடிய இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இறுதிப்போட்டிக்கு  முன்னேறின. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேறின. 

வங்கதேசம் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இலங்கையை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. ஆனால், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 136 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. எனினும் இலங்கை அணியின் தோல்வியால் வங்கதேசம் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை நடப்பு சாம்பியன் இந்தியா எளிதில் வீழ்த்தியது. இரண்டு தோல்விகளுக்குப் பின்னர், லீக் சுற்றில் ஆப்கானிஸ்தானிடம் வாங்கிய அடிக்கு, சூப்பர் 4 சுற்றில் பதிலடி கொடுத்தது. இந்த வெற்றிமூலம் இறுதிப்போட்டிக்கான ரேஸில் நீடித்தது.  சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்த வங்கதேசம், தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

இந்திய அணியைப் பொறுத்தவரை இங்கிலாந்தில் இரண்டு மாத சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு துபாய் வந்தது. கோலி இல்லாததால், ரோஹித் தலைமையில் களமிறங்கிய இந்தியா, இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத அணி. லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியுடனான போட்டியில் கொஞ்சம் தடுமாறினாலும், இறுதியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அடுத்து, அனைவரும் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம். இந்தப் போட்டியில், பந்துவீச்சில் கலக்கிய இந்திய அணி, பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளை எளிதில் வீழ்த்தியது. இந்தப் போட்டிகளில் இந்தியாவின் பந்துவீச்சும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுமே வெற்றியைத் தேடித் தந்துவிட்டனர். தவானும், ரோஹித்தும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.  ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கும் முன்னேறிவிட்டதால், ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் 5 மாற்றங்களுடன் தோனி தலைமையில் களமிறங்கியது. கடைசி ஓவர் வரை சென்ற இந்தப் போட்டி இறுதியில் டை ஆனது. ஆசியக் கோப்பை வரலாற்றில் டையில் முடிந்த முதல் போட்டி ஆனது. 

வங்கதேசம் அணியைப் பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர்  தமிம் இக்பால், முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட காயம் காரணமாகத் தொடரில் இருந்து விலகிவிட்டார். இது, அந்த அணிக்கு பலத்த பின்னடைவாக அமைந்துவிட்டது. சூப்பர் 4 சுற்றில் அந்த அணியின் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இறுதிப்போட்டியில் விளையாட மாட்டார். இதனால் அந்த அணி பேட்டிங்கில் ரஹீமைத் தான் அதிகம் சார்ந்துள்ளது. பந்துவீச்சில் ரஹ்மான் விக்கெட் டேக்கராக வலம் வருகிறார். இதுவரை இந்தத் தொடரில்  8 விக்கெட்டுகளை வீழ்த்தி, ரஷித் கானுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.  இந்தத் தொடரில், வங்கதேசம் நிலையான ஆட்டத்தை வெளிக்காட்டவில்லை. ஆனாலும் அந்த அணி அதிர்ச்சி அளிக்கும் திறன் கொண்டது. அதனால், இந்திய அணி கவனத்துடன் விளையாடுவது அவசியம்.  

இந்தியா இன்று மீண்டும் முழு பலத்துடன் களமிறங்கும். இந்திய அணிக்கு பேட்டிங் பலம். ஆனால் இன்னும் மிடில் ஆர்டர் சொதப்பல் தொடர்கிறது. இதனால் தோனியின் பங்களிப்பு மிடில் ஆர்டரில் அதிகம் தேவை. இந்த ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு கலக்கலாக உள்ளது. 3 போட்டிகளில் விளையடியுள்ள பும்ரா 7 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். பாண்ட்யா காயம் காரணமாக அணியில் இடம்பெற்ற ஜடேஜா தொடர்ச்சியாக விக்கெட் எடுத்து நம்பிக்கை தருகிறார். 
    
இன்று (வெள்ளிக்கிழமை) அரபு நாடுகளில் விடுமுறை என்பதால், மைதானம் நிரம்பிய இறுதிப்போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துபாய் மைதானத்தில் நடைபெற்ற பெரும்பாலான போட்டியில், சேஸிங் செய்யும் அணிகள் வெற்றி பெறுவதால் இன்றைய போட்டியில் டாஸ் முக்கியத்துவம் பெறும். இந்தப் போட்டி, இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.