Published:Updated:

`அது நடந்திருந்தால் நாங்கள் ஃபைனலுக்கு வந்திருப்போம்' - ஆப்கன் கேப்டன் ஆதங்கம்

`அது நடந்திருந்தால் நாங்கள் ஃபைனலுக்கு வந்திருப்போம்' - ஆப்கன் கேப்டன் ஆதங்கம்
`அது நடந்திருந்தால் நாங்கள் ஃபைனலுக்கு வந்திருப்போம்' - ஆப்கன் கேப்டன் ஆதங்கம்

இந்தியா போன்ற அணியுடன் போட்டியை டை செய்ததே எங்களுக்குக் கிடைத்த மறக்கமுடியாத மிகப்பெரிய வெற்றி என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் அஸ்கர் ஆப்கன் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

photo credit:@ICC

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான நேற்றைய ஆசியக்கோப்பை போட்டி கடைசிவரைக்கும் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் சென்றது. ஒருகட்டத்தில் இந்தியா வெற்றிபெறும் என்று இருந்த நிலையில், நடுவர்களின் தவறான முடிவுகள் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதேநேரம், ஆப்கன் வீரர்கள் திறமையாகவே செயல்பட்டனர். ஷஷாத், நபி, ரஷீத் கான் உள்ளிட்டோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதற்கிடையே போட்டி சமனில் முடிந்தது குறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கன் பேசியுள்ளார். ``இந்தியா போன்ற ஒரு அணியுடன் போட்டியை சமன் செய்தது வெற்றிபெற்றதுபோல் இருக்கிறது. உண்மையிலேயே இது எங்களுக்குக் கிடைத்த மறக்கமுடியாத மிகப்பெரிய வெற்றி. கடந்த இரண்டு போட்டிகளையும் இந்தியா எளிதில் சேஸிங் செய்தது. ஆனால், நாங்கள் நேற்று அதைக் கடினமாக்கினோம். 

இந்த மாதிரியான போட்டிகள் எப்போதுமே ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும். தொடரில் பங்கேற்கும் முன்பு நாங்கள் கண்டிப்பாக ஃபைனலில் விளையாடுவோம் என்று நான் நினைத்தேன். காரணம் துபாயில் உள்ள சீதோஷ்ண நிலைக்கு நாங்கள் நன்றாகப் பழகியிருந்தோம். நாங்கள் பலமுறை துபாயில் கிரிக்கெட் விளையாடியுள்ளோம். ஆனால், எங்களுடைய போதாத நேரம் எங்களின் போட்டிகள் அனைத்தும் அபுதாபியில் அமைந்துவிட்டது. துபாயில் நடந்திருந்தால் நாங்கள் கண்டிப்பாக ஃபைனலுக்கு வந்திருப்போம். ஆனால், எங்களுக்கு ஏற்பட்டது நியாயமற்றது" எனக் கூறியவர், அணியின் பேட்டிங் குறித்துக் கூறுகையில், ``கண்டிப்பாக பேட்டிங்கில் முன்னேற்றம் கண்டுள்ளோம். இதற்கு முன்னர் பேட்டிங்தான் எங்களது வீக் ஏரியாவாக இருந்தது

photo credit:@ICC

தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகிறோம். ஆசியக் கோப்பைக்கு இந்தப் பேட்டிங் ஓகே. ஆனால், உலகக் கோப்பை போன்ற பெரிய ஆட்டங்களில் விளையாடுவதற்கு ஏதுவாக முன்னேற வேண்டும். ஷஷாத் நேற்று அருமையாக விளையாடினார். அதேநேரம் ஸ்பின்னர்களும் அவர்களது பணியைச் சிறப்பாகச் செய்தனர். ஒவ்வொரு முறையும் ஷஷாத் சிறப்பாக விளையாடும்போது அணிக்காக விளையாடியுள்ளார் என்போம். ஆனால், நேற்றுதான் ரியல் ஷஷாத் விளையாடியதைப் பார்த்தோம்" எனப் பெருமிதம் தெரிவித்தார்.