Published:Updated:

தோனியின் தவறு... இந்தியாவின் பலவீனம்... பதம்பார்த்த ஆப்கானிஸ்தான்! #INDvAFG #AsiaCup2018

தோனியின் தவறு... இந்தியாவின் பலவீனம்... பதம்பார்த்த ஆப்கானிஸ்தான்! #INDvAFG #AsiaCup2018
தோனியின் தவறு... இந்தியாவின் பலவீனம்... பதம்பார்த்த ஆப்கானிஸ்தான்! #INDvAFG #AsiaCup2018

``முதலில் பேட் செய்து நல்ல ஸ்கோர் எடுத்துவிட்டு, எங்கள் ஸ்பின்னர்கள் மூலம் இந்திய பேட்ஸ்மேன்களைச் சோதிக்கவேண்டும்" - ஆப்கானிஸ்தான் கேப்டன் ஆஸ்கர் ஆஃப்கன்.

``இந்திய அணி சில மாற்றங்கள் செய்ததால், அணியின் புதுமுக பந்துவீச்சாளர்களை டார்கெட் செய்யவேண்டும் என்று முடிவுசெய்தேன். அது பலனளித்தது" - ஆப்கானிஸ்தான் ஓப்பனர் முகமது செஷாத். 

ஒரு மிகப்பெரிய அணியைச் சந்திக்கும்போது திட்டமிடுதல் மிகவும் அவசியம். நம் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை அலசி அதற்கு ஏற்ப முடிவுகள் எடுக்கவேண்டும். ஆப்கானிஸ்தான் கேப்டனும், ஓப்பனரும் சொன்ன இந்த வார்த்தைகள், அந்த அணி எப்படியான திட்டமிடலோடு களமிறங்கியது என்பதை உணர்த்தும். நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு சவாலளித்தற்குக் காரணம் அதுதான். இந்தியா வெற்றி பெற முடியாததற்கான காரணமும் அந்தத் திட்டமிடல் பிரச்னைதான்!

ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு இது இரண்டாவது போட்டி, இன்னொருவருக்கு இது மூன்றாவது போட்டி, ஒரு வீரருக்கு இதுதான் அறிமுக ஆட்டம். இந்தியா போன்ற மிகப்பெரிய அணியை அட்டாக் செய்ய இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. செஷாத் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். முதல் மூன்று ஓவர்கள் தனக்கான பந்துகளைத் தேர்வு செய்து பௌண்டரி அடித்தவர், நான்காவது ஓவரில் தீபக் சஹாரின் நெருக்கடியைப் பயன்படுத்தி, ஆட்டத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் சென்றார். ஒரு நோ பால், இரண்டு வைட் என சர்வதேச கிரிக்கெட்டின் நெருக்கடியை எதிர்கொண்டிருந்த சஹாரை, பௌண்டரியும் சிக்ஸரும் அடித்து காலி செய்தார். அந்த இரண்டு ஷாட்கள் பௌலரைவிட கேப்டனுக்கு அதிக நெருக்கடியைக் கொடுக்க, ஐந்தே ஓவர்களில் முதல் ஸ்பெல் முடிவுக்கு வந்தது. ஆப்கானிஸ்தான் இந்தப் போட்டியில் முதல் வெற்றியை ருசித்தது. 

தோனியின் தவறு... இந்தியாவின் பலவீனம்... பதம்பார்த்த ஆப்கானிஸ்தான்! #INDvAFG #AsiaCup2018

சித்தார்த் கௌல், கலீல் அகமது இருவரையும் மிகவும் எளிதாகக் கையாண்டார் செஷாத். அவர் ஸ்டிரைக்கர் எண்டில் நின்றால் ஒவ்வொரு ஓவரும் ஒரு பௌண்டரி கட்டாயம் வந்துகொண்டிருந்தது. 696 நாள்கள் கழித்து கேப்டன் பொறுப்பேற்ற தோனியைத் தொடக்கத்திலேயே சோதித்தார் செஷாத். ஜடேஜாவைக் கொண்டுவந்தார் தோனி. கௌலுக்கு பௌலிங் எண்ட் மாற்றிப்பார்த்தார்; குல்தீப்பை அழைத்தார்... எதுவும் பயனில்லை. 12-வது ஓவர், இந்தியாவின் ஆறாவது பௌலராக கேதர் ஜாதவும் பந்துவீசினார். உளவியல் ரீதியாக இந்தியாவைவிட ஆப்கானிஸ்தான் மிகப்பெரிய முன்னிலையில் இருந்தது. அந்த அணிக்கு இரண்டாவது வெற்றி!

