Published:Updated:

`6 நாள்களாகத் தூக்கத்தைத் தொலைத்துவிட்டேன்!’ - ஆசியக் கோப்பை தோல்வி குறித்து சர்ஃப்ராஸ் உருக்கம்

`6 நாள்களாகத் தூக்கத்தைத் தொலைத்துவிட்டேன்!’ - ஆசியக் கோப்பை தோல்வி குறித்து சர்ஃப்ராஸ் உருக்கம்
`6 நாள்களாகத் தூக்கத்தைத் தொலைத்துவிட்டேன்!’ - ஆசியக் கோப்பை தோல்வி குறித்து சர்ஃப்ராஸ் உருக்கம்

ஆசியக் கோப்பையிலிருந்து பாகிஸ்தான் வெளியேறியுள்ளது. ஃபைனலுக்குள் நுழையும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இது குறித்து உருக்கமாக பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளார் அந்த அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது.


ஆசியக் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில், இந்தியா வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும் அணியை முடிவு செய்யும் முக்கியமான போட்டியில் பாகிஸ்தானை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் வெற்றிவாகை சூடியது. இது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் அணி வீரர்கள் மீது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த ஒட்டுமொத்த தொடரிலும் பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. சர்ஃப்ராஸ் அகமது, கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்ற குரலும் ஓங்கி ஒலித்தது. இந்த நிலையில், அணியின் தோல்வி குறித்து மனம் திறந்துள்ளார் சர்ஃப்ராஸ்.

இது குறித்து அவர் கூறும்போது, `கேப்டன்ஷிப் அழுத்தம், குறைந்த ரன்கள் இந்த இரண்டு விஷயங்களும் என்னை இரவில் தூங்கவிடாமல் செய்தது. கேப்டனாக இருப்பது எப்போதும் அழுத்தம் நிறைந்த ஒன்று. பாகிஸ்தான் கேப்டனாக யார் இருந்தாலும் அவர்களுக்கு அந்த அழுத்தம் இருந்துகொண்டேதானிருக்கும். கேப்டன் சரியாகச் செயல்படாத நிலையில், அணி தோல்வி அடைந்தால் அந்த அழுத்தம் மேலும் அதிகரிக்கும். நான் கடந்த 6 நாள்களாகத் தூக்கத்தைத் தொலைத்துவிட்டேன்; இதை யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால், இதுதான் உண்மை. இதுவும் வாழ்க்கையின் ஒரு அங்கம். கடந்து போகும். கடந்த காலங்களில் சிறப்பாக ஆடிய வீரர்களை மீட்டெடுக்க வேண்டும். என்னால்தான் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது. நான் ஒரு கேப்டனாகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், நான் அப்படிச் செய்யவில்லை, அதனால்தான் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.

நான் தொடர்ந்து விளையாடுவேன். அதுதான் என் பணி. எனக்கு ஓய்வளிப்பது குறித்து கேள்வி எழுந்தால், அதற்கு நான் பதில் அளிப்பேன். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழப்பதை தவிர்க்க வேண்டும். ஆசியக் கோப்பையில் நம்பிக்கையை இழந்துவிட்டோம் என்பது ஆபத்தானது. கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையைப் பற்றி நீங்கள் பேசினால், இந்தியாவுடனான முதல் போட்டியில் தோல்வியை தழுவினோம், ஆனால், அந்த கோப்பையை நாங்கள் பெற்றோம்" என்றார்.