Published:Updated:

`நாங்கள் கத்துக்குட்டி அணியல்ல... கத்துக்கொடுக்கும் அணி!' - இந்தியாவைத் திணறடித்த ஹாங் காங்!

ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் வரிசையில் ஹாங் காங் அணியும் நாங்கள் கத்துக்குட்டி அணியல்ல. எதிரணிக்கு கற்றுக்கொடுக்கும் அணி என நிரூபித்துள்ளது.

`நாங்கள் கத்துக்குட்டி அணியல்ல... கத்துக்கொடுக்கும் அணி!' - இந்தியாவைத் திணறடித்த ஹாங் காங்!
`நாங்கள் கத்துக்குட்டி அணியல்ல... கத்துக்கொடுக்கும் அணி!' - இந்தியாவைத் திணறடித்த ஹாங் காங்!

லங்கை அணி கத்துக்குட்டிகளிடம் மண்ணைக் கவ்வி தொடரிலிருந்து வெளியேறியது. எப்படி இருந்த டீம் ஒரு காலத்தில் என நியூஸ் பேப்பரைப் புரட்டிப் படித்து முடிக்கும் முன்பே இந்தியாவைப் புரட்டிப் பார்க்கும் இன்னோர் அணி வந்துள்ளதை யாரும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். நேற்று ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கதிகலங்க வைத்துவிட்டது ஹாங் காங்!

துபாயில் நேற்று நடந்த ஆசிய கோப்பையின் நான்காவது லீக் ஆட்டத்தில் இந்தியாவும் ஹாங் காங்கும் மோதின. பாகிஸ்தானுடன் மோதுவதை இலக்காகக் கொண்டு சிறிய அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் சில முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.  இந்திய அணியில் அறிமுக வீரராக நீண்ட கால இடது கை வேகப்பந்து வீச்சாளர் இல்லாத குறையைப் போக்கும் வகையில் 20 வயதான கலீல் அஹமது இடம்பெற்றார்.

டாஸில் வென்ற ஹாங் காங் கேப்டன் அன்சூமான் ராத் ஃபீல்டிங் எடுத்ததிலேயே அவர்களது நம்பிக்கை தெரிந்தது. பிட்ச் ஸ்லோவாக இருந்ததால் இந்திய அணியின் ஸ்கோர் மெதுவாக நகர்ந்தது. வழக்கத்துக்கு மாறாகத் தொடக்கத்திலிருந்தே கொஞ்சம் அதிரடி காட்டிய கேப்டன் ரோஹித் ஷர்மா 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இரண்டாவது விக்கெட்டுக்கு விராட் கோலியின் இடத்தைப் பூர்த்தி செய்யும் பொருட்டு அம்பதி ராயுடு இறங்கினார். ராயுடுவும் ஷிகர் தவானும் இணைந்து பிட்ச்சுக்குத் தகுந்ததைப் போல் ரொட்டேட் செய்து கொண்டே இருந்தனர். ஹாங் காங் பவுலிங் தரப்பும் ஆடுகளத்துக்கு ஏற்றாற்போல் பிரக்ஷர் கொடுத்துக்கொண்டே இருந்தது.

19.4 ஓவர்களில்தான் 100 ரன்களை தாண்டியது இந்தியா. இரண்டாவது விக்கெட்டுக்கு 116 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்த ராயுடு 60 (70) ரன்கள் எடுத்து நவாஸ் பந்தில் அவுட்டானார். மூன்றாவது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் - ஷிகர் தவான் அதிரடியாக ஆடினர். கார்த்திக் வந்ததும் கியரை மாற்றிய தவான், பந்தைத் தூக்கி அடித்து பவுண்டரிகளாக மாற்றிக்கொண்டே இருந்தார். 105 பந்துகளில் சதம் கடந்து அசத்திய ஷிகர் தவான் 127 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் இந்தியாவின் மிடில் ஆர்டர் சோகம் மீண்டும் தொடர்ந்தது. 

