2018 ஆசிய கோப்பையின் உச்சமாகப் பார்க்கப்பட்டது இந்தியா வெர்ஸஸ் பாகிஸ்தான் மேட்ச்தான். ஆனால், பழைய பரபரப்பு எதுவும் இல்லாமல் ஒன்சைடடாக இந்த மேட்ச் முடிந்ததில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம். இந்தத் தலைமுறையோ இந்தியா வெர்ஸஸ் பாகிஸ்தான் பில்ட் அப் எல்லாம் இவ்வளவுதானா என அலட்சியம் செய்தன. ஆனால் 80ஸ் கிட்ஸுகளுக்குத்தான் தெரியும் இந்தியா வெர்ஸஸ் பாகிஸ்தான் என்றால் எப்படி அனல் பறக்கும் என்று. சாலைகளில் டிராஃபிக் இருக்காது, திரை அரங்குகளில் சினிமாக்கள் ரத்து செய்யப்படும், சாலையின் ஓரங்களில் டிவி இருக்கும் இடங்களில் எல்லாம் 50, 100 பேர் மேட்ச் பார்க்க கூடிவிடுவார்கள். சச்சின், கங்குலி, டிராவிட் என எல்லோரும் பீக்கில் இருந்த கிரிக்கெட்டின் பொற்காலம் அது. அப்படி 90 டு 2000களில் மறக்கமுடியாத இந்தியா Vs பாகிஸ்தான் டாப் 5 யுத்தங்கள் மட்டும் இங்கே!

1. 1996 உலகக்கோப்பை காலிறுதிப் போட்டி, பெங்களூரு
1996 உலகக்கோப்பையை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகள் இணைந்து நடத்தின. இதில் ஏ பிரிவில் இந்தியாவும், பி பிரிவில் பாகிஸ்தானும் விளையாடின. ஏ பிரிவில் மூன்றாம் இடம் பிடித்த இந்தியாவும், பி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த பாகிஸ்தானும் காலிறுதிப் போட்டியில் பெங்களூருவில் மோதின. நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தன் மேட்ச் என்பதால் இந்தப் போட்டியைக் காண உலகமே ஆவலோடு காத்திருந்தது.
அமீர் சொஹைல் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் வக்கார் யூனுஸ், சயீத் அன்வர், இன்ஸமாம் உல் ஹக், சலீம் மாலிக், ஜாவித் மியான்டட், முஷ்டாக் அஹமது, ரஷீது லத்தீஃப் என ஸ்டார்கள் எல்லோரும் இருந்தனர்.
மொகமது அசாருதின் தலைமையிலான இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், சித்து, ஜடேஜா, ஶ்ரீநாத், கும்ப்ளே, வெங்கடேஷ் பிரசாத், காம்ப்ளி, மஞ்ரேக்கர் என 90-களின் முக்கிய ஸ்டார்கள் அத்தனைப் பேரும் இருந்தனர். ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இடையே இருந்து மட்டும் அல்ல, வீரர்களிடம் இருந்தும் அனல் பேட்டிகள் பறந்தன.
இந்த மேட்சுக்கு உலகின் சிறந்த அம்பயர்களான இங்கிலாந்தின் டேவிட் ஷெப்பர்டும், மேற்கு இந்தியத் தீவுகளின் ஸ்டீவ் பக்னரும் நியமிக்கப்பட்டனர். டாஸ் வென்ற கேப்டன் அசாருதின் முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுப்பார். இந்த உலகக்கோப்பையில் எல்லோரது கவனமும் சச்சின் டெண்டுல்கர் மீதுதான் இருந்தது. 23 வயது இளைஞனான சச்சின் க்ரூப் ஸ்டேஜில் கென்யா மற்றும் இலங்கைக்கு எதிரானப் போட்டிகளில் சதமும், ஆஸ்திரேலியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அரை சதங்களும் அடித்து லீடிங் ரன் ஸ்கோரராக இருப்பார். அதனால் இந்தியா பேட்டிங் என்றதும் அனைவரது கவனமும் சச்சின் மீது போனது.
ஆனால் அன்று ரசிகனின் கனவில் இடி விழுந்தது. விழுந்த முதல் விக்கெட்டே சச்சின் டெண்டுல்கருடையதுதான். சித்துவும், சச்சினும்தான் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள். இருவருமே நிதானமாக ஆட்டத்தை தொடங்க, சச்சின் டெண்டுல்கர் 31 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஆனால் சித்து அதிரடி ஆட்டம் ஆடினார். 115 பந்துகளில் 93 ரன்கள். இதில் 11 பவுண்டரிகள். ஆனால் சித்துக்குப் பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிதாக ரன் எடுக்கவில்லை. இதனால் இந்தியா 236 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துவிடும். இதன்பிறகுதான் அதிரடி ஆட்டம் ஆடுவார் அஜய் ஜடேஜா. நான்காவது டவுன் பேட்ஸ்மேனான இவர் 25 பந்துகளில் 45 ரன்கள் அடிப்பார். இதில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள். அஜய் ஜடேஜாவின் கடைசிகட்ட அதிரடியால் சவால்விடக்கூடிய ஸ்கோரான 287 ரன்களை அடித்திருக்கும் இந்தியா. பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் பாகிஸ்தானுக்கு சேஸிங்கில் ஒரு ஓவர் குறைக்கப்பட்டு 49 ஓவர்களில் 288 ரன்கள் என டார்கெட்டை ஃபிக்ஸ் செய்யும் இந்தியா.
இந்தியா சூப்பர் டார்கெட்டை செட் செய்துவிட்டது. இனி பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை என நினைக்கும்போதுதான் பாகிஸ்தானின் ஓப்பனர்கள் தெறிக்கவிடுவார்கள்.ஶ்ரீநாத்தும், பிரசாத்தும் பந்தைப் போடுவதுதான் தெரியும். அடுத்த சில விநாடிகளில் பந்து பவுண்டரியில் இருக்கும். 10 ஓவர்களில் பாகிஸ்தான் விக்கெட் எதுவும் இழக்காமல் 84 ரன்கள் அடித்திருக்கும். 11வது ஓவர் ஶ்ரீநாத்தின் ஓவர். முதல் பந்திலேயே முதல் விக்கெட்டாக சயீத் அன்வரின் விக்கெட்டை எடுப்பார் ஶ்ரீநாத். ஆனால் மறுபக்கம் அமீர் சொஹைலின் அதிரடிகள் தொடரும். 15 ஓவர்களுக்குள்ளாகவே அணில் கும்ப்ளே, வெங்கடபதி ராஜு என ஸ்பின்னர்களையும் முயற்சி செய்வார் கேப்டன் அசாருதின். ஆனால் ராஜுவின் பந்துகள் சிக்ஸருக்குப் பறக்கும்.
15வது ஓவரை மீண்டும் வெங்கடேஷ் பிரசாத்திடம் கொடுப்பார் அசார். பாகிஸ்தான் அப்போது 14 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்திருக்கும். முதல் பந்தை இஜாஸ் அஹமது பவுண்டரிக்கு விரட்டுவார். அடுத்தப்பந்து சிங்கிள். அமீர் சொஹைல் ஸ்ட்ரைக்குக்கு வருவார். இடது கை பேட்ஸ்மேனான அமீர் சொஹைலுக்கு பிரசாத்துடன் சேர்ந்து பயங்கர அக்ரசிவாக ஃபீல்டை செட் செய்வார் அசாருதின். இடது கை பேட்ஸ்மேனான அமீர் சொஹைலுக்கு சில்லி மிட் ஆன், கல்லியில் ஃபீல்டர்களை நிறுத்துவார். மூன்றாவது பந்து டாட் பால். நான்காவது பந்தும் டாட் பால். ஆனால் ஐந்தாவது பந்தை லெக் சைடில் ஃபீல்டை பலமாக நிறுத்திவிட்டு ஆஃப் சைடில் போடுவார் பிரசாத். கிரீஸைவிட்டு இறங்கி வந்து கவர் திசையில் ஏறி அடிப்பார் சொஹைல். பந்து பவுண்டரிக்குப் பறக்கும். இங்குதான் ட்விஸ்ட். பந்து பவுண்டரியில் விழுந்ததும் ''நீ எங்கு ஆட்களை நிறுத்துகிறாயா அங்கேயே அடிப்பேன்'' என சைகைக்காட்டி சொல்வார் சொஹைல். கடுப்பாகும் பிரசாத் எந்த உணர்சிகளையும் வெளியே காட்டாமல் ஓவரின் கடைசிப் பந்தை வீசுவார். சரியான லைன் அண்ட் லெங்த்தில் வீசப்படும் இந்த பால் அமீர் சொஹைலின் ஆஃப் ஸ்டம்ப்பை வீழ்த்தும். சொஹைலைப் பார்த்து ''பெவிலியனுக்குப் போ'' என கைகாட்டுவார் பிரசாத். இந்தியா-பாகிஸ்தான் மேட்சின் உச்சபட்ச ரைவல்ரி இந்த ஓவர். அப்போது அம்பயரான டேவிட் ஷெப்பர்டு பிரசாத்தைக் கூப்பிட்டு கண்டிக்கும்போதெல்லாம் அம்பயர் மேல் இந்திய ரசிகர்களுக்கு கடும் கோபம் வந்தது. சொஹைலின் விக்கெட் விழுந்ததுமே பாகிஸ்தானின் டெம்ப்போ குறையும்.
இறுதியில் 49 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் அடிக்கும். இந்தியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும்.

2. 1997, இன்டிபென்டன்ஸ் கப், சென்னை!
கிரிக்கெட் உலகம் என்றுமே நினைவில் வைத்திருக்கும் மறக்கமுடியாத ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்தது. முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் இவ்வளவு ரன்கள் அடிக்கமுடியும் என்பதை உலக ரசிகர்களுக்கு அடித்துக் காண்பித்தார் சயீத் அன்வர்.
1997, மே-21 சென்னையில் நடைபெற்றது இந்தப் போட்டி.சச்சின் டெண்டுல்கர்தான் இந்திய அணியின் கேப்டன். டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ரமீஸ் ராஜா பேட்டிங்கைத் தேர்ந்தெடுப்பார். ஷாயித் அஃப்ரிடி 5 ரன்களில் ஆட்டம் இழந்துவிடுவார். இரண்டாவது விக்கெட்டாக ரமீஸ் ராஜாவும் 22 ரன்களில் ஆட்டம் இழப்பார். ஆனால் மூன்றாவது விக்கெட்டுக்கு இஜாஸ் அஹமத்தும், அன்வரும் பார்ட்னர்ஷிப் போட்டு இந்திய பெளலிங்கை உரித்தெடுப்பார்கள். மூன்றாவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப். மீண்டும் நான்காவது விக்கெட்டுக்கு இன்ஸமாம் உல் ஹக்குடன் சேர்ந்து அடித்தெடுப்பார் அன்வர். ஒருகட்டத்தில் சென்னை ரசிகர்கள் சயீத் அன்வரின் பேட்டிங்கிற்கு ரசிகர்களாகி கைதட்டி, விசில் அடிக்க ஆரம்பிப்பார்கள்.
41 வது ஓவரை அணில் கும்ப்ளே வீசுவார். இந்த ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை சிதறவிடுவார் சயீத் அன்வர். சச்சின் டெண்டுல்கர் 47வது ஓவரை வீசுவார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்னான விவியன் ரிச்சர்ட்ஸின் 189 ரன்களை பவுண்டரியுடன் கடந்து உலக சாதனைப் படைப்பார் அன்வர். இன்னும் நான்கு ஓவர்கள் இருப்பதால் அன்வீர் இன்று இரட்டை சதம் அடிப்பார் என எல்லோரும் எதிர்பார்க்க, அன்வரின் விக்கெட்டை காலி செய்வார் சச்சின் டெண்டுல்கர். அன்வரின் கேட்சைப் பிடித்திவிட்டு தலையை தரையில் கவிழ்த்து அழுவார் கங்குலி. இந்திய வீரர்களின் கான்ஃபிடென்ஸை குலைத்த இன்னிங்ஸ் அது.
இளம் கேப்டனான சச்சினுக்கு எப்போது எந்த வகையிலாவது இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித்தந்துவிட வேண்டும் என்கிற துடிப்பு இருந்தது. பேட்ஸ்மேனாக, பெளலராக, ஃபீல்டராக ஏன் பை ரன்னராகக் கூட இந்தியாவுக்கு வெற்றியைத் பெற்றுத்தந்துவிட முடியும் என்கிற நம்பிக்கையில் இருந்தார் சச்சின். அதற்கான உதாரணம்தான் இந்தப் போட்டி.
