Published:Updated:

நெஹ்ரா, தவான், பன்ட்டை உருவாக்கிய தராக் சின்ஹாவுக்கு துரோணாச்சாரியார் விருது!

நெஹ்ரா, தவான், பன்ட்டை உருவாக்கிய தராக் சின்ஹாவுக்கு துரோணாச்சாரியார் விருது!
நெஹ்ரா, தவான், பன்ட்டை உருவாக்கிய தராக் சின்ஹாவுக்கு துரோணாச்சாரியார் விருது!

இந்திய கிரிக்கெட் அணிக்காக 12 வீரர்களை உருவாக்கிய பயிற்சியாளர் தராக் சின்ஹாவுக்கு, துரோணாச்சாரியார் விருது வழங்கி கௌரவித்துள்ளது மத்திய அரசு. 68 வயதான தராக் சின்ஹா, உத்தரப்பிரதேசத்தில் பிறந்தவர். கிரிக்கெட்டுக்காக ஊர்கள், வேலைகள் என மாறி மாறிப் பயணித்துக்கொண்டே இருந்தவர். இந்த அங்கீகாரம் உண்மையில் அவருக்கானது மட்டுமல்ல, அவரைப் போன்ற படைப்பாளிகளுக்கும், அங்கீகாரம் எதிர்பார்க்காமல் உழைக்கும் துரோணர்களுக்கும்! 

“இவர் எந்தவொரு வீரரையும் புறக்கணித்ததில்லை. எவரையும் கொண்டாடவும் மாட்டார்” என்கிறார் இவரது மாணவரும், இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் தொடக்க வீரருமான ஆகாஷ் சோப்ரா. இவர் மட்டுமல்ல,  ராமன் லம்பா, சுரிந்தர் கண்ணா, அஜய் ஷர்மா, ஆஷிஷ் நெஹ்ரா, மனோஜ் பிரபாகர், ஷிகர் தவான் எனப் பல இந்திய வீரர்கள் இவரது குருகுலத்திலிருந்து வந்தவர்கள்தான். இந்திய அணியின் எதிர்கால நம்பிக்கையான ரிசப் பன்ட், இவரது அகாடெமியில் பயிற்சிபெற்றவர். 

நெஹ்ரா, தவான், பன்ட்டை உருவாக்கிய தராக் சின்ஹாவுக்கு துரோணாச்சாரியார் விருது!

போட்டி நாள்களில் அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து ஆட்ட நுணுக்கங்களை  வகுப்பார் சின்ஹா. கிரிக்கெட் விளையாட்டையே உயிர்மூச்சாக நினைத்த இவர், ஒருபோதும் பணத்தைப் பற்றி யோசித்ததில்லை. ஒருசமயம், டெல்லியின் தேவ் கல்லூரியிலிருந்து கிரிக்கெட் பயிற்சியாளாராகப் பணியாற்ற இவருக்கு அழைப்பு வந்தது. ஆனால், கல்லூரியில் பியூன் வேலை மட்டுமே காலியாக இருந்ததால், ரூ.110 சம்பளத்தில் பியூன் என்றே ரெக்கார்டில் கையெழுத்திட்டு பணியில் சேர்ந்தார். சொற்ப சம்பளத்தைப் பற்றி யோசிக்கவில்லை. அந்தக்  கல்லூரி அணியைத் தொடர்ந்து 10 ஆண்டுகள் சாம்பியனாக  வலம்வரச் செய்தார். அவர் பணியில் இருந்த வரை அந்த அணியை யாராலும் அசைக்க முடியவில்லை.

பெண்களையும் ஊக்கப்படுத்தினார்

வீரர்கள் மட்டுமின்றி,வீராங்கனைகளையும் சரிசமமாக உருவாக்கினார் சின்ஹா. இந்திய மகளிர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அஞ்சும் சோப்ராவை பட்டைதீட்டியவரும்  இவர்தான். “கிரிக்கெட் மீதான அவரது அர்ப்பணிப்பு அளப்பரியது. 40 ஆண்டுகளாய் கிரிக்கெட்டை மட்டுமே வாழ்க்கையாக நினைத்து உழைத்துக்கொண்டிருக்கிறார். ``அவர் இல்லையென்றால் நான் இந்த இடத்திலெல்லாம் இருந்திருக்க மாட்டேன்” என்று உருகுகிறார் அஞ்சும் சோப்ரா”. 2001-ல் இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் சின்ஹா. இவரது பயிற்சியில்தான் இந்திய மகளிர் அணி முதல் வெளிநாட்டு டெஸ்ட் தொடரை (தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக) வென்றது. பயிற்சியாளருக்கான பேட்சை அஞ்சும் சோப்ரா அவருக்குக் கொடுத்தபோது, தனது சிஷ்யையிடமே அதை வாங்கிய மகிழ்ச்சியில் கண் கலங்கினாராம் தராக் சின்ஹா.

