Published:Updated:

`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை!’ - `கம்பேக்’ ஜடேஜா

`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை!’ - `கம்பேக்’ ஜடேஜா
`எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை!’ - `கம்பேக்’ ஜடேஜா

வங்கதேச அணிக்கெதிரான ஆசியக் கோப்பை போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய இந்திய அணியின் ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

Photo Credit: ICC

ரவீந்திர ஜடேஜா. கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி விளையாடும் பெரும்பாலான போட்டிகளின் பிளேயிங் லெவனில் தவறாமல் இடம் பிடிக்கும் பெயர். ஆனால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே அவர் தேர்வு செய்யப்பட்டு வந்தார். இந்தநிலையில், ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்த அக்‌ஷர் படேல், ஹர்திக் பாண்டியா மற்றும் ஷ்ரதுல் தாக்குர் ஆகியோர் காயமடையவே, இந்திய அணிக்குத் திரும்ப அழைக்கப்பட்டார் ஜடேஜா. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம் காலியாக இருக்கவே, திரும்ப அழைக்கப்பட்டதும் இந்திய அணி களம்கண்ட முதல் போட்டியிலேயே பிளேயிங் லெவனில் ஜடேஜாவுக்கு வாய்ப்புக் கிடைத்தது. 

புது ஹேர் ஸ்டைல், நியூ லுக் என இந்திய அணியின் ஊதா நிற ஜெர்சியை அணிந்துகொண்டு ஓராண்டுக்கும் அதிகமான இடைவெளிக்குப்பின் சர்வதேச ஒருநாள் போட்டியில் பந்துவீசிய ஜடேஜாவின் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்ந்தது. வங்கதேசத்தின் அனுபவம் வாய்ந்த ஆல்ரவுண்டர் ஷகிப் அல்ஹசன் விக்கெட்டை அவர் வீழ்த்தினார். தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசிய ஜடேஜா, 10 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வங்கதேச அணி 173 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த எளிய இலக்கை  3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 36.2 ஓவர்களில் இந்திய அணி எட்டியது. ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஜடேஜா, மேன் ஆஃப் தி மேட்ச்சாகத் தேர்வு செய்யப்பட்டார். உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே மீதமுள்ள நிலையில், தனது கம்பேக் மூலம் தேர்வுக்குழுவுக்கு ஸ்ட்ராங்கான மெசேஜைத் தட்டி விட்டிருக்கிறார் ஜடேஜா. 

போட்டிக்குப் பின் பேசிய அவர், ``இந்த கம்பேக்கை நான் எப்பொழுதும் மறக்க மாட்டேன். ஏனெனில் 480 நாள்களுக்குப் பின்னர் நான் அணிக்குத் திரும்பியிருக்கிறேன். இதற்கு முந்தைய இடைவெளிகள் இவ்வளவு நீளமானது அல்ல’’ என்று நெகிழ்ந்திருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், ``நான் யாருக்கும், எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. என்னுடைய திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். என்னால் என்ன சாதிக்க முடியும் என்பதை யாருக்கும் காட்ட வேண்டிய அவசியமில்லை. எனக்கு நானே புதிய சவால்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே தற்போதைய தேவை’’ என்று பேசியிருக்கிறார்.