பாகிஸ்தான் அன்வரின் உலக சாதனையோடு 327 ரன்கள் அடிக்க இந்தியா சேஸ் செய்ய ஆரம்பிக்கும். சச்சின்தான் ஸ்ட்ரைக் செய்வார். முதல் ரன்னே பவுண்டரிதான். சென்னை ஸ்டேடியம் ஆர்ப்பரித்து அடங்க நீண்டநேரம் பிடிக்கும். ஆனால் அந்த பவுண்டரியோடு சச்சின் அகிப் ஜாவித்தின் பந்தில் இன்ஸமாம் உல் ஹக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆவார். 1 டவுன் பேட்ஸ்மேனாக ராகுல் டிராவிட் களம் இறங்குவார். அதுவரை பொறுமையான பேட்ஸ்மேனாக மட்டுமே அறியப்பட்ட டிராவிட் அன்று விஸ்வரூபம் எடுப்பார். ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே பவுண்டரிகள் பறக்கும். நன்றாக விளையாடிக்கொண்டிருக்கும் டிராவிட்டுக்கு பை ரன்னராக சச்சின் களத்துக்குள் வருவார். பை ரன்னராக களத்தில் நின்று இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுக்க முடியும் என சச்சின் நினைப்பார். ஆனால் சில பந்துகள் வரை சச்சின் பை ரன்னராக இருக்க, பாகிஸ்தான் கேப்டன் ரமீஸ் ராஜா இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க சச்சின் வெளியேறுவார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை சென்னையில் அடிப்பார் ராகுல் டிராவிட். 116 பந்துகளில் 107 ரன்கள். வினோத் காம்ப்ளி 80 பந்துகளில் 65 ரன்கள். மண்ணின் மைந்தனான ராபின் சிங் இந்தியாவின் ஒரே சிக்ஸரை அன்று அடித்திருப்பார். ராபின் சிங் 26 பந்துகளில் 35 ரன்கள் அடித்து ரன் அவுட் ஆக இந்தியா 49.2 ஓவர்களில் 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகும்.
சச்சினில் தொடங்கி, கங்குலி, டிராவிட், காம்ப்ளி, ராபின் சிங் நயன் மோங்கியா வரை யாராவது ஒருவர் வெற்றிபெறவைத்துவிடுவார்கள் என எல்லோரையும் எதிர்பார்த்து இந்திய ரசிகர்கள் ஏமாந்த போட்டி இது.

3. 1997, ஃப்ரெண்ட்ஷிப் கப், டொரான்ட்டோ
இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஃப்ரெண்ட்ஷிப் கப் என்கிற பெயரில் கனடாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் 5 ஒருநாள் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முதல்முறையாக 1997-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது ஃப்ரெண்ட்ஷிப் கப்.
அன்வரின் வேர்ல்டு ரெகார்டு சதத்துக்குப் பிறகு நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் போட்டிகள் என்பதால் கிரிக்கெட் ரசிகனின் கவனம் முழுக்க இந்த சீரிஸில்தான் இருந்தது. யாருமே நம்ப முடியாது. ஆனால் உண்மை. இந்த சீரிஸின் முதல் இரண்டு மேட்சுகளை இந்தியா வென்றுவிடும். சச்சின் டெண்டுல்கர்தான் கேப்டன். மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் பாதியில் நின்று அடுத்தநாள் புதுப்போட்டியாக ஆரம்பிக்கும். செப்டம்பர் 18-ம் தேதி இந்தப் போட்டி டொரான்ட்டோவில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங்கை ஆரம்பிக்கும் இந்தியா செம சொதப்பலான ஆட்டம் ஆடும். 2 டவுன் பேட்ஸ்மேனாக சச்சின் டெண்டுல்கர் இறங்குவார். கங்குலி 2 ரன், சபா கரீம் 2 ரன், சச்சின் டக் அவுட் என இந்திய ரசிகனுக்கு வரிசையாக அதிர்ச்சிகள் காத்திருக்கும். ஆனால், அசாருதின் களத்தில் நின்று இந்தியாவின் ரன்களை உயர்த்துவார். 110 பந்துகளில் 67 ரன்கள் அடிப்பார் அசாருதின். ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் ராபின் சிங் திடீர் சர்ப்ரைஸாக அதிரடியாக ரன்கள் அடிப்பார். 29 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் ராபின் சிங் 32 ரன்கள் அடிக்க இந்தியா 50 ஓவர்களில் 182 ரன்கள் அடிக்கும்.
