Published:Updated:

’மேஜிக் டூ ஹீரோயிஸம்!’ இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் டாப் - 5 தருணங்கள் #ENGvIND

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
’மேஜிக் டூ ஹீரோயிஸம்!’ இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் டாப் - 5 தருணங்கள்   #ENGvIND
’மேஜிக் டூ ஹீரோயிஸம்!’ இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் டாப் - 5 தருணங்கள் #ENGvIND

கோலி, ஆண்டர்சன் ஆகியோரின் ஆதிக்கம், கரன், மொயீன் அலி போன்றவர்களின் ஹீரோயிசம் என பல சிறந்த தருணங்கள், இதை மறக்க முடியாத தொடராக மாற்றியுள்ளன. அவற்றில் டாப் 5 மொமன்ட்ஸ்! #ENGvIND

இந்திய அணி தன் குகைக்குத் திரும்பிவிட்டது. ஸ்விங், பேகம் என்ற அச்சுறுத்தல்கள் இல்லாத ஆசிய ஆடுகளங்களில் அடிபட்ட இலங்கை, பாகிஸ்தான் அணிகளோடு கத்துக்குட்டி ஹாங்காங், ஆப்கானிஸ்தான் அணிகளைப் புரட்டிப்போடத் தயாராகிவிட்டது. ஆனால், இன்னமும் இங்கிலாந்தில் ஏற்பட்ட கறை, இந்திய அணியின் வெள்ளை உடையிலிருந்து அகலவில்லை. "15 ஆண்டுகளில் இந்தியாவின் மிகச் சிறந்த டெஸ்ட் அணி இதுதான்" என்று ரவி சாஸ்திரி சொல்ல, கேப்டன் கோலி அதற்குத் தலையாட்ட, கவாஸ்கர் முதல் பலரும் அதை விமர்சித்துவருகிறார்கள். என்னதான் 4-1 என இந்திய அணி தோற்றிருந்தாலும், பல தவறுகள் செய்திருந்தாலும், இங்கிலாந்து மண்ணில் அவர்களுக்கு ஈடுகொடுத்து விளையாடியது என்பதை மறுத்திட முடியாது. கோலி, ஆண்டர்சன் ஆகியோரின் ஆதிக்கம், கரன், மொயீன் அலி போன்றவர்களின் ஹீரோயிசம் என பல சிறந்த தருணங்கள், இதை மறக்க முடியாத தொடராக மாற்றியுள்ளன. அவற்றில் டாப் 5 மொமன்ட்ஸ்! #ENGvIND

அலெஸ்டர் 'ஆசம்' குக்! 

எத்தனை சாதனைகள் செய்திருந்தாலும், அந்திமக் கால பெர்ஃபாமன்ஸ்தான், வெளியேறும்போது அவர்களுக்கான உண்மையான மதிப்பைக் கொடுக்கும். எத்தனையோ வீரர்கள், வெறும் சம்பிரதாயத்துக்காக எழுந்து நின்று கைதட்டி வழியனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அலெஸ்டர் குக் ஓய்வு முடிவை அறிவித்தபோது, இதுவும் அப்படியான ஒரு வழியனுப்புதலாகத்தான் இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குக் தன் கடைசி அத்தியாத்தில், அனைவரின் மரியாதையையும் அவரே சம்பாதித்து வெளியேறிவிட்டார். கென்னிங்டன் ஓவலில் அவர் ஆடியதைப் பார்த்தபோது... கும்பிளே, ஹர்பஜன், இர்ஃபான் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு நாக்பூரில் சதமடித்த அந்த 22 வயது இளைஞனின் அதே ஆட்டம்! தன் முதல் போட்டியைப் போலவே அவ்வளவு நிதானமாக, அவ்வளவு உறுதியாக குக் ஆடிய ஆட்டத்தை, நிச்சயம் இங்கிலாந்து ரசிகர்கள் மிஸ் செய்வார்கள். சந்தேகமேயில்லை - குக் கடைசியாக வெளியேறிய அந்தத் தருணம்தான் இந்த டெஸ்ட் தொடரின் மிகச் சிறந்த தருணம். 

நான் ராஜா... எங்கேயும் நான் ராஜா..! 

வருடம் முழுதும் ரன் அடித்தால் மட்டும் உலகம் ஒருவரை சிறந்த பேட்ஸ்மேனாக ஏற்றுக்கொள்ளாது. உலகின் அனைத்து பந்துவீச்சுக்கு எதிராகவும், அனைத்து வகையான ஆடுகளங்களிலும், மூன்று வகை ஃபார்மட்களிலும் ராஜ்ஜியம் செலுத்தவேண்டும். அப்போதுதான் அவர் கிரிக்கெட்டின் ராஜா. இன்றுவரை கோலி அந்த மகுடத்தை அணிய முடியாமல் இருந்ததற்கு இங்கிலாந்து ஆடுகளங்களின் பங்கு அதிகம். இந்திய மண்ணில், இரட்டைச் சதங்களாக அடித்தபோதும், ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் தனி ஆளாய்ப் போராடியபோதும் 'இங்கிலாந்துல அடிக்கலயே' என்ற சொல் மட்டும் அவரை விட்டபாடில்லை. ஆனால், அதை உடைத்தெறிய, மன்னராட்சியைக் கொண்டாடும் ஊரில் கிரிக்கெட்டின் அரசனாக முடிசூட, கோலி எடுத்துக்கொண்டது ஒரே இன்னிங்ஸ்! எட்க்பாஸ்டன் டெஸ்ட்டில், ஆண்டர்சனின் அச்சுறுத்தலை டேவிட் மாலன் தயவில் சமாளித்து, தன் ஃபேவரிட் கவர் டிரைவ்களைக்கூட மறந்து, இங்கிலாந்தில் தன் முதல் டெஸ்ட் சதத்தை அவர் அடித்ததும்... அதைக் கொண்டாட கால்களை அகட்டி, கைகளை விரித்து, ஆக்ரோஷமாக கர்ஜித்ததும்... இந்தத் தொடரில் மட்டுமல்ல, கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையிலும் மறக்கமுடியாத ஒரு தருணம். 

