Published:Updated:

`மேத்யூஸைக் காலி செய்த 49 ரன் அவுட்கள்’ - இலங்கைப் பயிற்சியாளர் கொடுத்த புள்ளிவிபரம்!

`மேத்யூஸைக் காலி செய்த 49 ரன் அவுட்கள்’ - இலங்கைப் பயிற்சியாளர் கொடுத்த புள்ளிவிபரம்!
`மேத்யூஸைக் காலி செய்த 49 ரன் அவுட்கள்’ - இலங்கைப் பயிற்சியாளர் கொடுத்த புள்ளிவிபரம்!

ஏஞ்சலோ மேத்யூஸுக்கு பிட்னெஸ் இல்லை அதனால்தான் அவரை அணியிலிருந்து நீக்கியுள்ளோம் என அந்த அணியின் பயிற்சியாளர் ஹதுரசிங்கா கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகத்துக்கும் கேப்டனாக இருந்து நீக்கப்பட்டுள்ள ஏஞ்சலோ மேத்யூஸுக்கும் ஏற்பட்டுள்ள மோதல்தான் இப்போதைய கிரிக்கெட் உலகின் ஹாட் டாப்பிக். தற்போது துபாயில் நடந்துவரும் ஆசியக் கோப்பையில், மேத்யூஸ் தலைமையில் களமிறங்கிய இலங்கை அணி வங்கதேசம், ஆப்கானிஸ்தான் எனக் கத்துக்குட்டி அணிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து அடிவாங்கி லீக் சுற்றோடு வெளியேறியது. முன்னதாக, தென்னாப்பிரிக்கத் தொடரில் சிறப்பாக விளையாடிய போதிலும் ஆசியக் கோப்பையில் ஏற்பட்ட தோல்வி, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தோல்வியை அடுத்து அணியை மறுசீரமைக்க நினைத்த இலங்கை கிரிக்கெட் வாரியம், கேப்டன் பொறுப்பிலிருந்து ஏஞ்சலோ மேத்யூஸை அதிரடியாக நீக்கியதுடன் அவருக்குப் பதில் சண்டிமாலை மூன்று விதமான போட்டிகளுக்கும் கேப்டனாக நியமித்தது. இந்த நடவடிக்கையைச் சற்றும் எதிர்பார்க்காத மேத்யூஸ் கிரிக்கெட் வாரியத்துக்கு உருக்கமாகக் கடிதம் எழுதினார். 

``ஆசியக் கோப்பை போட்டியின்போது அனைத்து முடிவுகளுமே பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்களுடன் பரிசீலித்தே எடுத்தேன். ஆனால், தோல்விகளுக்கு நான் மட்டும்தான் பொறுப்பு என்பதுபோல என்னை மட்டும் பலிகடா ஆக்குவது, நான் துரோகம் செய்ததுபோல் உணரவைக்கிறது. நான் தேவையில்லை என்று அணி நிர்வாகமும் பயிற்சியாளரும் நினைத்தால் ஓய்வுபெறத் தயார்" எனப் பகிரங்கமாக அறிவித்தார். இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் மேத்யூஸ்க்கு மேலும் ஒரு அதிர்ச்சியைத் தந்தது அணி நிர்வாகம். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவரைத் தேர்வு செய்யாமல் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. அதற்கு நிர்வாகமும் பயிற்சியாளரும் சொன்ன பதில் மேத்யூஸுக்கு கூடுதல் அதிர்ச்சியளிக்கும் ரகம்.

மேத்யூஸ் விவகாரம் குறித்து பேசிய இலங்கை அணியின் பயிற்சியாளர் ஹதுரசிங்கா, ``இந்தத் தருணத்தில் விக்கெட்களுக்கிடையே ரன்னிங் செய்வதுதான் பிரச்னையாக இருக்கிறது. இது மேத்யூஸுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த அணிக்கும் பொருந்தும். மேத்யூஸ் பிட்னெஸாக இருக்க வேண்டும். அதுதான் எங்களின் விருப்பம். 2017-லிருந்து அவருடைய சராசரி 59. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகக்கூட 97 ரன்கள் எடுத்துள்ளார். இது எங்களுக்கும் தெரியும். இதெல்லாம் சரிதான். ஆனால், சில பிரச்னைகள் உள்ளன. நீங்கள் பழைய ரெக்கார்டுகளைப் பாருங்கள். 64 ரன் அவுட்டுகளில் 49 முறை மேத்யூஸ் தனது பார்ட்னர்களை ரன் அவுட் ஆக்கியுள்ளார். இது உலக சாதனை. இந்த விஷயங்களைத்தான் நாங்கள் குறிப்பிடுகிறோம். மோசமாக ரன்னிங் செய்கிறார். அவரிடம் போதுமான ஃபிட்னெஸ் இல்லை. இதைச் சரி செய்துகொண்டு விரைவில் அவர் அணிக்குத் திரும்ப வேண்டும்" எனக் கூறியுள்ளார்.