ராயுடுவின் தயவால் 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த செஷாத், 12 ஓவர்களின் முடிவில் தன் அணியின் 86 சதவிகித ஸ்கோரை அடித்திருந்தார். மறுமுனையில், 30 பந்துகளில் வெறும் 5 ரன்கள் எடுத்துத் தடுமாறிக்கொண்டிருந்தார் ஜாவேத் அஹமதி. அவரது தடுமாற்றத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார் ஜடேஜா... இல்லை தோனி. இந்திய கேப்டனின் மின்னல் ஸ்டம்பிங்கில் அவர் வெளியேறியபோது (ஓவர் : 12.4) அணியின் ஸ்கோர் 65. 

தோனியின் தவறு... இந்தியாவின் பலவீனம்... பதம்பார்த்த ஆப்கானிஸ்தான்! #INDvAFG #AsiaCup2018

17 பந்துகள் கழித்து... குல்பாதீன் நெய்ப் கிரீஸில். அவரைச் சுற்றி ஐந்து ஃபீல்டர்கள். டெஸ்ட் போட்டியைப் போல் சூழ்ந்து நிற்கிறார்கள். சர்வதேச அரங்கில் தன் இரண்டாவது ஒருநாள் ஹாட்ரிக்கை எதிர்நோக்கி ஓடிவருகிறார் குல்தீப் யாதவ். ஆம், அந்த 18 பந்துகளில் 4 விக்கெட்டுகளை இழந்து, தாங்கள் கொண்டிருந்த ஆதிக்கத்தை இந்தியாவிடம் கொடுத்திருந்தது ஆப்கானிஸ்தான் அணி. ஜடேஜா, குல்தீப் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்த, 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்தது. குல்தீப் வீசிய அந்த இரண்டு பந்துகள்... தொடர்ந்து மூன்று போட்டிகளில் அரைசதம் அடித்திருந்த ஷாகிதியை தன் மாயச்சுழலால் தடுமாற வைத்தார். மிடில் ஸ்டம்ப் லைனில் பிட்ச்சாக, பௌன்ஸும் சுழலும் சேர்ந்து பேட்ஸ்மேனைத் தடுமாற வைத்தன. மீண்டும் தோனியின் விரைவான ஸ்டம்பிங். விக்கெட். ``கண்ணாடியில் ஷேன் வார்னேவைப் பார்ப்பதுபோல் இருக்கிறது" என்று புகழ்ந்தார் வர்ணனையில் அமர்ந்திருந்த பிரெட் லீ. கேப்டன் ஆஃப்கனைப் போல்டாக்கிய அடுத்த பந்து... வார்னேவே அதைத்தான் சொல்லியிருப்பார்!

மற்ற விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டிருந்தாலும் செஷாத் தெளிவோடு பேட்டிங் செய்துகொண்டிருந்தார். பந்துகளைத் தேர்ந்தெடுத்து அடிப்பதைவிட, பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து ஆடினார். குல்தீப் யாதவின் பந்துவீச்சில் எந்த ரிஸ்க்கும் எடுக்கவில்லை. ஜடேஜா - குல்தீப் வீசிய அந்த அற்புத ஸ்பெல்லில் ரொம்பவே அடக்கி வாசித்தார் செஷாத். அந்த விக்கெட்டுகள் விழுந்து இரண்டு ஓவர்கள் கழித்து, இந்தியர்களின் ஆரவாரம் சற்று ஓய்ந்தபின் ஜடேஜாவின் பந்துவீச்சைப் பதம் பார்த்தார். உடனே ஸ்பெல் மாறியது. இரண்டாவது ஸ்பெல் வீசவந்த கலீலை சிக்ஸரோடு வரவேற்றார். கொஞ்சம் கொஞ்சமாக ஆப்கானிஸ்தான் அணியை மீட்கத் தொடங்கினார். அதற்கு ஏற்றார்போல் 24-வது ஓவருக்குப் பிறகு குல்தீப்பை ஓரம் கட்டிவைத்தார் தோனி. தன்னுடைய ஒரே டேஞ்சர் ஓய்ந்ததும் ரிலாக்ஸாக ஆடினார் செஷாத். 