கிங் ஆஃப் ஸ்விங்!

கவர் டிரைவ்களும், ரிவர்ஸ் ஸ்வீப்களும் மட்டுமே இந்தத் தலைமுறை கிரிக்கெட் ரசிகர்கள் ரசிக்க மறந்த மகத்தான வீரன் ஜேம்ஸ் ஆண்டர்சன். இப்போது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த ஃபாஸ்ட் பௌலர். 36 வயதிலும் இன்னும் கொஞ்சம் கூட விக்கெட் வேட்கை குறையாமல் பயணித்துக்கொண்டிருக்கிறார். முதல் டெஸ்ட்டில் கோலியை வீழ்த்த தொடர்ந்து 15 ஓவர்கள் வீசியபோது, கொஞ்சம் கர்வம் தலைகாட்டியது. ஆனால், தன் நண்பன் குக் இருக்கும்போதே அந்தச் சாதனையை நிகழ்த்தவேண்டும் என ஐந்தாவது டெஸ்ட்டின் கடைசி நாளில் தொடர்ச்சியாகப் பந்துவீசியபோது 'அட அந்த ஒரு விக்கெட் கிடைச்சிடாதா' என்று நமக்கே ஃபீலாகியது. ஷமியின் அந்த விக்கெட்டை வீழ்த்தி குக்கோடு அதை அவர் கொண்டாடிய தருணம் இங்கிலாந்து ரசிகர்களுக்கு எவர்கிரீன். ஏனெனில், இனி அப்படி இரு ஜாம்பவான்களை ஒரே ஃபிரேமில் இங்கிலாந்து பார்க்க வாய்ப்பில்லை!

தி மொயீன் மேஜிக்!

இந்தத் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டபோது 'டெஸ்ட் மேட்ச் ஆடமாட்டேன்' என்று சொல்லியிருந்த அடில் ரஷீத் சேர்க்கப்பட்டிருந்தது பெரும் ஆச்சர்யமாக இருந்தது. முதல் 3 போட்டியிலும் அவர்தான் இங்கிலாந்து அணியின் ஒரே ஸ்பின்னராகக் களமிறக்கப்பட்டார். மூன்றாவது டெஸ்ட்டில் தோற்றதால், ஒருவழியாக சௌதாம்ப்டன் போட்டியில் வாய்ப்பு பெற்றார் மொயீன் அலி. முதல் இன்னிங்ஸில் கம்பீரமாக இந்திய அணி பேட்டிங் செய்துகொண்டிருக்க, மொத்தமாகச் சுருட்டி வீசினார். 181 - 4 என்றிருந்த இந்திய அணியின் ஸ்கோர், நான்கே ஓவர்களில் 195- 8 என்றானது. 100 ரன்களுக்கு மேல் சென்றிருக்கவேண்டிய இந்திய அணியின் முன்னிலையை 27 ரன்களாகக் குறைத்து, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு மிகமுக்கியக் காரணமாக அமைந்தார் மொயீன். அவரது ஆஃப் ஸ்பின்னை இரண்டாவது இன்னிங்ஸிலும் தாக்குப்பிடிக்க முடியாமல் காணாமல் போனது இந்தியா.

'சாம்' ஆண்ட்ரியாஸ் ஃபால்ட்!

இந்தத் தொடரில் ஆண்டர்சன், ரூட், ஸ்டோக்ஸை விடவெல்லாம் இந்திய அணியைச் சோதித்தது சாம் கர்ரன்தான்! எட்க்பேஸ்டன் டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸில் இஷாந்தின் அற்புத ஸ்பெல்லில் மூழ்கிக்கொண்டிருந்த இங்கிலாந்து அணியை, தனி ஆளாக வெற்றிக்கு அழைத்துச் சென்றார். லைன் அன்ட் லென்த்தில் மிரட்டிய இந்திய பௌலர்களைத் தன் அதிரடியால் மிரட்டி 65 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார் சாம். டெய்ல் எண்டர்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து 20 ஓவர்கள் களத்தில் நின்று இந்தியாவுக்குத் தண்ணி காட்டினார். அந்தப் போட்டியில் மட்டுமல்ல, சௌதாம்ப்டன் டெஸ்ட்டிலும் அதேதான்! முதல் இன்னிங்ஸிலேயே 86 ரன்களுக்குள் 6 விக்கெட் இழந்து தடுமாறிய அணியை, இந்த முறை தன் நிதான ஆட்டத்தால் கரைசேர்த்தார். அந்த இரண்டு போட்டிகளிலும் சாம் கர்ரன் என்ற ஒற்றை வீரரை சமாளிக்க முடியாத ஒற்றைக் காரணம் - தொடரை இந்தியாவுக்குப் பாதகமாக்கியது. இந்தியாவுக்கும், இந்தத் தொடர் வெற்றிக்கும் இடையில் நின்றது இந்த 20 வயது வீரன்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு