Published:Updated:

கலீல் அஹ்மத் போன்றவர்கள்தான் இந்திய அணியின் இப்போதைய தேவை!

தரையில் விழுந்து, துள்ளி குதித்து அந்த வெற்றியைக் கொண்டாடினார் கலீல் அஹமத். அவருடன் சேர்த்து ரசிகர்களும் துள்ளி குதித்தனர். ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்த தருணங்கள் அவை.

கலீல் அஹ்மத் போன்றவர்கள்தான் இந்திய அணியின் இப்போதைய தேவை!
கலீல் அஹ்மத் போன்றவர்கள்தான் இந்திய அணியின் இப்போதைய தேவை!

2018 ஆசியக் கோப்பையில் தோனி, ரோகித் என நட்சத்திர பட்டாளம் நிறைந்த இந்திய அணியை, அனுபவமில்லாத ஹாங் காங் அணி ஒருகை பார்த்துவிட்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி மீது பல நெகட்டிவ் விமர்சனங்களை முன்வைக்கலாம். ஒரேயொரு பாசிட்டிவ்... கலீல் அஹ்மத் வரவு..!

ராஜஸ்தானில் சிமென்ட் தரையில் பந்துவீசிக் கொண்டிருந்த அந்த இளைஞன் பல கனவுகளுடன் இந்தியாவுக்காக விளையாடும் முதல் போட்டி. 34 ஓவர்கள் வரையிலும் இந்திய அணியால் ஹாங் காங்கின் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியவில்லை. 34-வது ஓவரில் குல்தீப் யாதவ், ஹாங் காங் அணியின் கேப்டன் அன்சுமன் ரத் விக்கெட்டை வீழ்த்தினார். இந்திய ரசிகர்கள் சற்று ஆறுதல் பெருமூச்சு விட்டனர். அடுத்த ஓவரை கலீல் அஹமத் வீசுகிறார். அந்த ஓவரின் 4-வது பந்தில் 92 ரன்கள் விளாசியிருந்த ஹாங் காங் அணியின் தொடக்க ஆட்டக்காரர் நிசாகத் கான் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட். தரையில் விழுந்து, துள்ளிக் குதித்து அந்த வெற்றியைக் கொண்டாடினார் கலீல் அஹமத். அவருடன் சேர்த்து ரசிகர்களும் துள்ளிக் குதித்தனர். ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்த தருணங்கள் அவை.

தரையில் விழுந்து, துள்ளிக் குதித்தபோது இந்த இளைஞனை அரங்கம் கரகோஷத்தால் வெல்கம் பொக்கே கொடுத்தது. நேற்றைய போட்டியில்10 ஓவர்கள் வீசி 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அறிமுகமான முதல்
போட்டியிலேயே தன்னை அழுத்தமாகப் பதிவு செய்து கொண்டார். அண்டர்-19 உலகக்கோப்பை டி- 20, இந்தியா A மற்றும் இந்தியா B அணிகள் எனப் பல தளங்களில் பயணித்து தனது கனவை அடைந்துள்ளார் கலீல் அஹமத். அந்த இளைஞனின் இந்தப் பயணம் சற்று சுவாரஸ்யமானது. 

ராஜஸ்தான் மாநிலம் டங் பகுதியைச் சேர்ந்தவர் கலீல் குல்ஷித் அஹமத். இடதுகை பந்து வீச்சாளரான அஹமத் சிறு வயதில் எல்லோரையும் போலவே டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார். `சிமென்ட் தரைகளில் விளையாடியபோது பந்து தரையில் குத்தி வேகமாகச் செல்ல வேண்டுமென வேகமாக வீசுவேன். அதுதான் என்னை வேகப்பந்துவீச்சாளனாக மாற்றியது’ என்கிறார் கலீல் அஹமத். இடதுகை பந்துவீச்சாளரான இவருக்கு ஒரு கட்டத்தில் கிரிக்கெட் மீதான ஆர்வம் அதிகமாக, இந்திய அணியின் ஜெர்ஸியை அணிய வேண்டும் என அன்றே முடிவுசெய்துவிட்டார். கலீல் அஹமத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைத்ததும் ஆச்சர்யமான ஒன்று. 

ராஜஸ்தான் அண்டர் -16, ராஜஸ்தான் அண்டர்-19, இந்தியா-A, இந்தியா-B, டெல்லி டேர் டெவில்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் எனப் பல அணிகளுக்காக விளையாடியிருக்கிறார் கலீல் அஹமத். மொத்தம் இரண்டு முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்த கலீல் அஹமத்துக்கு, கொழும்புவில் நடைபெற்ற 3 நாடுகள் பங்கேற்கும் அண்டர்-19 போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. அந்தத் தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய கலீல் அஹமத் மொத்தம் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக, அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக 29 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தத் தொடர் அவருக்கு, 2016-ல் வங்கதேசத்தில் நடந்த அண்டர்-19 உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. 6 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுதான் அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. 

அண்டர் - 19 பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் அவரின் திறமையைக் கண்டுகொள்கிறார். அதன்பிறகு 2016 ஐ.பி.எல் போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காக 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். 

"டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காக விளையாடியது என் வாழ்வில் மிக முக்கியமான நாள்கள். அந்தக் காலகட்டத்தில்தான் என் பௌலிங் தேர்ச்சியடைந்தது. இடதுகை பந்துவீச்சாளரான ஜாகீர் கான் எனது பெளலிங்கின் டெக்னிக்கல் பிரச்னைகளைத் தீர்க்க உதவினார்" என ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் கலீல் அஹமத். 2018 ஐ.பி.எல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இவரை 3 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. அந்தத் தொடரில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாடினார். 

தொடர்ந்து பலமுறை அணியில் இடம்பெற்றிருந்தாலும் பிளேயிங் லெவனில் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் கிடைத்த முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, தன்னை நிரூபித்துள்ளார். சமீபகாலமாக இந்திய அணிக்குத் திறமையான வேகப்பந்துவீச்சாளர்கள் வரத் தொடங்கியிருக்கிறார்கள். இந்திய அணியில் வேகம், ஸ்விங்கில் ஜாலம் நிகழ்த்த ஆள் இருக்கிறது; லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னர், ரைட் ஆர்ம் ஸ்பின்னர்களுக்குப் பஞ்சமில்லை. சைனாமேன் பெளலரும் இருக்கிறார். ஆனால்,  ஜாகிர் கான், நெஹ்ராவுக்குப் பின் இடது கை வேகப்பந்துவீச்சாளர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஆக, கலீல் அஹ்மத் பிளேயிங் லெவனில் தன்னைத் தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றிக் கொள்வது அவருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய அணிக்குமே பிளஸ் பாயின்ட்டாக இருக்கும்.