Published:Updated:

இவன் ஃபீல்டர்களை ரசிகர்களாக்குவான்... ரசிகர்களை ஃபீல்டர்களாக்குவான்...! #HBDGayle #UniversalBoss

எந்தத் தொடருக்குச் சென்றாலும் இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை தன் வசமாக்கி விடுவார். இவர் ஆட்டத்தைக் காண்பதற்காக மட்டுமே பல ஆயிரம் பேர் கூடுவர். கெய்ல் களத்துக்கு வந்தால் கேலரியில்தான் ஃபீல்டர்களுக்கு இடம் என்பதை தன் ஒவ்வோர் ஆட்டங்களிலும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

இவன் ஃபீல்டர்களை ரசிகர்களாக்குவான்... ரசிகர்களை ஃபீல்டர்களாக்குவான்...!  #HBDGayle #UniversalBoss
இவன் ஃபீல்டர்களை ரசிகர்களாக்குவான்... ரசிகர்களை ஃபீல்டர்களாக்குவான்...! #HBDGayle #UniversalBoss

வம்பர் 13, 2012. வங்கதேச - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் முதல் பந்து. பொதுவாக டி-20 போட்டியாக இருந்தாலும், முதல் ஓவரை பேட்ஸ்மேன்கள் பொறுமையாகவே எதிர்கொள்வார்கள். ஆனால், அந்தப் பந்து 90 மீட்டர்கள் தாண்டிப் போய் விழுந்தது. டெஸ்ட் போட்டியில் இப்படியொரு தொடக்கமா. களத்தில் நிற்பது கிறிஸ் கெய்ல் எனும் அரக்கனாக இருந்தால் இது சாத்தியமே. சேவாக் பத்துப் பந்துகளுக்கு ஒரு முறை காட்டும் அதிரடியை இவர் அனைத்துப் பந்துகளிலும் காட்டத் தொடங்கினார். ஜாம்பவான்கள் விவ் ரிச்ர்ட்ஸ், ப்ரையன் லாரா க்ளாசிக் ஷாட்கள் மூலம் கவனம் ஈர்த்தனர் எனில், தன் மேஸ்ஸிவ் ஷாட்களால் சிலிர்க்க வைத்தார் இந்த யுனிவர்சல் பாஸ். இந்தியா விளையாடும் டெஸ்ட்டையே பார்க்க யோசிக்கும் காலத்தில் வெஸ்ட் இண்டிஸின் டெஸ்ட் போட்டிகளையும் பார்க்க வைத்தவர் கெய்ல். #HBDGayle

டெஸ்ட் போட்டிகளிலேயே இந்தக் காட்டு காட்டும் இவர் ஒரு நாள் போட்டிகளில் சும்மா இருப்பாரா. தனது ஆரம்பகாலங்களிலேயே அசால்ட்டாக பேட்டைச் சுழற்றி ஆஸ்திரேலியாவையே கதிகலங்க வைத்தார். 2004 மற்றும் 2006 சாம்பின்ஸ் டிராபியின் போது அசுர ஆட்டத்தினால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த, இவர் கிரிக்கெட்டின் விதிமுறைகள் நுணுக்கங்கள் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர்.

ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்கூப் ஷாட் என்று தனக்குப் பரிட்சயமில்லாததை என்றும் இவர் செயல்படுத்தியதே இல்லை. இவரின் 6.4 அடி உயரத்தைப் போலவே இவரின் ரன்களும் ஆறு நான்குகளிலேயேதான் இருக்கும். இவரின் மொத்த ரன்களில் 55 சதவிகிதத்துக்கு மேல் பௌண்டரிகளால் மட்டுமே எடுத்தவை. சிங்கிள்ஸ், டபுள்ஸ் என ஓடி ஓடி ரன் எடுப்பது இவருக்குப் பிடிக்காத செயல்.

வேகமாக வரும் பந்தின் வேகம் குறையாமலும், வேகம் குறைந்து வரும் பந்துகளின் வேகத்தைக் கூட்டியும் அவுட் ஆஃப் ஸ்டேடியம் ஆக்குவதுதான் இவரின் ஆல் டைம் அஜெண்டா. இவர் அடித்த சிக்சர்கள் கேலரியில் இருக்கும் பல ரசிகர்கள் முகத்தைப் பதம் பார்த்திருக்கிறது. ஒருநாள் போட்டியில் இரட்டை சதம், ஒரு இன்னிங்க்ஸில் அடிக்கப்பட்ட அதிக சிக்ஸர்கள், டி20ல் அதிக சிக்ஸர்கள், அதிக செஞ்சுரிகள் என எண்ணிலடங்கா சாதனைகளைச் சுமந்து கொண்டே திரிகிறார்.

