Published:Updated:

``நான் அந்த அளவுக்கு மோசமாக விளையாடியதில்லை” - ஒருநாள் அணிக்குத் தேர்வாகாதது குறித்து அஷ்வின்!

``நான் அந்த அளவுக்கு மோசமாக விளையாடியதில்லை” - ஒருநாள் அணிக்குத் தேர்வாகாதது குறித்து அஷ்வின்!
``நான் அந்த அளவுக்கு மோசமாக விளையாடியதில்லை” - ஒருநாள் அணிக்குத் தேர்வாகாதது குறித்து அஷ்வின்!

இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின்தான் மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்புவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். தமிழகத்தைச் சேர்ந்தவரான இவர் தற்போது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு மட்டும்தான் தேர்வு செய்யப்படுகிறார். அஷ்வினும், ஜடேஜாவும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான இந்திய அணிக்குத் தொடர்ந்து தேர்வாகாமல் இருந்து வருகின்றனர். இங்கிலாந்து தொடரிலும் ஜடேஜா மற்றும் அஷ்வின் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே தேர்வாகினர். ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கு சஹால் மற்றும் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டனர். அஷ்வின் கடந்தாண்டு ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராகத்தான் கடைசியாக ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதன் பின்னர் அவர் லிமிடெட் ஓவர் இந்திய அணிக்குத் தேர்வாகவில்லை.

இந்நிலையில் நேற்று அவர் `சலாம் கிரிக்கெட்’ என்ற கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் அவர் தான் லிமிடெட் ஓவர் போட்டிக்கான அணிக்குத் தேர்வாகாதது குறித்துப் பேசினார். அதில், ``ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்குத் தயாராக நான் இன்னும் என்னை மேம்படுத்தவேண்டும். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நான் அதிகம் தவறு செய்ததில்லை. சஹால் மற்றும் குல்தீப் சிறப்பாகச் செயல்படுகின்றனர். ஆனாலும், நான் ஒரு கட்டத்தில் மீண்டும் அணிக்குத் திரும்புவேன் என்று நம்புகிறேன். காரணம், நான் மோசமாக விளையாடியதன் காரணமாக அணியிலிருந்து வெளியேற்றப்படவில்லை” என்றார். அஷ்வின் கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியிலும் 10 ஓவர்கள் வீசி 28 ரன்களுக்கு 3 விக்கெட் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடர்பாக அஷ்வின் பேசுகையில், ``கிடைக்கும் வாய்ப்புகளில் என்ன சாதிக்க முடியும் என்பதைப் பார்ப்பவன் நான். உலகக்கோப்பை என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் விளையாட நினைக்கும் தொடராகும். எனக்கும் அதில் விளையாட வேண்டும்” என்றார்.