முதல் இரண்டு போட்டிகளை பாகிஸ்தான் இழந்துவிட்டதால் மூன்றாவது மேட்ச்சின் சேஸிங் பரபரப்பானது. இந்தியாவின் டார்கெட்டும் மிகவும் குறைவு என்பதால் பாகிஸ்தான் வெற்றிபெற்றுவிடும் என்பதுதான் கணிப்பு. ஆனால் ஆட்டம் தலைகீழானது. செளரவ் கங்குலி என்னும் டாப் கிளாஸ் மித வேகப்பந்து பெளலரை உலகம் கண்டுகொண்ட நாள் அது.
87 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்திருக்கும்போது பந்து வீசுவார் கங்குலி. 103 ரன்னில் முதல் விக்கெட்டாக சலீம் மாலிக்கின் விக்கெட் கங்குலிக்கு விழும். ஹஸன் ராஸா, இஜாஸ் அஹமது, மொய்ன் கான் என அடுத்தடுத்து வரிசையாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்துவார் கங்குலி. ஐந்தாவது விக்கெட்டாக அகிப் ஜாவித்தின் விக்கெட்டும் விழும். 10 ஓவர்கள் வீசி 3 மெய்டன் ஓவர்கள் போட்டு வெறும் 16 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார் செளரவ் கங்குலி. முதல்முறையாக இந்த சீரிஸில் 4-1 என பாகிஸ்தானை வீழ்த்தியிருக்கும் இந்தியா.
4. 1999, உலகக்கோப்பை சூப்பர் சிக்ஸ், மான்செஸ்டர்
1999 உலகக்கோப்பை இந்தியாவுக்கு மோசமான உலகக்கோப்பைகளில் ஒன்று. உலகக்கோப்பை தொடங்கிய சில நாள்களிலேயே சச்சினின் அப்பா இறந்துவிட அவர் இந்தியா பறந்து மீண்டும் இங்கிலாந்து வந்து எமோஷனல் டவுனோடு ஆட ஆரம்பிப்பார். இந்த உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு மறக்கமுடியாத ஒரே போட்டி சூப்பர் சிக்ஸில் இந்தியாவும்-பாகிஸ்தானும் சந்தித்துக்கொண்ட போட்டிதான்.
அப்போது இந்தியாவுக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் யுத்தம் உச்சத்தில் நடந்துகொண்டிருந்தது. அதனால் இந்த இந்தியா- பாகிஸ்தான் மேட்சையும் ஒரு போராகவே இருநாட்டு ரசிகர்களும் பார்த்ததால் இங்கிலாந்தில் அனல் பறந்தது.
கேப்டன் அசாருதின் டாஸ் வென்றதும் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். சச்சின் டெண்டுல்கரும், சடகோபன் ரமேஷும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களம் இறங்கினார்கள். மிகப்பொறுமையாக ஆட்டம் போய்க்கொண்டிருந்தது. சடகோபன் ரமேஷ் 20 ரன்களில் ஆட்டம் இழப்பார். ஆனால் என்றைக்கும் பார்க்கமுடியாத சச்சினை அன்று பார்க்கமுடியும்.கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் களத்தில் நின்ற சச்சின் தனக்கு ஸ்ட்ரைக்கை அதிகம் எடுத்துக்கொள்ளமாட்டார். வாசிம் அக்ரம் சச்சின் டெண்டுல்கருக்கு மிகவும் கடுமையாகப் பந்துவீசுவார். செம டைட்டான ஃபீல்டிங் செட் அப் இருக்கும். இறுதியில் அசார் மொகமதுவின் பந்துவீச்சில் 65 பந்துகளில் 45 ரன்களுக்கு அவுட் ஆவார் சச்சின். டிராவிட் 89 பந்துகளில் 61 ரன்கள் அடிப்பார். கேப்டன் அசாருதின் 77 பந்துகளில் 59 ரன்கள் அடிக்க இந்தியா 50 ஓவர்களில் 227 ரன்கள் அடிக்கும்.
ஈஸி டார்கெட்தான். ஆனால் இந்தியாவின் பெளலிங் அன்று செம டஃப்பாக இருந்ததுதான் வெற்றிக்குக்காரணம். சீரான இடைவெளிகளில் பாகிஸ்தானின் விக்கெட்டுகள் விழுந்துகொண்டேயிருந்தன. அன்வர், இன்ஸமாம், மொயின் கான் என மூவர் மட்டுமே 30 ரன்களுக்கு மேல் அடித்திருப்பர். மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லோருமே 20 ரன்களுக்குள் காலியாக பாகிஸ்தான் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகும். வெங்கடேஷ் பிரசாத் இந்த மேட்சில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். ஶ்ரீநாத் 3 விக்கெட்டுகளை எடுத்திருப்பார்.