தோனியின் தவறு... இந்தியாவின் பலவீனம்... பதம்பார்த்த ஆப்கானிஸ்தான்! #INDvAFG #AsiaCup2018

56 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்த செஷாத், சதமடிக்க அதன்பின் 32 பந்துகளை எதிர்கொண்டார். கண்மூடித்தனமாக எல்லாப் பந்துகளையும் அடிக்க முயற்சி செய்யாமல், அணி தடுமாறியபோது பொறுப்பாகவும் விளையாடத் தெரியும் என்று நிரூபித்தார். தீபக் சஹார் பந்துவீச்சில் ஃபைன் லெக்கில் பௌண்டரி அடித்து சதமடித்தபோது அவர் மனதுக்குள் அவ்வளவு உற்சாகம். டாப்-8 அணிக்கு எதிராக அடிக்கும் முதல் சதம். தன் வாழ்நாளின் மிகப்பெரிய இன்னிங்ஸ். தன் தேசமே பல ஆண்டுகள் பேசப்போகும், கொண்டாடப்போகும் இன்னிங்ஸ்... அதைக் குதித்துக் கொண்டாட அப்போது தெம்பில்லை. ஸ்டாமினா கொஞ்சம் கொஞ்சம் குறையத் தொடங்கியது. அதிரடி குறைந்தது. கேதர் ஜாதவ் செஷாத்தை சோதிக்கத் தொடங்கினார்.

நேற்றைய போட்டியில் செஷாத் க்ரீஸை அதிகமாகப் பயன்படுத்தினார். பெரும்பாலான பந்துகளை லெக் ஸ்டம்பிலிருந்து விலகி, டைமிங் எடுத்து ஆடினார். அவரது மூவ்மென்ட்களை சரியாகக் கணித்துப் பந்துவீசியது ஜாதவ் மட்டும்தான். அவர் லெக் ஸ்டம்புக்கு வெளியே விலகினாலும், அவர் கால்களைக் குறிவைத்துக்கொண்டே இருந்தார். அப்படித் தொடர்ச்சியாக லெக் சைடிலேயே வீசியவர், ஒரு பந்தை ஆஃப் சைட் மிகவும் வெளியே வீச, தூண்டப்பட்ட செஷாத் தூக்கியடித்து கேட்ச்சானார். 116 பந்துகளில் 124 ரன்கள். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த இன்னிங்ஸ். பெருமையோடு வெளியேறினார் செஷாத். 

தோனியின் தவறு... இந்தியாவின் பலவீனம்... பதம்பார்த்த ஆப்கானிஸ்தான்! #INDvAFG #AsiaCup2018

செஷாத் களத்தில் இருந்தபோதே முகமது நபி கொஞ்சம் கொஞ்சமாக அடித்து ஆடத் தொடங்கினார். சரியான நேரத்தில் நஜிபுல்லா ஜத்ரான் கம்பெனி கொடுக்க, கியர்களை மாற்றினார் நபி. ஆட்டம் முழுக்க சீண்டப்படாமலிருந்த குல்தீப் ஓவரில் ஒரு பௌண்டரி, ஒரு சிக்ஸர். குல்தீப், ஜடேஜா, ஜாதவ் என்று ஸ்பின்னர்கள் தொடர்ச்சியாக வீச, ஸ்வீப், கட் என இரண்டே ஆயுதத்தால் அவர்களை எளிதாக எதிர்கொண்டது அந்தக் கூட்டணி. 7-வது விக்கெட்டுக்கு 38 பந்துகளில் 46 ரன்கள். இந்தியாவின் அட்வான்டேஜ் அந்த இடத்தில் சரிந்தது. கடைசிக் கட்டத்தில் ஆப்கன் பௌலர்களுக்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் நன்றாகவே பந்துவீசினர். ஸ்பின்னர்களை எளிதாக எதிர்கொண்டவர்களுக்கு எதிராகக் கொஞ்சம் முன்னரே அவர்களைப் பயன்படுத்தியிருக்கலாம். 