தொடர் புறக்கணிப்புகள்

16 வயதில் டெல்லி கிரிக்கெட் அணியில் தொடங்கி, சின்ஹாவைப் புறக்கணித்தவர்களின் பட்டியல் மிக நீளம். ராஜஸ்தான் அணிக்காக ரஞ்சிக் கோப்பையை வென்று தந்தபோதும், கிரிக்கெட் போர்டு அவரை வெளியேற்றியது. டெல்லி கிரிக்கெட் சங்கமோ, இவரை முழுதும் புறக்கணித்துத் தள்ளியது. வறுமையில் வீடுகூட இல்லாமல் தவித்தவருக்கு, ஆசிஷ் நெஹ்ரா தான், தனது குருதட்சனையாக அவருக்கு வீடு ஏற்பாடுசெய்து தந்துள்ளார். ஓரிரு வெற்றியாளர்களை உருவாக்கியவர்களுக்கெல்லாம் ‘துரோணாச்சாரியார்’ விருது வழங்கும் விளையாட்டு அமைச்சகமும் இத்தனை ஆண்டுகளாக இவரை அங்கீகரிக்கவில்லை. 

நெஹ்ரா, தவான், பன்ட்டை உருவாக்கிய தராக் சின்ஹாவுக்கு துரோணாச்சாரியார் விருது!

தன்னை அங்கீகரிக்காததைப் பற்றியோ, விருதுகள் வழங்காததைப் பற்றியோ தராக் சின்ஹா வருத்தம் கொள்ளவில்லை. “ஒரு வீரருக்கு இருக்கவேண்டியது மூன்று ‘டி’க்கள் தான். டெடிகேஷன் (அர்ப்பணிப்பு), டிடர்மினேஷன் (மன உறுதி) மற்றும் டிசிபிளின் (ஒழுக்கம்). விளையாட்டைவிட அதைத்தான் எனது மாணவர்களுக்கு அதிகம் கற்றுத்தருகிறேன். ஒருசில வீரர்களுக்கு நண்பர்களாய் இருக்க வேண்டும். ஒருசிலருக்கு ஆசிரியராகவும், ஒருசிலருக்கு பெற்றோராகவும் இருக்க வேண்டும். நான் என் மாணவர்களுக்கு அப்படித்தான். என் மாணவர்கள் ஒவ்வொருவரையும் ‘உங்களால் இந்திய அணிக்கு விளையாட முடியும்’ என்று சொல்லி நம்பிக்கை ஏற்படுத்துவேன். என்றாவது ஒருநாள் இந்திய அணிக்காக விளையாடுவோம் என்ற எனது ஆசை நிறைவேறாமல் போகாது. அப்படி யாருடைய கனவுகளும் கலையாமலிருக்க நான் உதவி செய்துகொண்டிருக்கிறேன். எனக்கு விருதும் பாராட்டுகளும் கிடைக்காததைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. பெவிலியனில் இருந்து  வெளியேறி மைதானத்துக்குள் செல்லும்போது, நான் இன்னும் இளமையடைகிறேன். என் வாழ்நாளின் இறுதி மூச்சு வரை நான் நேசித்த விளையாட்டுக்காக சேவை செய்துகொண்டே இருக்க வேண்டும்” என்பவர். அவருக்கான விருது, அத்தனை பயிற்சியாளர்களுக்குமானது!

இவரிடம் பயிற்சிபெற்று இந்திய அணிக்குள் நுழைந்தவர்கள்

 1. சுரிந்தர் கண்ணா
 2. ரந்திர் சிங்
 3. மனோஜ் பிரபாகர்
 4. ராமன் லம்பா
 5. அஜய் ஷர்மா
 6. சஞ்சீவ் ஷர்மா
 7. அதுல் வாசன்
 8. அஞ்சும் சோப்ரா
 9. ஆசிஷ் நெஹ்ரா
 10. ஆகாஷ் சோப்ரா
 11. ஷிகர் தவான்
 12. ரிசப் பன்ட்