5. 2003 உலகக்கோப்பை லீக் சுற்று, சென்சூரியன்
அன்வர், சச்சின் பேட்டிங் திறமைகளுக்கு இடையே நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் யுத்தம் இது. 2003 உலகக்கோப்பையின் உச்சபட்ச பரபர ஆட்டம் இதுதான். வக்கார் யூனுஸ் தலைமையில் பாகிஸ்தான் அணியும், கங்குலி தலைமையில் இந்திய அணியும் லீக் சுற்றில் 2003, மார்ச்-1ம் தேதி மோதிக்கொண்டன.
வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், ஷோயப் அக்தர் என தென் ஆப்ரிக்க மைதானங்களுக்கு ஏற்ற உலகின் தரமான மூன்று வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட பலமான அணியாக இருந்தது பாகிஸ்தான். அதனால் இந்த மேட்ச்சின் ஃபேவரிட்ஸ் பாகிஸ்தான்தான். டாஸ் வென்ற வக்கார் யூனுஸ் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.
2003 உலகக்கோப்பை பாகிஸ்தான் போட்டிக்கும் நடுவர்களில் ஒருவர் இங்கிலாந்தின் டேவிட் ஷெப்பர்டு. ஜாகிர் கான், ஜவகல் ஶ்ரீநாத், ஆசிஷ் நெஹ்ரா, அணில் கும்ப்ளே, வீரேந்திர ஷேவாக், தினேஷ் மோங்கியா எனத் தான் உள்பட ஏழு பெளலர்களைப் பயன்படுத்துவார் கங்குலி. ஆனால் சச்சினுக்கு மட்டும் பெளலிங் வாய்ப்பு தரப்பட்டிருக்காது. சயீத் அன்வர் 126 பந்துகளில் 101 ரன்கள் அடிக்க பாகிஸ்தான் 50 ஓவர்களில் 273 ரன்கள் அடிக்கும்.

சென்சூரியனில் சேஸிங் கஷ்டம் என எல்லோரும் நினைக்க அதை அசால்ட்டாக டீல் செய்திருப்பார் சச்சின் டெண்டுல்கர். எப்போதுமே முதல் ஸ்ட்ரைக்கரான ஷேவாக்கை நான் ஸ்ட்ரைக்காக்கிவிட்டு அன்று ஸ்ட்ரைக்கராவர் சச்சின் டெண்டுல்கர். ஆரம்பமே அதிரடிதான். வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், ஷோயிப் அக்தர் என எல்லோரது ஓவர்களிலும் பவுண்டரிகளைத் தெறிக்கவிட்டார் சச்சின். 5 ஓவர்களில் 50 ரன்களைத்தாண்டியது இந்தியா. ஷேவாக் 21 ரன்களில் ஆட்டம் இழக்க, கங்குலி டக் அவுட் ஆவார். ஆனால் மொகமது கைஃபுடன் பார்ட்னர்ஷிப் போட்டு வெளுப்பார் சச்சின். 75 பந்துகளில் 98 ரன்கள். சதம் அடிப்பார் என எல்லோரும் எதிர்பார்க்க 98 ரன்களில் அக்தரின் பந்துவீச்சில் அவுட் ஆவார் சச்சின். ஆனால் அதற்குள் ஸ்கோர் 28 ஓவர்களில் 177 ரன்களைத் தொட்டிருக்கும். அதற்குப் பின்னான 100 ரன்களை டிராவிட்டும், யுவராஜ் சிங்கும் அடித்து முடிக்க இந்தியா 46வது ஓவரிலேயே டார்கெட்டை முடிக்கும்.
தென் ஆப்ரிக்க மண்ணில் அதுவும் உலகின் மிகச்சிறந்த பெளலிங் அட்டாக்கை துவம்சம் செய்து பெற்ற இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் என்றுமே மறக்கமாட்டார்கள். இதே போல் உங்களால் மறக்கமுடியாத இந்தியா பாகிஸ்தான் மேட்சுகளை கமென்ட்டில் சொல்லுங்கள். விவாதிப்போம்!