நபி 56 பந்துகளில் 64 ரன்கள் எடுக்க, ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்தது. கடைசி 3 ஓவர்களில் இந்திய அணி 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது. நல்ல ஸ்கோரை எடுத்திருந்தாலும், ஆப்கானிஸ்தான் அணி கவலையோடுதான் பிரேக்கை எதிர்கொண்டது. பேட்டிங் செய்தபோது ரஷீத் கான் அடிக்கடி கால் வலியால் அவதிப்பட்டார். சிலமுறை மருத்துவர்கள் களத்துக்குச் சென்று பார்த்தனர். தொடர்ந்து ஆடினாலும் கடைசி இரண்டு பந்துகளில் அவரால் ஓட முடியவில்லை. இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிரான மிகமுக்கிய ஆயுதத்தை இழந்துவிட்டோமே என்று பதறினர் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள். 

தோனியின் தவறு... இந்தியாவின் பலவீனம்... பதம்பார்த்த ஆப்கானிஸ்தான்! #INDvAFG #AsiaCup2018

ஆப்கன் ரசிகர்களின் கவலையை பலமடங்காக்கியது இந்தியத் தொடக்க ஜோடி. யாரும் ரோஹித் - தவான் கூட்டணியை மிஸ் செய்யவில்லை. கே.எல்.ராகுல் - அம்பாதி ராயுடு இருவருமே இந்திய அணியின் இலக்கில் கிட்டத்தட்ட பாதியை அடித்துச் சென்றனர். ராகுல் வழக்கம்போல் அதிரடி காட்டுவார் என்று நினைத்தால், அவர் அடக்கி வாசித்தார். அவரது ரோலை சீறும் சிறப்புமாகச் செய்துமுடித்தார் ராயுடு. 9-வது ஓவரில் ஐம்பது, 16-வது ஓவரில் நூறு என விக்கெட்டே இழக்காமல் இலக்கை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது இந்தியா. சரி, எல்லாம் எளிதாக முடிந்துவிடும் என்று பார்த்தால் ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. நபியின் ஆஃப் ஸ்பின்னில் ராயுடு (49 பந்துகளில் 57 ரன்கள்) வெளியேற, ராகுலை (66 பந்துகளில் 60) வெளியேற்றினார் ரஷீத். இந்தியாவின் பக்கம் முழுமையாகச் சாய்ந்திருந்த வெற்றித் தராசு கொஞ்சம் கொஞ்சமாக நடுநிலையை நோக்கிப் பயணித்தது. 

இந்திய அணியில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மிடில் ஆர்டர் சொதப்பல் தொடர்கிறது. இரண்டு இடங்கள் இன்னும் கேள்விக்குறியாக இருக்கிறது. தன் பௌலிங்கால் ஆறாவது இடத்தை கேதர் ஜாதவ் தனதாக்கிக்கொள்வார். அவர் விளையாடினால்தான் அணியில் பேலன்ஸ் இருக்கும். தோனி ஐந்தாவது பேட்ஸ்மேன். நான்காவது பேட்ஸ்மேனுக்காகக் கடந்த சில ஆண்டுகளாக ராயுடு, தினேஷ் கார்த்திக், மனீஷ் பாண்டே எனப் பல வீரர்கள் முட்டி மோதுகிறார்கள். இது போன்ற தொடரில்தான் அதற்குச் சரியான ஆள் யாரென சோதனை முயற்சிகள் செய்ய முடியும். இருந்தாலும் ஒரு வீரருக்கு ஒரு பொசிஷனில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கவேண்டும். கோலி அப்படிச் செய்யாமல், பேட்டிங் ஆர்டரை மாற்றிக்கொண்டே இருந்ததால்தான் இதுவரை சரியான பேட்ஸ்மேனைக் கண்டறிய முடியவில்லை. 

தோனியின் தவறு... இந்தியாவின் பலவீனம்... பதம்பார்த்த ஆப்கானிஸ்தான்! #INDvAFG #AsiaCup2018