சர்வதேசப் போட்டிகள் மட்டுமன்றி உள்நாட்டு கிரிக்கெட்டிலும் கெய்லின் ஆதிக்கம் தொடரத்தான் செய்கிறது. 2008-ம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் போட்டியில் 3 வருடங்கள் இருந்த இடம் தெரியாமல் கொல்கத்தா அணியில் இவர் இருக்க, ரசிகர்களின் ஏமாற்றத்துக்கு ஆளானார். அடுத்த அத்தியாயம் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் ஆரம்பமானது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளில் ஐந்து சதங்களோடு ஐ.பி.எல் தொடரை தனது ராஜாங்கமாக்கிக் கொண்டார். அதிலும், புனே வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில் இவர் ஆடிய ரணகள ஆட்டம் இன்னும் யூ-டியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் ஒன்றாக இருக்கிறது. இந்திய துணைக் கண்டத்தில் நடக்கும் ஓர் உள்ளூர் ஆட்டத்தை உலக ரசிகர்கள் மத்தியில் டிரெண்டிங்காக்கியது இந்த கெய்ல் ஃபேக்டர்.

ஐ.பி.எல் மட்டுமல்லாது வங்கதேச ப்ரீமியர் லீக்கையும் இவர் விட்டுவைக்கவில்லை. BPL-ல் மொத்தமாக 500 பார்வையாளர்கள் இருந்தாலே ஆச்சர்யம். ஆனால், இவரின் வருகைக்குப் பிறகு கிட்டத்தட்ட 5,000 ரசிகர்களைக் கொண்டு அரங்கமே நிரம்பி வழிந்தது. ராங்க்பூர் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் 18 சிக்ஸர்கள் அடித்து தன் சாதனையைத் தானே முறியடித்தார். இது, தோல்வியையும் குறைந்தபட்ச ரன்களையும் மட்டுமே கண்ட வங்கதேச உள்ளூர் ரசிகர்களுக்கு, இவரது அதிரடி ஆட்டம் வெகுவாகக் கவர்ந்தது. 

வெளியூரிலேயே இப்படியென்றால் உள்ளூரில் கேட்க வேண்டுமா. 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கரீபியன் ப்ரீமியர் லீக்கில் அதிகபட்ச ரன் குவித்தவர் கெய்ல்தான். ஜமைக்கா, கிட்ஸ் அண்ட் நேவிஸ் என இவரின் டீம்கள் மாறிக் கொண்டே இருந்தபோதும் இவரின் யுக்தி ஒன்றுதான்... அது அதிரடி. முக்கியமாக, கெய்ல் போன்ற அதிரடி பேட்ஸ்மென்கள், எப்போதும் கிரீஸைவிட்டு இரண்டு அடி இறங்கியே நிற்பார்கள். இது முன்னணி பவுலர்களையே சற்று தடுமாற செய்துவிடும். லைன் பிடிப்பதே சிரம்மான ஒன்றாகிவிடும். புது பவுலர் என்றால் கேட்கவே வேண்டாம். இவ்வகை அதிரடி பேட்ஸ்மேன்கள், மற்ற பேட்ஸ்மேன்கள்போல இல்லாமல் பந்தைத் தேடி போய் விளாசும் குணம் கொண்டவர்கள். இதனால் பவுலர்களுக்கு அவ்வளவு எளிதில் கான்ஃபிடன்ஸும் கிடைக்காது. கிரிக்கெட்டை திருவிழாவாகப் பார்க்கும் கரீபிய மக்களிடையே இவரின் அணுகுமுறை கொண்டாட்டம் கலந்ததாக இருக்கும். ஒவ்வொரு வெற்றியின்போதும் சிக்ஸ் பேக் தெரியக் கொண்டாடுவது, தன் ரசிகர்களைக் களத்துக்கே அழைத்து அவர்களோடு கங்கம் ஸ்டைலில் ஆடுவது எனக் கொண்டாடிக் களிப்பார் இந்தக் கரீபியன் கிங்.

எந்தத் தொடருக்குச் சென்றாலும் இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை தன் வசமாக்கி விடுவார். இவர் ஆட்டத்தைக் காண்பதற்காக மட்டுமே பல ஆயிரம் பேர் கூடுவர். கெய்ல் களத்துக்கு வந்தால் கேலரியில்தான் ஃபீல்டர்களுக்கு இடம் என்பதை தன் ஒவ்வோர் ஆட்டங்களிலும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். களத்தில் மட்டுமன்றி நிஜ வாழ்க்கையிலும் மக்களின் மனதை வென்றவராகவே இருக்கிறார். 2012-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பெங்களூரில் நடந்த ஒரு போட்டியில், தான் அடித்த சிக்ஸர் ஒரு சிறுமியின் மீது பட்டு காயம் ஏற்பட்டது. மேட்ச் முடிந்த உடன் சிறுமியை நலம் விசாரித்து தனக்கு வழங்கப்பட்ட ஆட்ட நாயகன் விருதையும் அளித்தார். 

தங்கள் நாட்டு வீரர்களுக்கு நிகராக கிறிஸ் கெய்லைக் கொண்டாடும் ரசிகர்கள்தாம் இவரின் ஆட்டத்துக்கான அங்கீகாரம். 2019 உலகக் கோப்பையோடு தன் ஓய்வை அறிவித்திருக்கும் இந்தச் சூறாவளியின் சாதனைகள், கிரிக்கெட் சரித்திரத்தின் தவிர்க்க முடியாத பக்கங்கள்.