Published:Updated:

ஐ.பி.எல்: சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி

ஐ.பி.எல்:  சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி
ஐ.பி.எல்: சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி
ஐ.பி.எல்:  சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கி்ங்ஸ் அணி கடைசி ஓவரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 16வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை கேப்டன் டோனி முதலில் பெங்களூர் அணியை பேட் செய்ய அழைத்தார்.

இதன்படி கிறிஸ் கெய்லும், அகர்வாலும் பெங்களூர் அணியின் இன்னிங்சை தொடங்கினர். ஆனால் 2வது ஓவரில் கெய்ல் (4) ஆட்டம் இழந்தார். கெய்லுக்கு பிறகு கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார். அவரும், அகர்வாலும் நிதானமாகவே விளையாடினர். அகர்வால் தனது பங்குக்கு 24 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து 3வது விக்கெட்டுக்கு டிவில்லியர்ஸ் களம் இறங்கினார்.

அபாரமாக ஆடி அரைசதத்தை கடந்த விராட் கோலி 58 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடினார். கிறிஸ் மோரிஸ் வீசிய 19வது ஓவரில் மட்டும் ஒரு சிக்சர், 2 பவுண்டரி உள்பட 20 ரன்களை டிவில்லியர்ஸ் விளாசினார். 64 ரன் எடுத்திருந்த டிவில்லியர்ஸ்  கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது.

##~~##
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கைக் ஹஸ்சியும், முரளிவிஜயும் களம் இறங்கினர். இந்த ஜோடி சிறிது நேரம் கூட நிலைத்து நிற்கவில்லை. விஜய் 2 ரன்னிலும், ஹஸ்சி 6 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
இதைத் தொடர்ந்து பத்ரிநாத்தும் (34), சுரேஷ் ரெய்னாவும் (30) அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டு கொண்டு வந்தனர். இவர்களுக்கு பிறகு கேப்டன் டோனி தலையில் பொறுப்பு விழுந்தது. 19வது ஓவரில் டோனி (33) ராம்பாலின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அருண் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த வெய்ன் பிராவோ ஒரு சிக்சருடன் 8 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டன. ரவீந்திர ஜடேஜாவும், கிறிஸ் மோரிசும் களத்தில் இருந்தனர். 20வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் வீசினார். இதில் முதல் பந்தை பவுண்டரிக்கும், 2வது பந்தை சிக்சருக்கும் விளாசி ரவீந்திர ஜடேஜா பதற்றத்தை தணித்தார். இதன் பிறகு 4 பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டன. 3வது பந்தில் ஒரு ரன்னும், 4வது பந்தில் 2 ரன்னும், 5வது பந்தில் ஒரு ரன்னும் எடுத்தனர். இதனால் கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்டன.
ஆட்டத்தில் உச்சக்கட்ட டென்ஷன் நிலவியது. கடைசி பந்தை அடித்த ரவீந்திர ஜடேஜா எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆனார். ஆனால் அது நோ பால் என்று நடுவர் அறிவிக்க சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. அதாவது அதற்குள் ஒரு ரன் ஓடி விட்டனர். நோ பாலுக்கு எக்ஸ்டிரா வகையில் ஒரு ரன் கிடைத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  ரவீந்திர ஜடேஜா 38 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
3வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு 2வது வெற்றியாகும். ஏற்கனவே பஞ்சாப் அணியை தோற்கடித்து இருந்தது. அதே சமயம் 5வது லீக்கில் ஆடிய பெங்களூர் அணிக்கு இது 2வது தோல்வியாகும்.சென்னை அணி தனது அடுத்த ஆட்டத்தில் இதே மைதானத்தில் புனே வாரியர்ஸ் அணியை நாளை சந்திக்கிறது.