Published:Updated:

‘5 கேப்டன்களை அணுகிய சூதாட்ட தரகர்கள்’ - விசாரணை வளையத்தில் முன்னாள் வீரர்கள்

‘5 கேப்டன்களை அணுகிய சூதாட்ட தரகர்கள்’ - விசாரணை வளையத்தில் முன்னாள் வீரர்கள்
‘5 கேப்டன்களை அணுகிய சூதாட்ட தரகர்கள்’ - விசாரணை வளையத்தில் முன்னாள் வீரர்கள்

சூதாட்டத் தரகர்கள், சர்வதேச கிரிக்கெட் அணிகளின் கேப்டன்கள் 5 பேரை அணுகியுள்ளதாக ஐசிசி  தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டத் தரகர்கள் மீண்டும் தலையிடுவதாகவும், கடந்த 12 மாதங்களில் சர்வதேச அணிகளின் கேப்டன்கள் 5 பேரை அவர்கள் அணுகியுள்ளதாகவும் ஐசிசி கூறியுள்ளது. ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது ஷாஹத்தை நடப்பு ஆசியக் கோப்பை போட்டியின்போது புக்கிகள் தொடர்புகொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட அறிவுறுத்தியதாக அவர் ஐசிசி-யிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஐசிசி-யின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரி அலெக்ஸ் மார்ஷல் கூறுகையில், “சர்வதேச கிரிக்கெட் அணிகளின் கேப்டன்கள் 5 பேரை புக்கிகள் தொடர்புகொண்டுள்ளனர். 4 கேப்டன்கள் ஐசிசி-யின் முழு நேர உறுப்பினர்களாக உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள். தற்போது அவர்களின் பெயர்களை வெளியிட விரும்பவில்லை. இந்த புக்கிகள், உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்கள், குறைந்த ஓவர்களைக் கொண்ட டி-20 போட்டிகளை மிகவும் விரும்புகின்றனர். இதுபோன்ற போட்டிகளில் அவர்கள் எளிதாக
சூதாட்டத்தில் ஈடுபட முடியும்” என்றார்.

நடப்பு ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போது ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷாஹத்தை புக்கிகள் தொடர்புகொண்டுள்ளனர். அதுவும், ஆப்கானிஸ்தான் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் சென்று சந்தித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட அணுகியுள்ளனர். இதுதொடர்பாக, ஆப்கான் கிரிக்கெட் நிர்வாகம் ஐசிசி-யிடம் புகார் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து மார்ஷல் கூறுகையில், “ டி-20 லீக் போட்டிகள் எங்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் ஐசிசி இதுதொடர்பாக 32 விசாரணைகளை நடத்தியுள்ளது. இதில், 23 சம்பவங்கள் வீரர்கள் மற்றும் போட்டி அமைப்பாளர்கள் அளித்த புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்டன. 8 சம்பவங்களில் வீரர்கள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 4 முன்னாள் வீரர்கள், விசாரணையை எதிர்கொண்டுள்ளனர்” என்றார்.