Published:Updated:

`ஜிம்பாப்வேயை இந்திய ஏ அணிகூட வீழ்த்தும்!’ - பாகிஸ்தான் தொகுப்பாளருக்குப் பதிலடிகொடுத்த கம்பீர்

`ஜிம்பாப்வேயை இந்திய ஏ அணிகூட வீழ்த்தும்!’ - பாகிஸ்தான் தொகுப்பாளருக்குப் பதிலடிகொடுத்த கம்பீர்
`ஜிம்பாப்வேயை இந்திய ஏ அணிகூட வீழ்த்தும்!’ - பாகிஸ்தான் தொகுப்பாளருக்குப் பதிலடிகொடுத்த கம்பீர்

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று ஆசியக் கோப்பை லீக் போட்டியில் மோத உள்ளன. ஓராண்டுக்குப் பின்னர் இரண்டு அணிகளும் மோதுவதால், இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களின் ஹாட் டாபிக்காகியிருக்கிறது.

கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இருக்கும் ஊடகங்களில் இந்தப் போட்டிகுறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். இன்று மாலை 5 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டிகுறித்து, நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கின. இந்த நிகழ்ச்சிகளின் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்டனர். 

பாகிஸ்தான் ஊடகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கம்பீர், பாகிஸ்தான் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு தக்க பதிலடிகொடுத்தார். இங்கிலாந்து அணிக்கு எதிராகத் தோல்வியைச் சந்தித்த இந்திய அணி, பாகிஸ்தானை எப்படி எதிர்கொள்ளும் என்று கேள்வி எழுப்பினார் தொகுப்பாளர். இதற்குப் பதிலளித்த கம்பீர், `ஜிம்பாப்வே அணியுடன் வெற்றிபெறுவதற்கும் (பாகிஸ்தான் சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றிருந்தது) இங்கிலாந்து அணியுடன் தோல்வி அடைவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இங்கிலாந்து புள்ளிப்பட்டியலில் எந்த இடத்தில் உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். ஜிம்பாப்வே அணியை இந்திய ஏ அணியே வெல்லும்” என்றார். 

அத்துடன் நிறுத்தாத தொகுப்பாளர், 2017 -ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பாகிஸ்தானிடம் அடைந்த தோல்விகுறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த கம்பீர், ``வெற்றி தோல்விகள் வரும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டிகளின் முடிவுகள்குறித்து எண்ணிப்பாருங்கள். இதில், பாகிஸ்தான் எத்தனை முறை வெற்றிபெற்றுள்ளது’’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, தொகுப்பாளர் பதிலளிக்கவில்லை. 

அதேபோன்று மற்றொரு விவாத நிகழ்ச்சியில், கம்பீர் மற்றும் அஃப்ரிடி ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்கள் இருவரும் பல்வேறு தருணங்களில் களத்திலும் ட்விட்டரிலும் மோதியுள்ளனர். நேற்றும் கிரிக்கெட் தொடர்பாகத் தொடங்கிய விவாதம், பின்னர் காஷ்மீர் பிரச்னை வரை சென்றது. அப்போது, மற்றொரு பங்கேற்பாளரான இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பட்டேல், காஷ்மீர் குறித்துப் பேசுவதற்கான இடம் இதுவல்ல என்று விவாதத்தை  முடித்து வைத்தார். பாகிஸ்தான் தொகுப்பாளருக்கு கம்பீர் அளித்த பதில்தான், இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் ஹாட் டாக்காக உள்ளது.