இந்த ஆசியக் கோப்பையில் ரோஹித் அந்தத் தவற்றைச் செய்யவில்லை. ராயுடு மூன்றாவது வீரராக, கார்த்திக் நான்காவது வீரராக ஆர்டர் மாறாமல் விளையாடி வந்தனர். தினேஷ் கார்த்திக் நான்காவது வீரராக கொஞ்சம் நம்பிக்கையும் அளித்தார். நேற்று மூன்றாவது இடத்தில் களமிறங்க, இன்னொரு போட்டியாளர் மனீஷ் இருந்தார். ஆனால், தோனி செய்த அந்தத் தவறு..! மொத்த ஆட்டத்தையும் ஆப்கானிஸ்தான் பக்கம் கொடுத்துவிட்டது. நான்காவது இடத்தில் நன்றாக விளையாடிக்கொண்டிருந்த கார்த்திக்கை, அவர் எப்போதும் விளையாட முடியாது மூன்றாவது வீரராக இறக்கிவிட்டார். சரி நான்காவது வீரர் ஸ்லாட் மனீஷுக்கான வாய்ப்பு போல என நினைத்தால் இவர் களமிறங்கிவிட்டார். இது தோனி தன் ஃபார்மை சோதனை செய்வதற்கான போட்டி இல்லையே. இந்திய மிடில் ஆர்டரில் இருக்கும் பிரச்னையைச் சரிசெய்யவேண்டியது. 

தோனியின் அனுபவம் நிச்சயம் லோயர் மிடில் ஆர்டருக்குத் தேவை. அவர் ஐந்தாவது வீரராகக் களமிறங்குவதுதான் சரியாக இருந்திருக்கும். மாறாக நேற்று முன்னரே களமிறங்கி வீழ்ந்தும் ஆகிவிட்டார். அவர் அவுட்டானபோது இந்தியாவுக்கு 111 ரன்கள் தேவை. அவருக்குப் பின்பு களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் : ஒன்பது மாதம் கழித்து ஒருநாள் போட்டியில் களமிறங்கும் மனீஷ், கடந்த 7 மாதங்களில் ஒரே ஒரு இன்னிங்ஸ் பேட்டிங் செய்துள்ள கேதர் ஜாதவ், ஓராண்டுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் ஆடும் ஜடேஜா! அணியில் இடத்துக்காகப் போராடும் வீரர்களுக்கு இந்தச் சூழ்நிலை இன்னும் நெருக்கடியைக் கூட்டும். அதுமட்டுமல்லாமல், இது தினேஷ் கார்த்திக் மீதான நெருக்கடியை பலமடங்கு அதிகரித்திருக்கும். எதிர்பார்த்தது போலவே மனீஷ், ஜாதவ் விரைவில் வெளியேறுகின்றனர். பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை. அவரும் வெளியேறுகிறார். வெற்றி ஆப்கானிஸ்தான் பக்கம் முழுதாகச் சாயத் தொடங்கிவிட்டது!

தோனியின் தவறு... இந்தியாவின் பலவீனம்... பதம்பார்த்த ஆப்கானிஸ்தான்! #INDvAFG #AsiaCup2018

நல்லவேளையாக தீபக் சஹார், ஜடேஜா அடித்த பௌண்டரிகள் தோல்வியைத் தவிர்த்துவிட்டன. வெற்றி பெற்றுவிட்டோம் என்று நினைக்கும்போது, `இன்னும் நான் முடிக்கல' எனத் தன் மாயச் சுழல் கொண்டு ஆட்டத்தைக் காப்பாற்றிவிட்டார் ரஷீத். சில மோசமான நடுவர் முடிவுகள் இந்தியாவுக்குப் பாதகமாக அமைந்துவிட்டன. அதனால் வெற்றி பெற முடியவில்லை. இந்தப் போட்டித்தன்மை இல்லாத தொடரின் முக்கியமில்லாத போட்டியில் வெற்றி பெறவில்லை என்று நாம் வருந்தத்தேவையில்லை. எதிரணி மிகச் சிறப்பாக விளையாடியது. அதேசமயம், நடுவர் முடிவுகளைக் குறை சொல்லவும் தேவையில்லை. ஏனெனில், இந்திய கேப்டன்களின் முடிவுகள் இன்னும் மிடில் ஆர்டரைப் பதம் பார்த்துக்கொண்டிருக்கிறது. உலகக் கோப்பைக்கு இந்திய மிடில் ஆர்டர் இதே ஃபார்மில்தான் போகுமா, கேப்டன்கள் தெளிவாக, புத்திசாலித்தனமாக முடிவெடுக்கவேண்டும். ஏனெனில், அப்படி முடிவெடுக்கக்கூடிய பயிற்சியாளர் நமக்கு வாய்க்கவில்லை!