நான்காவது விக்கெட்டுக்கு இறங்கிய முன்னாள் கேப்டன் தோனி டக் அவுட் ஆனதை அடுத்து இந்திய விக்கெட்டுகள் சரியத் தொடங்கியது. வெறும் 8 ரன்கள் இடைவெளியில் 3 முன்னணி விக்கெட்டுகளை இழந்ததால், இந்தியாவின் ரன் ரேட் அப்படியே குறைந்தது. டெய்லண்டர்களும் விரைவில் வீழ்ந்தனர். கடைசி 10 ஓவர்களில் மட்டும் வெறும் 48 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்தது. இதில் 5 விக்கெட்டுகளையும் இழந்தது. 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் எடுத்தது. 7 மாத இடைவெளிக்குப் பிறகு வந்த கேதர் ஜாதவ் 28 ரன்களுடனும் களத்தில் இருந்தார். ஃபீல்டிங்கிலும் அசத்திய ஹாங் காங் தரப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கின்ஜித் ஷா 3 விக்கெட்டுகளும் இஷான் கான் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பின்னர் 286 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஹாங் காங் அணி களம் இறங்கியது விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தி விடலாம் என நினைத்திருந்த இந்திய வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றமே கிடைத்தது. கேப்டன் அன்சூமன் ராத்தும், நிஜாகத் கானும் முதல் விக்கெட்டுக்கு 34 ஓவர்களில் 174 ரன்கள் அடித்து பட்டையைக் கிளப்புவார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு பெரிய அணிக்கு எதிராக கத்துக்குட்டி அணி என வர்ணிக்கப்பட்ட ஹாங் காங் எந்தவித பயமுமின்றி விளையாடியது. முதல் 10 ஓவர்களில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை அடித்து ஆடினர். 12-வது ஓவரை வீசிய ஷர்துல் தாகூரின் ஓவரில் மட்டும் 17 ரன்கள் அடித்து நிஜாகத் கான் அரை சதம் கடந்தார். இவருக்குப் பக்கபலமாக ஆடிய கேப்டன் அன்சூமன் ராத்தும் அரை சதம் அடித்தார். ஐ.பி.எல் தொடரில் கலக்கிய ஷர்துல் தாகூர் முதல் 4 ஓவர்களில் 41 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அதிலும் ஒரே ஓவரில் இரண்டு நோ பால்கள், ஒரு வைட் வேறு. ஃப்ரீ ஹிட் மூலமே ஹாங் காங் அணிக்கு 10 ரன்கள் கிடைத்தது. 

பார்ட் டைம் பவுலர் கேதார் ஜாதவ், ஸ்பின் பவுலர்கள் குல்தீப் யாதவ், சாஹல் மூவரும் ரன்களை கட்டுப்படுத்தினாலும் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. குல்தீப் வீசிய ஒரு ஓவரில் நான்கு கூக்ளிகளையும் அற்புதமாகத் தடுத்து ஆடினார் நிஜாகத் கான். கவர் டிரைவ், ரிவர்ஸ் ஸ்வீப் என ஒவ்வொரு ஷாட்டும் இந்திய அணிக்கு சவால் அளிக்கும் விதமாக இருந்தது. விக்கெட்டை இழக்காமல் இவர்கள் ஆடியதைப் பார்த்து கேப்டன் ரோகித் சர்மா பதற்றமடைந்தார்.

ஒரு வழியாக நிஜாகத் கான், குல்தீப் பந்தில் அவுட்டாக அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழத் தொடங்கியது. இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது தன் முதல் போட்டியிலேயே ஸ்டம்ப்பை நோக்கியும், பெளன்ஸரும் மாற்றி மாற்றி வீசி ஆச்சர்யப்படுத்தினார். 50 ஓவர்களும் ஆடிய ஹாங் காங் அணி 259 ரன்கள் எடுத்து வெறும் 26 ரன்களில் தோல்வியடைந்தது.

ஸ்லோ பிட்ச், ஸ்டம்ப்பை நோக்கி அதிகமாக பந்து வீசாதது, மிடில் ஆர்டரில் மீண்டும் மீண்டும் திணறுவது போன்ற தவறுகளே ஒரு கத்துக்குட்டியிடம் இந்திய அணியைக் கலங்க வைத்தது. ஆப்கானிஸ்தான், வங்கதேசம் வரிசையில் ஹாங் காங் அணியும் நாங்கள் கத்துக்குட்டி அணியல்ல. எதிரணிக்குக் கற்றுக்கொடுக்கும் அணி என நிரூபித்துள்ளது.